Published : 18 Oct 2015 05:06 PM
Last Updated : 18 Oct 2015 05:06 PM
கடந்த வார ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ஜே. லூர்துவின், ‘தோள் கொடுக்கும் தோழமை’ கட்டுரையைப் படித்ததும் இதை எழுதத் தோன்றியது. பல வருடங்களாக என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த விஷயத்தைத்தான் தோழி லூர்துவும் எழுதியிருந்தார். அதனால் நானும் என் தோழிகளைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டேன்.
நான் மதுரை நிர்மலா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 1977-ம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன். என்னுடன் பயின்ற என் உயிர்த்தோழிகள் அமுதவள்ளி, பேபி விஜயா, செல்வ சுந்தரி, புஷ்ப லதா, எழிலரசி யாரையும் இந்த 38 வருடங்களாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. மதுரையில்தான் 25 வருடங்களாக இருக்கிறேன். இருந்தும் ஒருமுறைகூட அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. இன்றைக்கு இருப்பது போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், கடிதம் எழுதக்கூட தோன்றாமல் இருந்தை என்னவென்று சொல்வது? இதைப் படிக்கும் என் தோழிகளில் யாராவது என்னைத் தொடர்புகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
பெண்கள் நாமே நம்மைச் சுற்றி வேலியை அமைத்துக்கொண்டு, யாரோ நம்மைக் கட்டிவைத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். நியாயமான உணர்வுகளுக்குத் தானாக மதிப்பு கிடைக்காவிட்டாலும், கேட்டாவது பெறத்தான் வேண்டும். என் பால்ய கால தோழிகளைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
- வசந்தி, மதுரை.
மனைவிக்கு உதவுகிறேன்!
அக்டோபர் 4-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ‘கேளாய் பெண்ணே’ பகுதியில் சென்னை தோழி குமுதா அவர்கள், ‘அனைத்துக்கும் கணவரைச் சார்ந்திருக்கலாமா?’ என்று கேட்டிருந்தது மிகவும் அவசியமான ஒரு விஷயம். அவருக்குப் பதிலளித்த உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர் சொல்வதைப் போல பெண்கள் தங்கள் கணவரிடம் மனம்விட்டுப் பேசினால், அவர்கள் கண்டிப்பாகத் தங்கள் மனைவிக்கு வேண்டியதைச் செய்வார்கள். மற்ற வீட்டு வேலைகளிலும் உதவுவார்கள்.
எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மிக எளிமையான காலை உணவுடன் தொடங்கும். நான் பிரெட் வாங்கி வந்து, பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய காய் சமைத்துவிடுவேன். பிறகு நான், என் மனைவி, மகள் மூவரும் பிரெட்டுடன் காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம். பிறகு பதினோரு மணிக்கு முடிந்தால் நானோ அல்லது என் மனைவியோ குக்கர் வைத்து விடுவோம். நான் ஹோட்டலிலிருந்து கூட்டு அல்லது அவியல் வாங்கிவந்தால் மதிய உணவும் முடிந்தது. இரவுக்கு மட்டும் என் மனைவி ஏதாவது எளிமையான டிபன் செய்வார்.
முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமை வேலையைக் குறைத்து விடுவோம். ஆண்களிடம் பேசிப் புரியவைத்தால்தானே, பெண்களின் வேலையில் உள்ள கஷ்டம் புரியும்? தவிர வீட்டு வேலை விஷயத்தில் பல ஆண்கள் சிறிது மந்த புத்திக்காரர்கள். அதனால் பெண்கள்தான் அவர்களை மாற்றுவதற்கு முயல வேண்டும்.
- பி.மது, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment