Published : 16 Aug 2020 10:00 AM
Last Updated : 16 Aug 2020 10:00 AM
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு மத்தியில் அதிபர் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டிருப்பது, உலகையும் இந்தியாவையும் ஒருசேரத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை 1788-ம்ஆண்டில் தொடங்கியது. ஆனால், ஒன்றேகால் நூற்றாண்டைக் கடந்த பிறகு 1920-ல்தான் அமெரிக்கா முழுவதும் பெண்கள் வாக்களிக்க உரிமையே கிடைத்தது. வாக்குரிமைக்கே அல்லாடிய பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மெதுவாகத்தான் கிடைத்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவில் பல சிறிய கட்சிகளின் சார்பில் அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் பெண்கள் போட்டியிட அவ்வளவாக வாய்க்கவில்லை. அரிதாக 1964-ல் குடியரசுக் கட்சி சார்பில் மார்க்கெரட் சாஸி ஸ்மித், 1972-ல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஷெர்லி ஜிஸ்ஹோம் இருவரும் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடத் தேர்வானார்கள்.
மறுக்கப்படும் வாய்ப்பு
2008-ம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்கு முந்தைய வேட்பாளர் தேர்தலில் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு, கடைசியில் விட்டுக் கொடுத்து களத்திலிருந்து வெளியேறினார் ஹிலாரி கிளிண்டன். ஆனால், 2016-ல் விட்டதைப் பிடித்த ஹிலாரி, அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடத் தேர்வாகி டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். 228 ஆண்டுகள் பழமையான அதிபர் தேர்தலில் பிரதான கட்சி ஒன்றின் முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை மட்டுமே ஹிலாரிக்கு அப்போது கிடைத்தது.
அதிபர் தேர்தலில் முக்கியக் கட்சிகளின் சார்பில் பெண்கள் அரிதாகப் போட்டியிட்டது போலவே துணை அதிபர் தேர்தலிலும் பெண்கள் அரிதாகவே களமிறங்கியுள்ளார்கள். 1972-ல் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் டோனி நாதன், துணை அதிபர் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் முதன்முறையாக 1984-ல் ஜெரால்டின் ஃபெராரோ, குடியரசுக் கட்சி சார்பில் 2008-ல் சாரா பாலின் இருவரும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். ஆனால், தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. முக்கியக் கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி சார்பில் பெண்கள் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருப்பது இரு முறை மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. இப்போது மூன்றாம் முறையாக ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஆகியிருக்கிறார் கமலா ஹாரிஸ்.
அம்மாவின் வழியில் சமூகப் பணி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பைங்காநாடு கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் கமலா ஹாரிஸ். இவருடைய அம்மா சியாமளா அமெரிக்காவில் உயர் கல்வி படித்தபோது, அங்கே கறுப்பின உரிமைப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போதுதான் ஜமைக்காவைச் சேர்ந்த பொருளாதார மாணவர் டொனால்டு ஹாரிஸைச் சந்தித்தார். இருவரும் 1963-ல் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். டொனால்டு ஹாரிஸ் - சியாமளா தம்பதியின் மகள்தான் கமலா ஹாரிஸ்.
ஒரு வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடும் ஆசிய-ஆப்பிரிக்கக் கலப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண்ணும் கமலாதான். குறிப்பாக தெற்காசியாவைப் பூர்விகமாகக் கொண்ட முதல் வேட்பாளர் கமலாதான். தன் அம்மாவைப் போல் கறுப்பினத்தவருக்காகப் போராடி வருபவர். அட்டர்னி ஜெனரலாக மக்கள் நலனுக்காகப் பல வழக்குகளை நடத்தி மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் கமலா.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஒருமுறைகூட அதிபர், துணை அதிபர் பதவிகளில் பெண்கள் அமர்ந்ததில்லை. 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி விட்டதை, கமலா பிடிப்பாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT