Published : 27 Sep 2015 01:17 PM
Last Updated : 27 Sep 2015 01:17 PM
“கருப்பும் ஒரு அழகு, காந்தலும் ஒரு ருசி…” - இப்படி ஒரு சொல் வழக்கு நம்மிடையே உண்டு. அதாவது அழகு என்பது பல வண்ணங்களைக் கொண்டது. அவற்றில் கருப்பு ஒரு வண்ணம்; ஒரு அழகு. அதே போல ருசி பல விதமானது. கொஞ்சம் முறுகலாக, கொஞ்சம் காந்தலாகச் சாப்பிடுவதும் ஒரு ருசி.
ஆனால் அன்றாட வாழ்க்கையில் கருப்பு வண்ணத்தை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம்? ஒரு மாற்றுக் குறைவாகத்தானே! நமது பொதுப்புத்தியிலேயே கருப்பு என்றால் மட்டம் என்று பதிந்துள்ளது. `கருமை நிறக் கண்ணா’ என்று பாடுவோம். ஆனால் ஒரு கருமை நிறக் கண்ணனோ, கண்ணம்மாவோ நம் முன் நின்றால் கொஞ்சம் அசூயை! ஏன்?
நானும் யோசித்துப் பார்க்கிறேன். உணவுப் பண்டங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். களி மிகவும் ருசியானது. அதிக ஊட்டங்கள் கொண்டது. உளுந்தங்களி, வெந்தயக்களி, அரிசிக்களி, ராகிக்களி என பல விதமான களிகள். அதிலும் இனிப்பு கலந்த களி இன்னும் ருசி. இதில் எனது அனுபவம் என்னவென்றால் இந்த உளுந்தங்களி இருக்கிறதே அதை உளுந்தைத் தோல் நீக்காமல் செய்தால் அது குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. தோல் நீக்காமல்தான் சாப்பிட வேண்டும் என்றால் கேட்க மாட்டார்கள். தோல் நீக்கி வெண்ணிறமாகச் செய்தால் சாப்பிடுவார்கள். அதே போல கருப்பு எள்ளில் செய்த பண்டத்தைவிடத் தோல் நீக்கிய வெள்ளை எள்ளில் செய்த பண்டம் என்றால் சாப்பிடுவார்கள். ஆனால் ராகியை எப்படி வெளுப்பாக்குவது? அதில் என்ன பண்டம் செய்தாலும் பிடிக்கவே பிடிக்காது. இதை நான் சோதனையாகவே பல குழந்தைகளிடம் செய்து பார்த்துவிட்டேன். காரணம் கருப்புதான். அதனால்தானே கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு வெள்ளைச் சர்க்கரையைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்.
சாப்பிடும் உணவில்கூடக் கருப்பு நிறம் இருக்கக் கூடாது என்பவர்கள், சக மனிதர்களை எப்படி ஏற்பார்கள்? திருமணச் சந்தையில் வெள்ளைத் தோலுக்கு இருக்கும் மதிப்பு கருப்புத் தோலுக்கு ஒருபோதும் இருப்பதில்லை. என்னதான் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் கருப்புப் பெண்கள் இரண்டாம் படி நிலையினர்தாம். கருப்பு நிறமுள்ள மாப்பிள்ளைப் பையன்கூட அப்படியான பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயங்குவது வழக்கமாக உள்ளது. பெண் கருப்பானால், அதை ஈடுகட்டக் கொஞ்சம் அதிகப்படியாக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் வழக்கில் உண்டு. அப்படி அதிகப்படியாகக் கொட்டியழுதால் மட்டும் கருப்புத் தோல் வெளுத்துவிடுமா? இப்படிக் கேள்விகள் எதுவும் கேட்டுவிட்டால், அவளுக்கு அதிகப்பிரசங்கி என்ற பட்டமும் கூடுதலாகச் சேர்ந்துவிடும்.
சிவப்புப் பெண்தான் அழகா?
உண்மையிலேயே கருப்பு என்பது சற்று மாற்றுக் குறைவானதுதானோ என்ற சந்தேகத்தில் உலகிலுள்ள அத்தனை அறிவியல், மருத்துவ அகராதிகளையும் புரட்டிப் போட்டாயிற்று. ‘ம்ஹும்’ அப்படி ஒரு குறிப்பையும் காணோம்! இலக்கியங்களை எடுத்துக்கொள்ளுங்கள். எங்காவது கருப்புப் பெண்ணை விட சிவப்புப் பெண்தான் அழகு என்று ஏதாவது ஒரு உலக இலக்கியத்தில் தீர்மானமாகக் கூறப்பட்டதாக ஒரு வரி காட்டுங்கள்!
மானுடத் தோலின் நிறத்தைப் பொறுத்தவரை தீர்மானகரமான அம்சம் என்பது அட்ச ரேகையும் சூரியனும்தான் தீர்மானிக்கும் சக்தி! பொதுவாக வெப்ப மண்டலப் பகுதி என்றழைக்கப்படும் நாடுகளில் வாழ்பவர்கள் அடர் வண்ணமாக இருப்பார்கள். துருவங்களை நெருங்க, நெருங்க இது வெளுப்பு வண்ணமாக மாறுகிறது. கொளுத்தும் வெயிலில் வயல் வெளிகளிலும் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபடும் தொழிலாளர்கள் ஐரோப்பியர்களைப் போல் இருந்தால் நம் சூழலுக்குத் தாக்குப் பிடிக்க முடியுமா? அதாவது பாலும் டிகாக்ஷனும் கலப்பது போல. வட இந்தியாவில் நம்மை விட வெளுப்பான தோலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை வெளுப்பு என்று சொல்லுவதை ஐரோப்பியர்கள் ஏற்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்தியர்களாகிய நாம் அனைவருமே அடர் வண்ணம்தான். நம்மை விட ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர் இன்னும் அடர் வண்ணம்.
இதெல்லாம் மானுடச் செயல் பாட்டில் எதையும் தீர்மானிக்கும் சக்தியல்ல. வில்லியம்ஸ் சகோதரிகள் அமெரிக்கக் கருப்பினத்தவர்கள். அவர்கள் டென்னிஸில் ஐரோப்பியவர்களைத் தோற்கடித்துச் சாதனைகள் புரியவில்லையா? பழமைப் பழக்கங்களால் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட சோமாலியா நாட்டுக் கருப்பினப் பெண் வாரிஸ் டெய்ரி…. இன்று உலகின் தலை சிறந்த மாடல் அழகியாகக் கொண்டாடப்படவில்லையா?
டி.ஆர். ராஜகுமாரியை மறக்க முடியுமா?
தமிழ்த் திரையுலகின் முதல் ‘கனவுக் கன்னி’ டி.ஆர். ராஜகுமாரியை மறக்க முடியுமா? இவர்தான் தனது படத்தின் கதாநாயகி என கே.சுப்பிரமணியம் முடிவு செய்தவுடன் அவருக்குப் பைத்தியமா என கேலி செய்தனர். காரணம் ராஜகுமாரி கருப்பு. அவருக்கு ஒப்பனை செய்யவே ஒப்பனைக் கலைஞர் மறுத்தாராம். இயக்குனரின் பிடிவாதத்தால்தான் நமக்கு டி.ஆர். ராஜகுமாரி என்ற கலையுலகத் தாரகை கிடைத்தார். அவரை அழகில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? ஏன் சாவித்திரியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் கருப்பு வைரம்தானே தன் ஒப்பற்ற நடிப்பால் நம்மை இன்றும் கட்டிப் போட்டுள்ளது. இன்றும் நாம் புன்னகை அரசி என்று கொண்டாடும் கே.ஆர். விஜயாவும் நம் நிறம்தானே! நம் காலத்து நாயகி நந்திதா தாஸை மறக்கலாமா?
அழகு என்பது பார்ப்பவர் கண்களில் அல்லவா இருக்கிறது. கம்ப ராமாயணத்தில் ராமனின் அழகில் மயங்கிய கம்பன், ‘மையோ மரகதமோ மறிகடலோ’ என்று கவி பாடவில்லையா? ராமன் கருப்பானாலும் கடவுள் இல்லையா? அதனால் ஓரம் கட்ட மாட்டோம். ராமன் மட்டுமல்ல, கிருஷ்ணனும், சிவனும்கூட இந்தக் கருப்பு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானே…! கிராமத்து தெய்வங்களான கருப்பு, கருப்பண்ண சாமி, கருப்பு சாமி என பலரையும் ஏற்கிறோம். இல்லாவிட்டால் `விடாது கருப்பு’ என்ற பயம்கூட காரணமாய் இருக்கலாம்.
உலகின் மக்கள் தொகையில் அடர் வண்ணத்தினரே எண்ணிக்கையில் அதிகம். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் நம் காந்தி கருப்பர் என்பதாலேயே அவமானப்படுத்தப்படவில்லையா? உதைத்துக் கீழே தள்ளப்பட்டதில், குப்புற விழுந்து உடைந்த பற்களுடன்தானே அவர் கடைசி வரை காலம் தள்ளினார். தென்னாப்பிரிக்க நாட்டில் தன் கருப்பர் இன மக்களின் விடுதலைக் காகக் கால் நூற்றாண்டு காலம் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா கொண்டாடப்படவில்லையா? இன்னும் எத்தனை எத்தனை சாதனையாளர்கள் பல துறைகளிலும் சாதனை படைத்திருக்கிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப் பூவைப் பாலில் கலந்து சாப்பிட்டுவந்தால் பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் நம்மிடம் இருப்பதுதானே? அப்படியானால், குழந்தையின் தோல் நிறத்தைத் தீர்மானிப்பது மரபணுக் கூறுகள் இல்லையா? சிவப்பழகு க்ரீம்களின் மேல் மோகம் கொண்டு ஆண்டுக் கணக்கில் அதைத் தொடர்ந்து பூசிக்கொள்வதாலேயே யாராவது சலவைக்குப் போட்ட வெள்ளைத் துணியைப் போல `பளீர்’ வெள்ளைக்கு மாறியிருக்கிறார்களா? இப்படிச் சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடினாலே, அதற்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட மாட்டோமா? கொஞ்சம் யோசிப்போமே…
அழகு என்பது நிறத்தில் மட்டுமே இல்லை. நிறத்தால் மனிதனை மனிதன் ஒதுக்கும் எண்ணம்தான் இந்தப் பொதுப்புத்தி உருவாவதற்குக் காரணம் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment