Published : 27 Sep 2015 01:52 PM
Last Updated : 27 Sep 2015 01:52 PM
நான்கு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரர். மூன்று கடல்களைத் தனியே கடந்த முதல் பெண். 15 ஆயிரம் மைல்களுக்கு 50 லட்சம் துடுப்புகள் போட்டவர். தன்னுடைய வாழ்நாட்களில் 500 நாட்கள் கடலில் கழித்த சாகசக்காரர் ராஸ் சாவேஜ் (Roz Savage).
அதிக சம்பளத்துடன் கூடிய வேலை, அன்பான கணவர், சொந்த வீடு, சிவப்பு ஸ்போர்ட்ஸ் கார்… இப்படிப் பொதுவாகச் சொல்லப்படும் சிறந்த வாழ்க்கையைத்தான் 33 வயதுவரை வாழ்ந்துவந்தார் ராஸ் சாவேஜ். இந்த வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்று உணர்ந்தார். நிறைய யோசித்தார். பிறகு தன்னைப் பற்றிய இரங்கல் செய்தியை இரண்டு விதமாக எழுதினார்.
‘அமைதியான வாழ்க்கை வாழ்ந்த, நல்ல மனம் படைத்த 33 வயது ராஸ் சாவேஜ் மரணம் அடைந்துவிட்டார்.’
‘சவால்களை ஏற்று, சாகசங்கள் நிகழ்த்தி, சாதனைகள் படைத்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த ராஸ் சாவேஜ் மரணம் அடைந்துவிட்டார்.’
இரண்டையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தவர், ஒரு முடிவுக்கு வந்தார். “பிறப்பு என்பது ஒருமுறைதான். எல்லோரையும் போலப் பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று இருப்பதில் என்ன இருக்கிறது? நான் இந்த உலகில் பிறந்தேன் என்பதற்கு ஏதாவது ஒரு விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டும் என்று முடிவெடுத்த நொடிதான் என் வாழ்க்கையில் மகத்தான தருணம். என்னுடைய முயற்சியில் நான் தோல்விகூட அடையலாம். ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பதைவிட, தோல்வி அடைவது எவ்வளவு உயர்வானது!’’ என்கிறார் ராஸ் சாவேஜ்.
படகு செலுத்துவதில் எப்பொழுதுமே ஆர்வம் இருந்துவந்ததால், கடலில் தனியாக சாகசப் பயணம் செல்ல முடிவு செய்தார். தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். வீட்டை விற்றார். காரை விற்றார். கடற்கரைக்கு அருகே சிறிய அறை எடுத்து தங்கி, பயிற்சிகளை மேற்கொண்டார்.
முதல் பயணம்
2006-ம் ஆண்டு. தன்னுடைய முதல் கடல் பயணத்தை ஆரம்பித்தார் ராஸ் சாவேஜ். 23 அடி நீளம் கொண்ட படகில், தனியாளாக, துடுப்பு போட்டபடி அட்லாண்டிக் கடலில் கிளம்பினார். 80 நாட்களுக்குப் பிறகு அவரது நான்கு துடுப்புகளும் உடைந்துவிட்டன. அடுப்பு உடைந்து போனதால், சூடான உணவுகளைச் சாப்பிட்டு 20 நாட்கள் ஆகியிருந்தன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழந்துவிட்டன. தோள்பட்டை வலி எடுத்தது. உப்பு நீரால் முதுகில் புண்கள் வந்துவிட்டன.
“38 வயதில் வேலை இல்லாமல், வீடு இல்லாமல், குடும்பம் இல்லாமல், யாரும் அறியாமல் அட்லாண்டிக் கடலில் சிறிய படகில் என் வாழ்க்கை முடிந்து போய்விடுமோ என்று சிறு அச்சம் ஏற்பட்டது. உடனே நான் சுதாரித்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான கணங்கள் இந்தப் பயணத்தில்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன. நான் ராஸ் சாவேஜ். தைரியமானவள். வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்திருப்பவள். துடுப்புகளைச் சரிசெய்து, என் இலக்கை அடைந்துவிடுவேன்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.
103 நாட்களுக்குப் பிறகு, 3 ஆயிரம் மைல்களைக் கடந்து, நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். அட்லாண்டிக் கடலைத் தனியாகக் கடந்த 5-வது பெண் என்ற சாதனையைப் படைத்தார். அடுத்து பசிபிக் பெருங்கடலில் சாகசம் செய்யப் போவதாக அறிவித்தார். மூன்று பகுதிகளாகப் பிரித்து, பசிபிக் கடலைத் தனியாகக் கடந்துவிட்டார். அடுத்து 2011-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலைக் கடக்க இறங்கினார். 154 நாட்களில் இந்தியப் பெருங்கடலைக் கடந்து, மூன்று பெருங்கடல்களைத் தனியாகக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்திவிட்டார் ராஸ் சாவேஜ்.
“20 அடி உயர அலைகளில் இருந்து உயிர் தப்பியிருக்கிறேன். 24 மணி நேரமும் இயற்கையின் மடியில் தவழ்ந்திருக்கிறேன். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் எல்லாம் எவ்வளவு அழகானவை என்று கடல் பயணத்தில்தான் அறிந்துகொண்டேன். திமிங்கிலம், டால்பின், சுறா, கடல் ஆமை போன்றவை என் நண்பர்களாக மாறியிருக்கின்றன. என்னையே எனக்கு அடையாளம் காட்டியவை இந்தக் கடல் பயணங்கள்தான். எல்லாவற்றையும்விட மிக முக்கியமான ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டேன். அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. இந்த அழகான, அருமையான உலகத்தை பிளாஸ்டிக் அரக்கனிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என்கிறார் ராஸ் சாவேஜ்.
சாதனைகளுக்குப் பிறகு
தன்னுடைய சாகசப் பயணங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வலம்வருகிறார். இங்கிலாந்தில் இயங்கும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியமான பொறுப்புகளில் இருக்கிறார். 2010-ம் ஆண்டு நேஷனல் ஜியோகிரபிக், ‘அட்வென்சர் ஆஃப் த இயர்’ என்ற கவுரவத்தை ராஸ் சாவேஜுக்கு வழங்கிச் சிறப்பித்தது.
“சாதனை செய்வதற்கு வயது தடை இல்லை. நான் 38 வயதில்தான் என் பயணத்தை ஆரம்பித்தேன். அதிலும் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத விஷயத்தில் இறங்கினேன். தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் என் இலக்கை அடைந்தேன். அதனால் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கத் துணிச்சலுடன் இறங்கலாம். வெற்றி என்பது முக்கியமல்ல. முயற்சிதான் முக்கியம். அந்த முயற்சி நாம் யார் என்பதையும் நம் மதிப்பையும் நமக்கே அடையாளப்படுத்தும்” என்கிறார் ராஸ் சாவேஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT