Published : 06 Sep 2015 03:02 PM
Last Updated : 06 Sep 2015 03:02 PM
நியூஸிலாந்தின் இயற்கை எழில்மிக்க இரண்டு மலைகளை இணைத்துக்கொண்டிருக்கிறது கவராவ் பாலம். மரங்களால் சூழப்பட்டுள்ள மலைகளுக்குக் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலத்திலிருந்து 43 மீட்டர் கீழே குதித்து, பங்கி ஜம்ப் (காலில் கயிறு கட்டி குதிக்கும் விளையாட்டு) செய்துகொண்டிருந்தவரை ஆச்சரியத்துடன் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். சாதாரண மனிதர் ஒருவர், சாகசத்தின் உச்சம் என்று கருதப்படும் பங்கி ஜம்ப் விளையாட்டில் கலந்துகொள்வதில் விசேஷமில்லை. ஆனால் 91 வயது பெண்மணி பங்கி ஜம்ப் செய்தார் என்றால் சிறப்புதானே!
யார் இவர்?
நியூஸிலாந்தில் வசிக்கிறார் மேரி மான்ஸென். அவர் வாழ்க்கையில் இரண்டாவது தடவையாகக் கயிறு கட்டி குதித்து முடித்திருக்கிறார். 84 வயதில் ஒருமுறை குதித்தார். 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குதித்து, வயதான சாதனை யாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் மேரி. சின்ன வயதிலிருந்தே துறுதுறுப்பாகவும் குறும்பாகவும் இருப்பார். மரத்தில் ஏறி விளை யாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஷாட் புட், டிஸ்கஸ் விளையாட்டுகளில் சாம்பியனாக இருந்தார். ராணுவ வீரர் ஃப்ராங்க்குடன் திருமணம் ஆனது. அதற்குப் பிறகு விளையாட்டுகளில் பங்கேற்பது நின்றுபோனது.
“ஃப்ராங்க் என்னை எங்கும் தனியாக அனுப்ப மாட்டார். சாகசத்தையோ, துணிச்சலான ஒரு காரியத்தையோ செய்ய அனுமதிக்க மாட்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து மீன் பிடிப்போம். அதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? 63 ஆண்டுகள் இருவரும் குடும்பம் நடத்தினோம். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ராங்க் மறைந்துபோனார். குழந்தைகள், பேரக் குழந்தைகள் என்று மிகப் பெரிய குடும்பம் இருந்தாலும் நான் தனியாகத்தான் வசித்துவருகிறேன். என் மனத்தின் ஆழத்தில் புதைந்து இருந்த சாகசக்காரி மேலே வந்தாள். யாரின் அனுமதி உனக்கு வேண்டும்?
உன் விருப்பம் போல இப்போது நீ வாழலாம் என்று சொன்னாள். ஆமாம், நான் இப்போது சுதந்திரமானவள். என்னுடைய விருப்பத்தை நானே முடிவு செய்துகொள்ள முடியும்! நான் பல முறை அந்தப் பாலத்தைக் கடக்கும்போது, யாராவது கயிற்றில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதே எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும். அதனால்தான் பங்கி ஜம்ப் செய்ய முடிவு எடுத்தேன்’’ என்கிறார் மேரி.
சாகசப் பயணம்
84 வயதில் மருத்துவரைச் சந்தித்தார். உடல் நலம் பற்றிய அறிக்கையை வாங்கினார். வீட்டில் ஒருவருக்கும் சொல்லாமல், காரியத்தில் இறங்கினார். தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைத் தன்னால் செய்ய முடிந்திருக்கிறது என்ற திருப்தி மேரியை மேலும் உற்சாகப்பட வைத்தது. அடுத்தது பனி மலைகளுக்கு மேலே ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பறந்தார். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தோள்பட்டைக் காயத்தால் வானில் டைவ் அடிக்கும் முயற்சியைக் கைவிட்டார்.
இன்றும் தன் வீட்டு வேலைகளைத் தானே கவனித்துக்கொள்கிறார். தானே காரை ஓட்டுறார். அடிக்கடி சுற்றுலா செல்கிறார். பவுலிங் க்ளப்பில் உறுப்பினராக இருப்பதால், வாரத்துக்குச் சில நாட்கள் அங்கே சென்று விளையாடுகிறார். தன் உடல் தகுதியை மருத்துவரிடம் பரிசோதித்த பின்னர், இன்னொரு முறை பங்கி ஜம்ப் செய்தால் என்ன என்று தோன்றியது. உடனே அந்த அமைப்புக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து பதில் இல்லை. தானே நேரில் சென்று, தன் திட்டத்தைத் தெரியப்படுத்தினார். முதுமை என்பதால் அவர்கள் மிகவும் தயங்கினர். என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அது தன்னால்தான் என்று அவர்களுக்கு உறுதி அளித்தார்.
நியூஸிலாந்திலிருந்து ஐம்பதாவது தடவையாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இருக்கும் மேரி, தான் 105 வயதுவரை வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்கிறார். இன்று உலகிலேயே அதிக வயதுடைய பங்கி ஜம்ப் செய்த சாதனையாளர் என்ற பட்டம் மேரிக்குக் கிடைக்கவில்லை. அவருக்கு முன் மார்கிட் டால் என்ற பெண்மணி 95 வயதில் குதித்திருக்கிறார். 100 வயதில்கூட மேரி மீண்டும் பங்கி ஜம்ப் செய்து, உலகச் சாதனையை முறியடிக்கலாம், காத்திருப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT