Published : 13 Sep 2015 12:47 PM
Last Updated : 13 Sep 2015 12:47 PM

முகம் நூறு: மாற்றத்தை விதைக்கும் பொம்மைகள்!

பானுமதியை எப்படி அறிமுகப்படுத்துவது? பாவைக் கூத்துக் கலைஞர் என்றா? இயற்கை ஆர்வலர் என்றா? சூழலியல் கல்வியாளர் என்றா? பறவை வழிகாட்டி என்றா? வண்ணத்துப்பூச்சிகளைப் பட்டியலிட்டு கையேடு வெளியிட்டவர் என்றா? - இப்படி எளிதில் முடித்துவிட முடியாதபடி நீள்கிறது பானுமதியின் செயல்பாடுகளின் பட்டியல். தனது அடையாளத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு, தான் உருவாக்கிய பொம்மைகளோடு வந்தமர்கிறார் பானுமதி. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டு வரவேற்பறையே பாவைக் கூத்து மேடையாகிறது.

“வணக்கம், வாங்க வாங்க. என் பேரு மீனு. நான் ரொம்ப புத்திசாலி” என்று குரலை மாற்றி ஏற்ற இறக்கத்தோடு பேசுகிறார் பானுமதி. அதற்கேற்ப அவர் கையில் இருக்கும் பொம்மை வாயசைக்கிறது. மீனுவைப் போலத்தான் டிங்குவும். சுட்டிப் பையன். மீனுவும் டிங்குவும் பானுமதியின் ஆதர்ச கதாபாத்திரங்கள். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் தன்வசப்படுத்திவிடுவார்கள்.

வாய்ப்பளித்த இயற்கை

பானுமதியின் சொந்த ஊர் தஞ்சாவூர். பிறந்தது சிதம்பரத்தில். தந்தையின் வேலை காரணமாக இவர்களது குடும்பம் டெல்லிக்குக் குடிபெயர, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் டெல்லி வாசம்.

“நான் படிச்சதெல்லாம் டெல்லியிலதான். ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் முடிச்சுட்டு ரெண்டு வருஷம் டீச்சரா வேலை பார்த்தேன். அம்மாவோட மறைவுக்குப் பிறகு சென்னைக்கு வந்துட்டோம்” என்று சொல்லும் பானுமதி, சென்னையில் தனக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்திருக்கிறார். அப்போது எதிர்பாராமல் கிடைத்ததுதான் உலக இயற்கை நிதியத்தில் (WWF) பணிபுரியும் வாய்ப்பு.

“1985-ல நான் வேலை தேடிக்கிட்டு இருந்த நேரம். அப்போ ஒரு கிரீட்டிங் கார்டைப் பார்த்தேன். ரொம்ப அழகாவும் வித்தியாசமாவும் இருந்தது. அதை யாரு வடிவமைச்சாங்கன்னு பார்த்தபோதுதான் WWF பத்தி தெரிஞ்சது. உடனே அதுல இயற்கைக் கல்வியாளரா சேர்ந்துட்டேன். மத்தவங்களுக்குப் பயிற்சி தந்துக்கிட்டே என்னோட அறிவையும் வளர்த்துக்கிட்டேன். முதுமலை, ஆனைமலை, முண்டந்துறை போன்ற வனப்பகுதிகளுக்கு போய் முகாம் அமைப்போம். அங்கே இருக்கற காட்டுயிர்களைப் பத்தி தெரிஞ்சுக்க மாணவர்களுக்கு உதவுறதுதான் என்னோட வேலை. அதுக்காக நான் நிறைய விலங்குகளைப் பத்தியும் பறவைகளைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ நாங்க கிட்டத்தட்ட 200 இயற்கை சங்கங்களை நடத்தினோம். காட்டுக்குள்ளே போய் தங்கிட்டு, அட்டைப்பூச்சி கடிச்ச அடையாளத்தோட வீட்டுக்கு வர்ற என்னை என் அப்பாவும் பாட்டியும் வித்தியாசமா பார்ப்பாங்க” என்று சிரித்தபடி சொல்கிறார் பானுமதி.

பாவைக் கூத்து

இயற்கை வழியில் பயணித்துக் கொண்டிருந்தவர், தன் தோழி ஒருவரின் தூண்டுதலால் தோல்பாவைக் கூத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். பொம்மலாட்டம் மற்றும் தோல்பாவைக் கூத்துக் கலைகள் குறித்தும் அந்தக் கலைஞர்களின் நிலை குறித்தும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு, கேரளாம், ஆந்திராம், கர்நாடகாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் இதற்காகப் பயணம் செய்தார். தமிழ்நாடு, கர்நாடகாம், ஆந்திராம் ஆகிய மாநிலங்களில் இவை பொழுதுபோக்குக் கலைகளாக இருப்பதால் வழக்கொழிந்து வருவதையும், கேரளத்தில் பக்தியுடன் இணைந்த சடங்காக இருப்பதால் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதையும் தன் கள ஆய்வு மூலம் அறிந்தார். ஆய்வுக்காக பானுமதி மேற்கொண்ட பயணம் அவரைப் பாவைக் கூத்து தொடர்பான பணிகளில் முழுநேரமாக ஈடுபட வைத்தது.

“நம்மளோட தொன்மைக் கலையான தோல்பாவைக் கூத்தை எப்படி எல்லார் கிட்டேயும் கொண்டுபோய் சேர்க்கறதுங்கற என்னோட தேடல்தான் என்னை ஒரு பாவைக் கூத்துக் கலைஞரா மாத்துச்சு. நான் இயற்கை ஆர்வலரா இருக்கறதால தோலால செஞ்ச பொம்மைகளைத் தவிர்த்துட்டு, நுரைப்பஞ்சில் பொம்மைகள் செய்தேன். நடைமுறையோடு பொருந்திப் போகிற கதாபாத்திரங்களை உருவாக்கினேன். பாவைக் கூத்து நடத்துறது மட்டுமல்ல என் நோக்கம். அதில் பங்குபெறுகிறவர்களும் பொம்மை செய்ய கத்துக்கிட்டு அவங்களும் பாவைக் கூத்து நடத்தணும். அதுக்கான பயிற்சியையும் நான் தர்றேன்” என்கிற பானுமதி, சுனாமி பேரிழப்பைச் சொல்லும் வகையில் நான்கு கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.

கருத்து சொல்லும் கதாபாத்திரங்கள்

குடும்பத் தலைவர் கந்தசாமி, அவருடைய மனைவி சரோஜா, இவர்களின் குழந்தைகள் முத்து, மலர் ஆகிய நான்கு பேரும் சுனாமி பாதிப்பைச் சொல்வார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பொம்மைகளைச் செய்வதற்குப் பயிற்சி தந்தார்.

“பொம்மைகள் வாயிலா நம் சமூக அவலங்களைச் சொல்லும்போது அது நேரடியாக மக்களைச் சென்று சேரும். எப்பவுமே பொம்மைகள் வாயசைக்கணும்னு அவசியமில்லை. என்னோட கான் பாய் வாயே திறக்க மாட்டார். அதுக்குப் பதிலா நம்மளோட கை பேசணும்.

வல்லூறு இனம் அழிவதைச் சொல்வதற்காக ஒரு சோகமான வல்லூறை உருவாக்கினேன். குழந்தைகள் பள்ளியில் இருந்து நடுவில் நின்றுவிடுவதைத் தடுக்கறதுதான் நான் உருவாக்கின ‘மக்கு’ கதாபாத்திரத்தோட வேலை” என்று பொம்மைகள் குறித்து சளைக்காமல் பேசுகிறார். குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இயற்கையுடன் இணைந்த கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் ‘இலை’ என்ற அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்.

“இதில் இன்னும் முழுமூச்சில் பணிகள் நடைபெறவில்லை என்றாலும் அந்த இலக்கை நோக்கி பயணப்படத் தொடங்கியிருகிறேன். இன்னும் ரெண்டு வருஷத்துல எனக்கு ரிடையர்மென்ட் வயசு வந்துடும். வயசுக்குத்தான் ரிடையர்மென்ட், என்னோட வேலைக்கு இல்லை” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் பானுமதி.

வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்தியவர்

‘க்ரியா’வின் தமிழ் அகராதி தயாரிப்பில் பறவைகள், விலங்குகள் தொடர்பான ஆலோசகராகப் பங்காற்றிய இவர் பறவைகளை இனம் கண்டறிவதில் தேர்ந்தவர். அதன் தொடர்ச்சியாக வண்ணத்துப்பூச்சிகள் குறித்த அறிமுகக் கையேடு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் பயணித்திருக்கிறார்.

“இந்தப் பயணம் என்னைப் புகைப்படக் கலையையும் கற்றுக்கொள்ளச் செய்தது. வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்தது, புகைப்படமெடுத்து, அவற்றுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தது என்று இந்தப் பணியின் ஒவ்வொரு கட்டமும் அத்தனை அற்புதமாக இருந்தது. கையேட்டைப் பார்த்தபோது நான் பட்ட சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது” என்று சொல்லும் பானுமதி, ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் அதன் நிறம் மற்றும் உடலமைப்பை வைத்தே பெயர் சூட்டியிருக்கிறார். பனைச்சிறகன், கருஞ்சிவப்புத் தாவி, வயல் துள்ளி, நெட்டிலி அழகி, முப்புள்ளி மஞ்சள் புல்வெளியான், நாடோடி, ஆதொண்டை வெள்ளையன், வெள்ளிக் கம்பிக்காரி, கருவேல நீலன், சாம்பல் வசீகரன், கனிச் சிறகன் என்று ஒவ்வொரு பெயரும் வண்ணத்துப்பூச்சியின் அழகுக்கு நிகரான பேரழகுடன் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x