Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைத் தன் வெற்றிக்கான களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சுபத்ரா. அதில் ஆரோக்கியமும் அக்கறையும் இருப்பதால்தான் தன்னால் உயர முடிந்தது என்கிறார் அவர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபத்ரா, பொறியியல் முடித்துவிட்டுத் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். அப்பா ராமமூர்த்தி ஆசிரியர் என்பதால் மகளும் அதே பணியில் இருப்பதையே விரும்பினார். ஆனால், சுபத்ராவின் மனமோ வேறு வகையில் சிந்தித்தது.
வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கல்வியைப் பயிற்றுவித்தவர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் விருப்பத்துடன் இருந்தார். பிறகு ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகப் பணியாற்றியபோது தான் பயணம் செல்ல வேண்டிய பாதை எதுவென சுபத்ராவுக்குத் தெளிவானது. ஆனால், வீட்டினரிடம் எதிர்ப்புதான் கிடைத்தது.
“தேயிலை பறிப்பதால் கிடைக்கும் சம்பளத்தைப் பேருந்து கட்டணத்துக்குச் செலவிடும் மாணவிகளைப் பார்த்தபோது, ஏதாவதொரு தொழில் தொடங்கி, சிலருக்காவது வேலைவாய்ப்பைத் தர வேண்டும் என்று தோன்றியது. அது மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய தொழிலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு தைராய்டு பிரச்சினை இருந்தது. இரு முறை கருச்சிதைவு ஏற்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் மகன் பிறந்தான். அதனால், மக்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் சிறுதானிய உணவை மதிப்புக்கூட்டி விற்க முடிவெடுத்தேன்” என்கிறார் சுபத்ரா.
தெளிவு தந்த ஆராய்ச்சி
தொழிலைத் தொடங்கும்முன் அதற்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமே. மைசூருவில் உள்ள ‘மத்திய உணவுப் பொருள் ஆராய்ச்சி நிறுவன’த்தில் பயிற்சிபெற இணைந்தார். சிறுதானியங்களை மாவாகப் பொடிக்கும்போது அவற்றிலிருந்து 40 சதவீதச் சத்துகள் அழிவதைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. மாவரைக்கும் இயந்திரங்களின் அதிவேக சுழற்சியே அதற்குக் காரணம். அதனால், அவற்றை ஊறவைத்து, மெதுவாகச் சுழலும் இயந்திரங்களில் அரைத்தபோது 95 சதவீதச் சத்துகள் அழியவில்லை. அதனால், சிறுதானியங்களில் இட்லி, தோசை மாவை விற்க முடிவெடுத்தார்.
ஆனால், அங்கிருந்த முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், அந்த முடிவில் இருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். “ஊறவைத்து அரைக்கும் மாவைச் சில நாள்களிலேயே பயன்படுத்திவிட வேண்டும். அவற்றை நாள்தோறும் தயாரிக்க வேண்டும். சுத்தப்படுத்துவதும் அவசியம். இல்லை யெனில் மாவு கெட்டுவிடும். இவற்றுக்கு நிறைய செலவாகும்” என்று அவர் எச்சரித்தார். லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, நஷ்டத்துக்கு உத்தரவாதம் என்றார்.
ஆனால், உலர் மாவு வகைகள் சந்தையில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து மாறுபட்டு நான் புதுமையாகச் செயல்பட நினைத்தேன். சத்தும் அழியக் கூடாது, தனித்துவமாகவும் இருக்க வேண்டும். அதனால், சவாலைச் சந்திக்கத் துணிந்தேன்” என்று சொல்லும் சுபத்ரா, 2016இல் தன் நிறுவனத்தைத் தொடங்கினார். உற்பத்திப் பொருள்களுக்கான செலவு, கணக்கிட்டதை விட இரண்டு மடங்கு அதிகமானது. மீண்டும் குடும்பத்தினரின் எதிர்ப்பு. பிறகு, கணவர் கார்த்திகைவாசனைச் சம்மதிக்கவைத்துத் தேவையான கருவிகளை வாங்கினார்.
கறுப்பால் விளைந்த வெறுப்பு
ஒருவழியாகத் தயாரிப்பு வேலை நடந்துவிட்டாலும் தங்களின் சிறுதானிய மாவு வகைகளைச் சந்தைப்படுத்துவதற்கு அவர் திண்டாடிப் போனார்.
“கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து திட்டமிடுவதைவிடக் களத்துக்குச் சென்றால்தானே, வாடிக்கையாளர் களின் தேவையைத் தெரிந்துகொள்ள முடியும்? அதனால் எங்கள் மார்க்கெட்டிங் குழுவினருடன் நானும் சென்றேன். நாங்கள் சந்தித்த கடையின் உரிமையாளர் கால் மணி நேரத்துக்கும் மேல் எங்களை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. நாங்களும் எவ்வளவோ பேசிப் பார்த்தோம். அவர் காதில் வாங்குவதாகவே இல்லை. மாவு பாக்கெட்டைப் பார்த்ததும், ‘வெள்ளை வெளேர்னு இட்லி மாவு கொடுத்தாலே வாங்க மாட்டாங்க. இதுல கறுப்பு நிறத்துல இட்லி மாவை எப்படி வாங்குவாங்க’ என்றார். ராகி இட்லியின் படத்தைப் பார்த்துத் தான் அப்படிச் சொன்னார். பிறகு, அரை மனதாக சில பாக்கெட்டுகளை வாங்கி வைத்தார். விற்கவில்லை என்றால் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொன்னார். இப்படித்தான் எங்கள் தொழில் தொடங்கியது.
மூன்று ஆண்டுகளுக்குப் பயங்கர மேடு பள்ளங்களைச் சந்தித்தோம். ஆனால், பின்வாங்கவே இல்லை. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பங்குதாரராகச் சேர்ந்தார் பாலசுப்பிரமணியம் ஐயா. 60 வயதைக் கடந்த அவரது உதவி, எங்களுக்கு நம்பிக்கை தந்தது. முழுவீச்சில் செயல்பட்டோம். எட்டு மணி நேர வேலையையும் கைநிறைய வாங்கிய சம்பளத்தையும் விட்டுவிட்டு, நேரம் காலம் பார்க்காமல் நான் ஓடுவதைப் பார்த்து என் அப்பாவுக்குக் கோபம். நல்லா படிச்ச பொண்ணு இப்படிப் புத்திமாறிப் போயிடுச்சேன்னு புலம்பினார்” என்று புன்னகைக்கிறார் சுபத்ரா.
ருசிக்குக் கிடைத்த வரவேற்பு
வீட்டினரின் கவலை நிறைந்த புலம்பலைத் தன் வெற்றியால் மகிழ்ச்சியாக மாற்றினார் சுபத்ரா. கல்லூரி விடுதிகள், நட்சத்திர உணவகங்கள் என்று தேடித் தேடித் தங்கள் பொருள்களைப் பற்றி எடுத்துரைத்தார். தன் தயாரிப்புகளைப் பற்றி எடுத்துச்சொல்ல கிடைக்கிற சிறு வாய்ப்பையும் அவர் தவறவிடவில்லை. தங்களது மாவில் செய்யப்படும் தோசை இப்படி இருக்கும் என்று விவரிப்பதைவிட, தோசையாகவே செய்துகொடுத்திருக்கி றார்கள். காகித விளம்பரங்களைவிட வாய்மொழி விளம்பரங்களே இவருக்குக் கைகொடுத்தன. இந்த நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர் களுக்கு இப்படி சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
“இந்த அணுகுமுறை தான் எங்களுக்கு வெற்றி தேடித் தந்தது. இப்போது 80 வகையான சிறுதானிய மாவு வகைகளைத் தயாரிக்கிறோம்” என்கிறார் சுபத்ரா. சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால் பலரது வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்காக மத்திய வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் நிதிநல்கையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது.
“இந்தியாவில் கரோனா பரவலுக்குச் சில நாள் முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எங்கள் நிறுவனத் தயாரிப்புகள் குறித்த தகவல்களைச் சமர்ப்பித்துவிட்டு வந்தோம். அடுத்த சில நாள்களில் எங்கள் நிறுவனத்துக்கு ‘ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா’ (RKVY) திட்டத்தின்கீழ் 23 லட்சம் ரூபாயை அரசு அறிவித்தது இனிய அதிர்ச்சி. இந்தத் திட்டத்தின் அதிகபட்ச தொகை 25 லட்சம். இதுவரை இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் நாங்கள் பெற்ற அளவுக்கு நிதிநல்கை பெற்றதில்லை.
விவசாயிகளுக்கு நாங்கள் கொடுக்கும் வாய்ப்புக்கு எங்களுக்குக் கிடைத்த பரிசு இது” என்கிறார் சுபத்ரா. கரோனா காலத்துக்குப் பிறகு தங்கள் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார். இவர்களுடைய பணியாளர்களில் ஓட்டுநர்களைத் தவிர மற்ற அனைவருமே பெண்கள். அவர்களில் இருவர் மாற்றுத் திறனாளிகள். “இன்னும் நிறைய பெண்களுக்கு, குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு” என்று சொல்கிறார் சுபத்ரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT