Last Updated : 08 Nov, 2020 03:11 AM

 

Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

அரசியலில் பெண்கள்: தீர்மானிக்கும் சக்தியாக மாறிவரும் பெண்கள்

வீட்டிலும் நாட்டிலும் பெண்கள் பெரும்பாலும் இரண்டாம் பாலினமாகவே கருதப்படுகிற நிலையில் தற்போது வரவேற்கத்தகுந்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் பெண்களின் அரசியல் பங்கேற்பு தூரத்து வெளிச்சமாக நம்பிக்கை தருகிறது. தங்கள் சார்பாகப் பேசவும் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் பெண்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியான விதத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

உலகம் முழுவதும் சமூக, பொருளாதார காரணங்களால் பெண்களின் அரசியல் பங்கேற்பு பின்னடைவைச் சந்தித்தபோதும் தங்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்துப் பெண்கள் களம்காண போராடி வருகின்றனர். அந்தப் போராட்டமே அரசியலில் அவர்களின் இடத்தை உறுதிசெய்கிறது. உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்து ‘இண்டர் பார்லிமெண்டரி யூனியன்’ நடத்திய ஆய்வின்படி 1995இல் 11.3 சதவீதமாக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2020இல் 24.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பொலிவியா, ஸ்வீடன், பின்லாந்து, தைவான், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நியூசிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

உன்னால் அதிபராக முடியும்

தேர்ந்தெடுக்கப்படும் நபரின் அரசியல் பின்னணியுடன் அவரது பொதுவான கொள்கைகளும் அவர்களது அரசியல் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும் என்பதற்குப் பெண் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களே சான்று. தவிர, ஆண் ஆட்சியாளர்களைவிடப் பெண்களே மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிகொடுக்கிறார்கள் என்பதும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மற்றுமொரு காரணம். நியூசிலாந்து பிரதமராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெசிந்தா ஆர்டெர்னின் வெற்றியைத் தொடர்ந்து பெண்களின் அரசியல் பங்கேற்பு குறித்து உலக அளவில் வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இதுவரை பெண் அதிபர் ஒருவரைக்கூடக் காணாத அமெரிக்க வரலாற்றில் துணை அதிபருக்கான போட்டியில் மக்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்ற கமலா ஹாரிஸ், மாற்றத்துக்கான சான்றாக இருக்கிறார். தன் சகோதரியின் பேத்தியிடம் அவர் பேசிய வீடியோ வைரலானது. அதில், “உன்னால் அதிபராக முடியும்” என்று நான்கு வயது சிறுமியிடம் அழுத்திச் சொல்கிறார் கமலா ஹாரிஸ். அதைத் தொடர்ந்து பெண்கள் பலரும், “உன்னால் அதிபராக முடியும்” என்கிற வாசகத்துடன் தங்கள் மகள்களின் ஒளிப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஊராட்சி மன்றத் தேர்தலோ அதிபர் தேர்தலோ எதுவாக இருந்தாலும், ஒரே ஒரு பெண்ணின் அரசியல் பங்கேற்பும்கூட மற்ற பெண்களுக்கு நிச்சயம் ஊக்கசக்தியாக இருக்கும் என்பதற்கு இந்தச் சிறு உரையாடலும் அதைத் தொடர்ந்த பெண்களின் செயல்பாடுகளும் சான்று.

வெற்றிக்கான போராட்டம்

35 இடங்களைக் கொண்ட சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் எட்டுப் பேர் பெண்கள். 13 உறுப்பினர்களைக் கொண்ட அதிபருக்கான அவையில் ஐவர் பெண்கள். இதன்மூலம் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தங்களால் அவையில் உரத்துக் குரல்கொடுக்க முடியும் என்று அந்த ஐவர் கூட்டணி தெரிவித்திருக்கிறது. இவற்றுக்கிடையே தங்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் பெண்கள் போராடி வருகின்றனர். இந்தியாவில் 33 சதவீதத்துக்குப் போராடிக்கொண்டிருக்கிற நிலையில் சோமாலியாவில் 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்காகப் பெண்கள் போராடிவருகின்றனர். 329 இடங்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெண்கள் தற்போது 24 சதவீட இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்குக் கீழவை ஒப்புக்கொண்ட போதும் அந்தத் தீர்மானம் மேலவையில் இன்னும் நிறைவேறவில்லை. அதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தங்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பெண் தொழிலதிபர்களும் அரசியல்வாதி களும் போராடிவருகின்றனர்.

ஒரு பக்கம் இப்படியான போராட்டங்கள் நடைபெற, இன்னொரு பக்கம் அரசியலில் தங்கள் இடத்தைத் தக்கவைக்கவும் பெண்கள் போராடியபடி இருக்கின்றனர். பொலிவியா, நியூசிலாந்து, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெண்கள் பெற்றிருக்கும் அரசியல் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. கடந்த ஆண்டு தான் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தான் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்கிறார் பொலிவிய மேயர் பட்ரீஷியா. தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு வலதுசாரி நபர்களால் மோசமாகத் தாக்கப்பட்டார். தலை முடி அறுக்கப்பட்டு, பெயிண்ட் ஊற்றப்பட்டு கூட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். தன் மீது சிறுநீர் நாற்றம் அடித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதற்காக அரசியலில் இருந்து அவர் விலகி ஓடவில்லை. அனைத்தையும் துணிந்து நின்று வென்றார். விதிவிலக்குகளாக இவரைப் போலப் பெண்கள் சிலர் பெறுகிற வெற்றி, நாளை ஆயிரமாயிரம் பெண்கள் அரசியல் களம் காண்பார்கள் என்கிற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தருகிறது.

முதல் மாற்றுப்பாலினத்தவர்

71 சதவீத வாக்குகளைப் பெற்று ஒக்லஹோமாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மௌரி டர்னர், அமெரிக்கா வின் முதல் மாற்றுப்பாலின மாகாண சபை உறுப்பினர். 27 வயதாகும் இவர் தன்னை Non Binary என அடையாளப்படுத்துகிறார். அதாவது முழுமையான ஆணும் இல்லாமல் முழுமையான பெண்ணும் இல்லாத ‘பாலிலி நிலை’ என்று இதைச் சொல்கிறார்கள். இந்த மாகாணத்தில் வென்றிருக்கும் முதல் கறுப்பின இஸ்லாமியரும் இவர்தான். குடும்ப வன்முறை குறித்த சட்டம் ஒன்றைத் தான் வெறுப்பதாக ட்வீட் செய்திருக்கும் மௌரி டர்னர், “இதைப் போலவே நாம் நழுவவிட்டவை பல. அவை மீண்டும் நடக்காமல் இருக்க உறுதியுடன் போராடுவேன்” என்று சொல்லியிருக்கிறார். சிறு வயதில் தன் தாயுடன் நடந்த உரையாடலை நினைவுகூரும் இவர், “ஒருவேளை நான் வெள்ளை இனப் பெண்ணாக இருந்திருந்தால் இன்னும் சிறந்த நிலையை எட்டியிருக்க முடியும் என்று என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். அதனால், பிற இனத்தவருக்கும் அடையாளம் கிடைக்கும்படியான சூழலை நிச்சயம் உருவாக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் மௌரி டர்னர்.

முதல் திருநங்கை

டெலாவேர் மாகாணத்தில் வென்றதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மாகாண சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாரா மெக்பேடன். “தன் பாலின ஈர்ப்பு உள்ளோருக்கும் இடம் அளிக்கும் வகையில் இந்த நாடு பெரியது என்பதை இந்த வெற்றி கூறியிருக்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார் சாரா. தன் வெற்றியின் மூலம், ‘அன்பு ஒன்றுதான். உலகில் அனைவரும் எவ்விதப் பாகுபாடும் இன்றி வெளிப்படையாக வாழ்வதற்கான சூழலை இது ஏற்படுத்தித் தரும்’ என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக சாரா கூறியிருக்கிறார்.

சிறுபான்மையினருக்கு அங்கீகாரம்

அரசியல் களத்தில் பெண்களே சிறுபான்மையினராக இருக்கும்நிலையில் அதிகாரத்துக்கு வரும் பெண்கள், பெண் இனத்துக்கும் சிறுபான்மையினருக்கும் எந்த அளவுக்குத் துணைநிற்பார்கள் என்று நிரூபித்திருக்கிறார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 120 இடங்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள், தன் பால் உறவை உள்ளடக்கிய எல்.ஜி.பி.டி.க்யூ ஆதரவாளர்கள். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் சிறுபான்மையினரை நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்ட நாடு என்கிற பெருமையை நியூசிலாந்து பெற்றிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x