Last Updated : 25 Oct, 2015 01:45 PM

 

Published : 25 Oct 2015 01:45 PM
Last Updated : 25 Oct 2015 01:45 PM

பெண் எனும் பகடைக்காய்: பெண் என்பவள் வெறும் உடல்தானா?

‘மலரினும் மெல்லிது காமம்’ என்று இலக்கியங்கள் சுட்டும் வரி பிற மிருகங்களிலிருந்து மனிதன் எவ்வளவு மேம்பட்டவன் என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டது. ஆனால், மனிதன் தன்னை மிருகம்தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்.

அதனால்தான் பாலியல் பலாத்கார இழிவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நாமும் அது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், இந்த அவலம் மட்டும் நிறுத்தப்படவில்லை. இந்த முறை சின்னஞ் சிறிய இரண்டு பெண் குழந்தைகள். இரண்டரை வயதே நிரம்பிய சின்னஞ்சிறு மலர், பிய்த்து எறியப்பட்டிருக்கிறது. தங்கள் தேவை தீர்ந்த பின் அந்தக் குழந்தையைப் புதரில் வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதே போலவே மற்றொரு ஐந்து வயது சிறுமி.

இவை நடந்திருப்பது மீண்டும் தலைநகர் டெல்லியில். டெல்லி காவல்துறையோ மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்காமல் ‘இயங்கி’க் கொண்டிருக்கிறது. இக் குற்றங்களில், இதனைக் குற்றம் என்ற சிமிழுக்குள் அடைப்பதே சரிதானா என்றும் புரியவில்லை. கொடுமை என்று கூறலாமா? இல்லை, சித்திரவதை என்பதுதான் சரியாக இருக்கும். போர்க் காலங்களில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள்!

குற்றவாளிகளிலும் மேஜர், மைனர் என்று இரண்டு பிரிவு. ஒரே குற்றத்தை இவர்கள் செய்திருந்தபோதிலும் வயதைக் காரணம் காட்டி மைனர் பிரிவு தண்டனைக் குறைப்பு பெறுவது இங்கு கவனிக்கத்தக்கது. நிர்பயா வழக்கில் ஒரு மைனர் இருந்தாரென்றால், தற்போது இரண்டரை வயதுக் குழந்தையைப் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியவர்கள் இருவருமே பதினெட்டு வயதுக்குட்பட்ட மைனர்கள்தான் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

கற்பனை செய்வதுகூடக் கடினமாக இருக்கிறது. 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறார் என்றால் இவர்கள் எப்படி சிறார் ஆவார்கள்? விலங்கினங்களில்கூட சில கட்டுப்பாடுகள் உண்டு. பிள்ளைக் கறி கேட்கும் இந்தக் காம வல்லூறுகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

பெண் உடல் என்றால் சித்திரவதைக்கானது. ஆணுடலில் வலு இருந்துவிட்டால் போதும். பெண் உடலின் மீதான உரிமையை சந்தர்ப்பம் பார்த்தோ அல்லது வலுவான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டோ அத்துமீறி எடுத்துக்கொள்ளலாம். பதினெட்டு வயது நிரம்பாத சிறுவனாக இருந்தாலும் அவனும் இத்தகைய சதை மிருகம்தான். கேட்டால் பெண்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பொன்மொழிகளை இலவசமாக அருளுவார்கள்.

பெண் உடல்தான் எங்களுக்குப் பிரச்சினை. ஒரு போர்வையால் மூடிக்கொண்டிருந்தால் ஏன் நாங்கள் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்பார்கள். ஆனால், இப்போது டெல்லியில் இரண்டரை வயது குழந்தையும், ஐந்து வயது குழந்தையும் பாலியல் சித்திரவதைக்கு ஆட்பட்டிருக்கிறதே. ஆண் சிந்தனையானது இதற்கும் ஏதாவது ஒன்றைக் கற்பனை செய்து காரணம் கற்பிக்கலாம்.

நிர்பயா நிகழ்வுக்குப் பின், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுவிட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி வர்மா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, மிக நீண்ட அறிக்கையும் தயாரித்து அளிக்கப்பட்டது. வழக்கமாக அமைக்கப்படும் கமிஷன்களைப் போல அல்லாமல், உண்மையிலேயே பெண்கள் மீது உள்ளார்ந்த அக்கறையுடன் அந்த அறிக்கை தயாரிக்கப்படிருந்தது.

இந்த வழக்குகளைப் பொறுத்தவரை அதிகாரம், பதவி போன்றவற்றில் உள்ளவர்கள் எளிதாகத் தப்பிவிடும் சூழலே நிலவுகிறது. ஆனால், வர்மா கமிஷன் அறிக்கைக்குப் பின் இவர்களும் தண்டனைக்குத் தப்பியவர்கள் அல்ல என்ற நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தண்டனையின் மூலம் குற்றவாளிகள் திருந்தினார்களா? ‘இந்தியாவின் மகள்’ என்றே நிர்பயாவை அடையாளப்படுத்தி, இங்கிலாந்து பட இயக்குநர் லெஸ்லீ உத்வின் பி.பி.சி.க்காகத் தயாரித்து அளித்த ஆவணப் படம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தினாலும் குற்றவாளிகளின் அசல் முகங்களையும், அவர்களின் பெண் பற்றிய பார்வையையும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவில்லை. தங்கள் தவறுகளை அவர்கள் உணர்ந்தார்களா என்றால் இல்லை. மாறாக, அதை நியாயப்படுத்திப் பேசினார்கள்.

கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, துடித்துத் துடித்துச் சாவைத் தழுவிய நிர்பயா என்ற அந்த இளம் பெண்ணின் மீதே வாய் கூசாமல் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இரவில் வேற்று ஆண் ஒருவனுடன் வெளியில் வரும் பெண் ஒழுக்கமற்றவளாகத்தான் இருப்பாள் என்றார்கள். வழக்கம் போல பெண்கள் உடையணிந்துகொள்ளும் பாணியைக் குறைசொன்னார்கள். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி முகேஷ் சிங், “அந்தப் பெண் எங்களை எதிர்த்துப் போராடாமல் எங்களை அனுசரித்து நடந்துகொண்டிருந்தால், நாங்கள் அந்தப் பெண்ணைக் கொல்லாமல் விட்டிருப்போம்” என்று கூறியதுதான் இவை அனைத்திலும் உச்சம்.

இவ்வளவுக்கும் அந்த நபர் தண்டனை பெற்ற குற்றவாளி. தண்டனை என்பது தங்களைத் தாங்களே உணர்ந்துகொள்வதற்கும், தவறுகளைத் திருத்திக்கொண்டு, மனமாற்றம் பெறுவதற்கும்தான். ஆனால், வக்கரித்துப்போன அந்த மனம் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது. தண்டனை காலத்துக்குப் பின், இதே நபர்கள், மீண்டும் இந்தக் குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படும் பெண்ணின் மனநிலை குறித்தும், பெண்களைப் பொறுத்தவரை இது எவ்வளவு உணர்வுபூர்வமானது என்பதுவும் குறித்தும் இங்கு எவருக்கும் அக்கறையில்லை. பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்படுவது அவள் உடலின் மீது மட்டும்தான் என்பதே அவர்களின் புரிதலாகவும் இருக்கிறது. எப்போதுமே பெண் என்பவள் உடல் என்பதைத் தாண்டி வேறு ஒன்றாகப் பார்க்கப்படுவதில்லை என்பதுதான் பெண்கள் பற்றிக் கருத்து சொல்லும் ஒவ்வொருவரின் சொற்கள் மூலமாகவும் வெளிப்படுகிறது.

இந்தியாவெங்கும் 25,000 பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போலீஸ், கோர்ட் என்று வெளியில் வந்தவை இவை. ஆனால், மான, அவமானங்களுக்கு ஆட்பட்டு வெளியில் சொல்லாமல் மறைத்தவை இதில் எவ்வளவு? இந்தியர்களான நமக்கு எவ் வளவு பெருமைக்குரிய விஷயம் இது!

கொசுறு

உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ், காரில் பயணித்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அவர் குற்றவாளிதான் என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற தீர்ப்புகள்தான் நமக்கான தற்காலிக ஆறுதல்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x