Published : 04 Oct 2015 01:55 PM
Last Updated : 04 Oct 2015 01:55 PM
உலகத் தலைவரோ உள்நாட்டுத் தலைவரோ யாராக இருந்தாலும் ஆதரவாளர்கள் இருப்பதைப் போலவே மறுப்பாளர்களும் இருக்கத்தான் செய்வார்கள். காந்தியும் அதற்கு விதிவிலக்கல்ல. காந்தி என்றதுமே பலரது நினைவுக்கும் வரும் சித்திரம் என்ன? ஒடுங்கிய தேகத்துடன் கோலூன்றியபடி விடுவிடுவென நடக்கும் உருவமோ அல்லது காலை நீட்டியபடியே ராட்டை சுற்றும் உருவமோ அல்லது குழந்தைகளிடம் சிரித்துப் பேசும் உருவமோ அல்லது குண்டடிபட்டுத் தள்ளாடிக் கீழே சரியும் உருவமோ நினைவுக்கு வரலாம். இந்தச் சித்திரங்களை உற்று நோக்கினால் அங்கே காந்தி மட்டுமல்ல, அவரைச் சுற்றி நின்றிருக்கும் ஏராளமான பெண்களும் நம் கண்களுக்குப் புலப்படுவார்கள். காந்தி குறித்த அனைத்து விவாதங்களிலும் சித்திரங்களிலும் பெண்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனில் பெண்கள் எப்படிப் பார்த்தார் காந்தி?
பெண் விடுதலையே தேச விடுதலை
காந்திக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தேச விடுதலையோடு பெண்களின் விடுதலைக்காகவும் காந்தி குரல் கொடுத்தார் என்பது மறுக்க முடியாதது. பெண்களுக்கு விடுதலை கிடைக்காத தேச விடுதலை, முழுமையான விடுதலை இல்லை என்று அவர் கருதினார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் களத்தில் காந்தியின் வரவுக்கு முன்பே பெண்களின் பங்களிப்பு இருந்தது என்றாலும் காந்தியின் வரவுக்குப் பிறகுதான் பெருவாரியான பெண்கள் பொதுவெளிக்கு வந்தார்கள். வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெண்களின் பங்களிப்பு தேவை என்ற காந்தியின் மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் பெண்கள் அலையலையாகச் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றனர். பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். பொதுக் கூட்டங்களில் இப்படி ஆயிரக் கணக்கான பெண்கள் பங்கேற்பதுதான் பெண் விடுதலையின் ஆரம்பம் என்று தன் மேடைப் பேச்சில் குறிப்பிடுகிறார் காந்தி. கூடவே, “என் வேலையில் நீங்கள் உதவிசெய்யவில்லை என்றால் என்னால் எதுவும் பெரிதாகச் செய்துவிட முடியாது. வாழ்க்கை வீணானதாகக் கருதுவேன்” என்கிறார்.
பெண்களால் சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும் அவர்களால் அமைதியான வழியில் மாபெரும் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று நம்பினார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் அதையே வலியுறுத்தினார்.
“பெண்கள் ஆடம்பர ஆடைகளைத் தவிர்த்து கதர் ஆடைகளை அணிய வேண்டும். தாங்கள் அணிந்திருக்கும் வளையல், கொலுசு, காதணி போன்ற ஆபரணங்களைக் கொடுத்து உதவினால் உணவின்றி வாடும் இந்திய மக்களுக்கு அது உதவியாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.
மனைவியே மதிப்புமிக்க தோழி
ஆண்களுக்குக் கிடைக்கிற எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் காந்தி தீர்மானமாக இருந்தார்.
இங்கே ‘அர்த்தநாரி’ என்னும் கோலம், ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்றும் அவர் சொன்னார். ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்திய அதே நேரத்தில் திருமணத்துப் பிறகு பெண்கள் வெறும் அழகுப் பதுமைகளாகவும் உயிரற்ற ஜடப் பொருட்களாகவும் நடத்தப்படுவதைக் கண்டித்தார்.
“ஆண்கள் தங்கள் மனைவியை மதிப்புமிக்க தோழனாக நடத்த வேண்டும். படிப்பறிவில்லாத மனைவி, கல்வி பயில உதவ வேண்டியது கணவரின் கடமை” என்றும் அவர் வலியுறுத்தினார். விதவை மறுமணத்தை ஆதரித்த அவர், திருமண முறிவுகளையும் வரவேற்றார். “திருமணம் என்பது ஒரு ஒழுக்க நிலை. அதில் நெறி தவறும்போது அந்த உறவை முறித்துக்கொள்வதில் தவறு இல்லை. பெண்களை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தினால் அவர்கள் துணிந்து அந்த உறவை விட்டு வெளியேற வேண்டும்” என்று ‘யங் இந்தியா’ இதழில் எழுதியிருக்கிறார்.
குழந்தைத் திருமணம் என்னும் கொடுமை
சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி நாடே பயணித்துக்கொண்டிருந்தபோது குழந்தைத் திருமணத்தையும் இளம் விதவைகளையும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களையும் கண்டுகொள்ள அதிகம் பேர் இல்லை. ஆனால் காந்தி குழந்தைத் திருமணத்தைக் கடுமையாகச் சாடினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
குழந்தைத் திருமணத்தின் கொடுமை குறித்து ‘யங் இந்தியா’ இதழில் காந்தி இப்படி எழுதுகிறார்:
“சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் சமஸ்கிருத நூல்களை மேற்கோள் காட்டி இந்த அநீதியான வழக்கத்தைப் புனிதப்படுத்த முடியாது. சிறு வயதில் தாய்களான பல குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டழிந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். இந்தக் குழந்தைப் பருவத் திருமணத்தின் கொடுமைகளோடு, குழந்தைப் பருவ விதவை நிலையும் சேரும்போது இந்தச் சோகம் முழுமையாகிறது.”
தேவதாசி முறை ஒழிப்புக்கு ஆதரவு
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியபோதும், சென்னை மாகாண சட்டசபையின் ஒரு தீர்மானத்துக்கு மட்டும் தான் ஆதரவளிப்பதாகச் சொன்னார். அந்தத் தீர்மானம் என்ன தெரியுமா? அப்போதைய சென்னை மாகாண சட்டசபை துணைத் தலைவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் முன்வைத்த ‘தேவதாசி ஒழிப்புச் சட்டம்’.
“தேவதாசி வழக்கம் ஒரு பெருங்குற்றம். இந்தக் குறையை நீக்கப் பெண்கள் வேலை செய்தாலே தவிர, என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான். நாம் நமது சகோதரிகளைக் கொடிய வேட்கைக்குப் பயன்படுத்திவிட்டு அதற்குக் கடவுள் பெயரை வைப்பது நாம் இழைக்கும் இரட்டைக் குற்றம். சமூகத்தின் வேரையே இதைப் போன்ற கொடுமைகள் அரித்துவிடும்” என்று மாயவரத்தில் காந்தி ஆற்றிய சொற்பொழிவில் சொல்லியிருக்கிறார். (ஆதாரம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, வெளியீடு: அவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளை, சென்னை).
“பெண்ணடிமை, தீண்டாமை இரண்டும் ஒழியாதவரை இந்தியாவின் சுதந்திரம் முழுமை பெறாது” என்று காந்தி சொல்வதுபோல ‘காந்தி’ திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. சமூகத்தின் அடித்தட்டில் இருக்கிறவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் காந்தி தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார். வரதட்சணை என்கிற பேரவலத்தை வேரறுக்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். “வரதட்சணையை ஒழிப்பதன் வாயிலாக ஜாதிய வேறுபாடுகளையும் களையலாம்” என்று ‘ஹரிஜன்’ இதழில் எழுதியிருக்கிறார் காந்தி.
அரசியலில் பெண்கள்
பெண்கள் அரசியல் அறிவு பெற்று நாட்டையாளும் அதிகாரம் பெற வேண்டும் என்றும் காந்தி விரும்பினார். “பெண்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத அல்லது அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவமற்ற சட்டசபையை நான் நிச்சயம் புறக்கணிப்பேன்” என்று 1931-ல் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தி அறிவித்தார். அதே சமயம் பெண்களுக்கென்று தனித் தொகுதி அமைப்பதை அவர் விரும்பவில்லை. பெண்கள் என்பதாலேயே அவர்கள் தனிச் சலுகை பெறக் கூடாது. மாறாக ஆண்களுக்கு நிகராக தகுதியுள்ள பெண்கள் தேர்தலில் இடம் பெற வேண்டும் என்றார். அதன் விளைவாக முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே கொண்ட சட்டசபை அமைந்தாலும் தனக்கு மகிழ்ச்சியே என்று ‘ஹரிஜன்’ இதழின் கேள்வி - பதில் பகுதியில் பதில் அளித்திருக்கிறார் காந்தி.
சமூகத்தில் சரிபாதி இனமான பெண்களின் விடுதலையும் முன்னேற்றமுமே நாட்டின் விடுதலையும் முன்னேற்றமும் என்று உறுதியாக நம்பினார் காந்தி. “நள்ளிரவில் நகைகள் அணிந்த பெண் என்றைக்கு எந்த பயமும் இல்லாமல் நடமாட முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர தினம்” என்று காந்தி சொன்ன வார்த்தைகளின் அடிநாதம் என்ன? அது பெண்கள் மீதான வன்முறைகள் தீர்ந்துபோன திருநாளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT