Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM
“5 ஆண்டு ஆட்சியில் ஆண்களும் பெண்களும் சமமாக ஆட்சிபுரியும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்று துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைவதற்கான பன்னாட்டு நாள் தொடர் கருத்தரங்கு சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, “பெண்களது திறமைக்கு உரிய இடமளித்து அவர்களை உயர்த்திவிட்டால், தாங்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமோ என்று குறுக்குப் புத்தி மேலோங்கும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் பெருகிடக் காரணமாக அது அமைந்துவிடுகிறது.
பெண் சமூகத் துக்கு எதிரான இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டியதும், அதைச் சீர்படுத்தி பெண்களுக்கு, நீதி பெற்றுத் தர வேண்டியதும் நாகரிக உலகின் கடமை. அரசுக்கு 5 ஆண்டு பதவிக்காலம் இருக்கிற நிலையில், ஏன் ஆண்கள் 2 ½ வருடம், பெண்கள் 2 ½ வருடம் இந்நாட்டை ஆளக் கூடாது? இந்த நிலையை இந்திய அரசியல் சாசனத்தின் மூலமாக அவர்களுக்கு வழங்கினால், ஆணுக்குப் பெண் நிகர், சமம் என்கிற நிலையைச் சமுதாயத்தில் அத்தனை நிலைகளிலும் கொண்டுவருகிறபொழுது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும்.” என்றார்.
முரண்கள்
இந்திய அரசியல் சாசனமும், ஆண்-பெண் பாகுபாடற்ற சமத்துவத்தை உறுதிசெய்வதையே நோக்கமாகக்கொண்டுள்ளது. இருப்பினும், நடைமுறையில் இந்த சமத்துவம் இன்றைக்கும்கூடக் கைகூடவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே பெண்களின் அரசியல் பங்களிப்பு பற்றிய விவாதங்களும் அது குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதன் பின்னர் அந்த விவாதங்கள் காற்றில் கரைந்துவிடுகின்றன. பெண்களின் நிலை குறித்துப் பெரிய பேச்சுகள் எதுவும் எழுவதில்லை. மக்கள்தொகையில், பெண்களின் அளவை ஒப்பிடும்போது அதிகாரத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரப் பதவிகளில் ஆண்கள் அளவுக்குப் பெண்கள் பங்கு வகிக்கவில்லை என்பதே உலக நிலை.
தேர்தலில் வென்ற பல பெண்களுக்கு கடமை ஆற்றும் பொறுப்பு சாதியின் பெயராலோ பாலின சமத்துவமின்மை காரணமாகவோ இப்போதும் மறுக்கப்பட்டுவருகிறது. அது மட்டுமல்லாமல் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டுகள், கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தத்தை சுதந்திர நாளன்று கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்டதும், கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்ட நிகழ்வும். அதேபோல் அரசியல் கட்சிகள் சார்பில் உள்ளாட்சிப் பொறுப்புகளில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களது குடும்ப ஆண்களே அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடிவெடுப்பதும் தொடர்கிறது.
இது போன்ற நிலைமைகளை, அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பதில்லை. தடுத்து நிறுத்தச் செயல்படுவதும் இல்லை. அரசியல் சாசனத்தைப் போன்றே பொது மக்களான நாமும் மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். அவ்வப்போது பெண்ணுரிமை, பெண் விடுதலை, சமத்துவம், இட ஒதுக்கீடு குறித்துப் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. ஆனால், அரசியல் சாசனம் உறுதியளிக்கும் சமத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்களும்/இடைவெளியும் பாரதூரமாக இருக்கிறது.
பாதை அமைத்த பெண்கள்
மற்றொருபுறம் இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், பேநசீர் பூட்டோ, ஷேக் ஹசீனா, ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல், நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டெர்ன் எனப் பல பெண் தலைவர்கள் உலக அளவில் வெற்றிகரமான ஆட்சியளார்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள், செயல்பட்டும் வருகிறார்கள். இந்திய அளவிலான அரசியல் ஆளுமைகள் என்று எடுத்துக்கொண்டால் சோனியா காந்தி, மமதா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி, ஷீலா தீட்சித், பிருந்தா காரத், வசுந்தரா ராஜே, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரைப் பட்டியலிடலாம். பெண்களின் ஆற்றலை உலகம் அறியும்படி இவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
ஏமாற்று வேலைகள்
பெண்கள் தம்மால் இயன்றவரை, தமக்கு வேண்டியதைப் பெறும் முயற்சியில் முழுவீச்சுடன் ஈடுபடுகிறார்கள் என்பதை தற்போது அதிகரித்திருக்கும் பெண்களின் வாக்களிப்பு சதவீதம் உணர்த்துகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏறத்தாழ 22 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களைவிட, பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாகப் பெண்களின் வாக்கு இருப்பதால், பெண்களைக் கவரும் விதமாக அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றன. பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு பற்றித் தேர்தல் அறிக்கைகள் தவறாமல் பேசுகின்றன. ஆனால், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதா மக்களவையில் இன்னும் நிறைவேறவில்லை. அதற்கும் நாட்டிலுள்ள பல கட்சிகள் முயற்சி எடுப்பதில்லை. சட்டம் நிறைவேறாவிட்டாலும், 2019 மக்களவைத் தேர்தலில் ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களில் 33 சதவீதத்தைப் பெண்களுக்கு ஒதுக்கின.
மாறாக, வெறும் வாக்குறுதிகளை வழங்கும் வேலைகளை மட்டுமே பெரும்பாலான கட்சிகள் தொடர்கின்றன. வாய்ச்சொல்லை வீசுவதற்கு மாறாக, அனைத்து அதிகார நிலைகளிலும் பெண்களுக்கு உரிய இடத்தை உறுதிசெய்வதற்கான செயல்திட்டங்களைத் திட்டவட்டமாகச் செயல்படுத்துவதை அரசியல் கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் தாமதப்படுத்துவது, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் சீர்குலைப்பதாகவே அமையும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT