Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

பெண் எழுத்து: மாதவையாவுக்கு உத்வேகம் அளித்த கதை?

‘பெண் இன்று’ நவ. 1 இதழில் ‘பெண்ணுக்காக ஆண்கள் பேசலாமா?’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையை வாசித்தேன். எழுத்தாளர் அ. மாதவையா, 1910இல் ஆங்கிலத்தில் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு, பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்ணுக்கு நடப்பவை எல்லாம் ஆணுக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருந்த ‘திரௌபதி கனவு’ சிறுகதை பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருந்தது.

மாதவையா 1910இல் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்பாகவே, ‘திரௌபதி கனவு’ கதையின் கருவை அடிப்படையாகக்கொண்டு 1905இல் வங்கத்தைச் சேர்ந்த ரொக்கையா சக்காவத் ஹுசைன் ‘Sultana’s Dream’ என்கிற குறுநாவலை எழுதியிருக்கிறார். அவருடைய அந்த முதல் குறுநாவல் ‘மெட்ராஸ் ரெவ்யு’ என்கிற இதழில் 1905-ல் வெளியாகியுள்ளது. சுல்தானா என்கிற இஸ்லாமியப் பெண்ணை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட அந்தக் கதை போர், வன்மம், ஆணதிகாரம் இல்லாத ஓர் லட்சிய உலகை முன்னிறுத்துகிறது.

சுல்தானாவின் உலகம்

அந்த உலகத்தில் ஆண்கள் எல்லாம் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமையல் வேலையைப் பெண்களின் கண்டுபிடிப்புகள் மிக எளிதாக்கிவிடுகின்றன. அடுப்பெரிப்பதற்கு, சூரிய ஆற்றலைச் சேகரித்துத்தரும் அதிநவீன கருவியைப் பெண்கள் கண்டுபிடிக்கிறார்கள். மேகங்களில் இருந்து தண்ணீரை எடுத்துவருவதற்கான தொழில்நுணுக்கத்தையும் அவர்கள் கண்டறிந்துவிட்டதால், தண்ணீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடுகிறது.

ஆனால், அந்த ஊர் ஆண்கள் எப்படி வீட்டுக்குள் அடைபட்டார்கள்? பக்கத்து நாடு போர் தொடுத்துவந்தபோது ஆண்கள் எல்லாம் போரிட்டு மொத்தமாகத் தோற்றுப்போய் விடுகிறார்கள். நாட்டின் தன்மானம், விடுதலையை நிலைநாட்ட ஆண்கள் எல்லாம் வீட்டுக்குள் போய்விட வேண்டுமென ராணி அப்போது உத்தரவிடுகிறார்.

எப்பாடுபட்டாவது நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென நினைக்காமல், இதுதான் வசதி என்று ஆண்கள் எல்லாரும் வீட்டுக்குள் போய் அடைந்துகொள்கிறார்கள். பிறகு சமயோசிதமாகப் போரிட்டு பெண்கள் வெல்கிறார்கள்.

இந்தக் குறுநாவல் சாலை செல்வம், வ. கீதா மொழிபெயர்ப்பில் தாரா பதிப்பக வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது (‘சுல்தானாவின் கனவு’, தாரா வெளியீடு, தொடர்புக்கு: 044 24426696). இந்தக் கதையைப் படித்து உத்வேகம் பெற்றே ‘திரௌபதி கனவு’ கதையை மாதவையா எழுதியிருக்கக் கூடுமென்று தோன்றுகிறது.

பெண் விடுதலைப் போராளி

இந்தியத் துணைக்கண்டத்தில் பெண்விடுதலை குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர்களில் முக்கியமானவர் ரொக்கையா சக்காவத் ஹுசைன். அவர் பெண்களுக்காகத் தனிப் பள்ளி நடத்தியுள்ளார். ஆண்-பெண் சமத்துவம், சமநீதி, பெண் விடுதலை போன்றவை சார்ந்து இயங்கியவர். அதன் நீட்சியாகவே மேற்கண்ட கதையை எழுதியிருக்கிறார்.

இந்தச் சமூகமும் பெண்களின் நிலைமையும் எப்படி மாற வேண்டும், எப்படி மாறினால் இந்தச் சமூகம் சிறக்கும் என்பதை நூறாண்டுகளுக்கு முன்பு ரொக்கையா சக்காவத் ஹுசைனும் அ. மாதவையாவும் கற்பனையாக வடித்துக்காட்டி யிருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டு கழிந்தும் அந்தக் கற்பனை பெருமளவு கனவாகவே இருப்பது, நம் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்குமான கேள்விகளாக முன்நிற்கின்றன.

இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ‘சுல்தானாவின் கனவு’, ‘திரௌபதி கனவு’ கதைகளில் வரும் கனவுப் பெண்கள் நிஜமாவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.

- அன்பரசி, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x