Published : 16 Aug 2020 09:46 AM
Last Updated : 16 Aug 2020 09:46 AM
கடந்த மாதம் படித்த செய்தி இன்றும் என் நினைவைவிட்டு அகலவில்லை. அதை வெறும் செய்தியாக மட்டுமே கடந்துவிட முடியவில்லை. பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை இந்தச் சமூகத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையை இழந்த ஒரு குடும்பம், ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி சுக்கு டீ விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவலச் செய்திதான் அது. ஆவின் பால் விற்பனை பூத் ஒன்றை வைத்துக்கொடுக்க வேண்டும் என ஆட்சியரி்டம் பல முறை மனு அளித்தும் பலனில்லாத நிலையில்தான், அந்தத் தாய் தன் மகளை டீ விற்பனைசெய்ய அனுப்பியிருக்கிறார். தன் குழந்தையின் பாதுகாப்புக்காக அவளுக்கு ஆண் உடை அணிவித்து அனுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்தத் தாயின் வார்த்தையை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. நம் நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது. தன்னைப் போன்ற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாட வேண்டிய வயதில், குடும்ப வறுமைக்காக டீ விற்க வேண்டிய நெருக்கடிக்கு அந்தக் குழந்தை ஆளாகியிருக்கிறதே என்ற கவலை ஒரு பக்கம். மற்றொருபுறம் அந்தச் சிறுமி, ஆணைப் போல் உடையணிந்து டீ விற்றதும் வேதனை தருவதே.
சைல்ட் ஹெல்ப் லைனுக்கு மார்ச் 20 தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதிவரையிலான 21 நாட்களில் மட்டும் 4.6 லட்சம் அழைப்புகள் வந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி யளிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கரோனா ஊரடங்கு காலத்தில் பெறப்பட்ட அழைப்புகள். நாடு முழுவதும் 2.40 லட்சம் போக்சோ, பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது மற்றுமொரு தகவல். இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண் குழந்தைகளிடம் சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கப்போகிறோம்?
பாதுகாப்பு கருதி, அவர்களைச் சுதந்திரமாக விளையாடக்கூடப் பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. தன் நாட்டுக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க இயலாத எந்த ஒரு நாடும் அணு ஆயுதங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளியில் வெற்றி என எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் அது வெற்று வளர்ச்சியே. இனியாவது குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசும் நாமும் முற்பட வேண்டும்.
- ஆனந்தி வீரமுத்து, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT