Published : 13 Sep 2015 12:22 PM
Last Updated : 13 Sep 2015 12:22 PM
கடந்த வாரம் என் வீட்டு எதிரில் இருக்கும் மரத்தில் பறவைகளை வேடிக்கை பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தேன். தற்செயலாகத் தெருவில் போவோர் வருவோரின் மீதும் பார்வை பதிந்தது. தினமும் எத்தனை விதமான மனிதர்கள் ஆண்களும் பெண்களுமாக நம்மைக் கடந்து செல்கிறார்கள். அதில் சில முகங்கள் மட்டும் மனதில் பதிந்து போகும்.
வயதான பெண்மணி ஒருவர் தெருவில் நின்றபடியே அலைபாய்ந்தவாறு இருந்தார். வழிப்போக்கர் அல்ல. அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கேயோ பக்கத்தில்தான் வீடு இருக்க வேண்டும். வேகாத வெயிலில் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு, அந்தப் பைகளைக் கைகளிலும் இடுப்பிலுமாக சுமந்துகொண்டு செல்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அறிமுகமோ, நேரடிப் பேச்சோ கிடையாது. அவரும் என்னைப் பல முறை பார்த்தபடியே போவார். இப்போது ஏன் அவர் தெருவில் நின்றபடி அல்லாடிக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை. அப்போதுதான் அவர் என்னிடம் எதையோ எதிர்பார்த்து நிற்கிறார் என்பதும் கேட்பதற்குத் தயங்குகிறார் என்பதும் புரிந்தது. ‘அம்மா எதுவும் வேண்டுமா?’ என்று நானே பேச்சை ஆரம்பித்தேன்.
அவர் முதலில் கொஞ்சம் தயங்கினார். முகத்தில் சோர்வு தெரிந்தது. ‘‘பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்க’’ என்றேன். கொஞ்சம் அருகில் வந்து மிகவும் தயக்கத்துடன் “கொஞ்சம் காபி கிடைக்குமாம்மா” என்றார். உடனே அவசரமாக காபி தயாரித்து ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். தன் கையில் இருந்த பைக்குள்ளிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்து, “இத அப்படியே இதில் ஊற்றிக் கொடும்மா” என்றார். புரியாமல் அவரைப் பார்த்தேன். ‘இல்ல, பக்கத்துல இருக்கிற பார்க்குல உக்காந்து குடிப்பேன்’ என்றார். நானும் பேசாமல் அப்படியே காபியை ஊற்றிக் கொடுத்தேன். அவர் சில கட்டடங்கள் தள்ளி இருந்த பார்க்குக்குள் சென்றார். நான் வீட்டுக்குள் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்ததும் அந்தப் பூங்காவிலிருந்து அந்தப் பெண் மற்றொரு வயதான பெண்ணுடன் சிரித்துப் பேசியபடியே வெளியே வருவது தெரிந்தது.
இப்போதுதான் அடுக்கடுக்காகக் கேள்விகள் எனக்குள் எழுந்தன. அவரைப் பார்த்தால் வசதி குறைந்தவராகத் தெரியவில்லை. காதில், மூக்கில் தங்க நகைகள் பளபளத்தன. கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகத் தெரிந்தார். தள்ளாடும் வயதானாலும் நடமாட்டம் நன்றாக இருந்தது. அவருக்கு இந்த நிலையை எது ஏற்படுத்தியது? தான் விரும்பியவாறு ஒரு வாய் காபி குடிக்கக்கூட அவருக்கு அவருடைய வீட்டில் இடம் இல்லையா? கையில் காசில்லையா? தன்னைப் பார்க்க வந்த வேறொரு முதிய பெண்ணுக்குத் தன் வீட்டில் ஒரு டம்ளர் காபி கேட்டால்கூடக் கிடைக்காது என்ற நிலையா?
இக்கேள்விகளுக்கு விடை காண்பது இங்கு முக்கியமல்ல. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இன்று அனைத்து முதியோர்களின் நிலை இதுதானோ என்று தோன்றுகிறது. வர்க்க பேதமில்லாமல் அனைத்து முதியோருமே ஏதோ ஒரு விதமான தனிமையில் வாடுகிறார்கள். வசதி இருப்பவர்கள் தங்கக் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அன்றாடங் காய்ச்சிகளாக இருந்து இற்றுப் போனவர்கள் பிச்சைக்காரர்களாக அலைகிறார்கள்.
முன்னேற்றத்தின் தலைமுறை
இன்று முதியோராக இருப்பவர்கள் அல்லது முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவர்கள் 70கள் 80களில் தங்கள் அயராத உழைப்பால் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உருவாக்கிய தலைமுறையினர். சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை முதன்முதலாக உணர்ந்த தலைமுறையினர் இவர்கள்தாம். இவர்கள் உழைப்பால்தான் பிள்ளைகள் படித்து, வேலைக்குப் போய் இன்று சமுதாயத்தில் அவர்களும் மனிதர்களாக உலாவுகிறார்கள்.
ஆனால், இன்று அந்த முதியவர்கள் அனைத்து வீடுகளிலும் வாட்ச் மேன்களாக, பேபி சிட்டர்களாக, வேலைக்காரர்களாக, சமையற்காரர்களாகக் கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆண் – பெண் பேதமில்லாத முதியோர் நிலை இதுவென்றால் பெண்களின் நிலை இன்னும் ஒரு படி கீழே. எப்போதும் இரட்டைத் தாக்குதல்களுக்கு ஆளாகிறவள் பெண் அல்லவா?
குடும்பத்தின் உழைப்பில் பெண்ணின் பங்களிப்பு ஒரு பங்கு அதிகம்தான். ஐந்து வயதிலேயே வீட்டு வேலைகளைப் பழகத் தொடங்கும் சிறுமி, விரைவில் அடுத்தடுத்த தம்பி, தங்கைகளை அவர்கள் கைக்குழந்தைகளாய் இருக்கும்போதிலிருந்தே கவனிக்கும் பொறுப்பையும் ஏற்கிறாள், வீட்டு வேலைகள் பழகுகிறாள். சமைக்கக் கற்றுக்கொள்கிறாள். கல்வியும் கற்கிறாள். வேலைக்குப் போகிறாள். திருமணத்திற்குப் பின் வீட்டின் முழுப் பொறுப்பும் அவள் கைகளில். பிள்ளைகள் பெறுகிறாள். வளர்க்கிறாள். பிள்ளைகளின் மனம் கோணாமல் படிக்கவும், வளரவும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே அல்லாடுகிறாள். நாற்பது வயதுக்கு மேல் உடல் ஒத்துழைக்க மறுக்கத் தொடங்குகிறது. வயோதிகத்தில் இவள் நிலைமை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!
பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிய பின் இவள் இரண்டாம் பட்சமாகிறாள். அவர்கள் வேலைக்குப் போன பின் வீட்டைப் பராமரிக்கவும் பேரன் – பேத்திகளை வளர்க்கவும் அவள் தேவைப்படுவதால் கொஞ்சம் கவனம் பெறுகிறாள். உடல் தளர்ந்து, முடங்கிப்போகும்போது அவளே தன் பிள்ளைகளுக்குச் சுமையாகிறாள்.
சுமையாகும் முதுமை
வீட்டுக்கு வீடு இந்த நிலை கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஆனால், இல்லையென்று மறுத்துச் சொல்ல முடியுமா? அப்படி இல்லையென்ற நிலை வர வேண்டும் என்பதுதான் நமது விருப்பம், ஆசை, பேரவா! ஆனால், வீட்டுக்கு வீடு வாசற்படிதானே!
இதன் எல்லை மீறல்கள், வரம்பு மீறல்கள் எப்பக்கத்தில் நிகழ்ந்தாலும் தீர்வு முதியோர் இல்லம் என்பதாகத்தானே மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தை வளர்ப்பும் கல்வியும் நூறு சதவீதம் பெற்றோரைச் சார்ந்தே இருக்கிறது. அரசோ சமுதாயமோ அவர்களுக்கு எதுவும் உதவுவதில்லை. ஆனால், பெற்றோரைக் கசக்கிப் பிழிந்து அவர்களைச் சக்கையாகத் தள்ளுகிறது. அப்படிச் சக்கைகளாக விழுந்தவர்களைத்தான் இரண்டாம் பட்சமாக, மூன்றாம் பட்சமாக, வேண்டா வெருப்பாகக் கருதுகிறோம்!
இதிலும் பால் பாகுபாடு. அள்ளிக் கொடுத்த தந்தைக்கு ஒரு மதிப்பு. ஊட்டி வளர்த்த தாய்க்கு மற்றோர் மதிப்பு. நகரங்களில் போலி கவுரவத்துக்காகவாவது வீட்டில் வைத்துக் காப்பாற்றுவார்கள். கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்குள் வாழும் பெண்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். போதிய சத்துணவு இல்லாமல் கூனல் விழுந்து, அரைகுறை செவி, பார்வைப் புலன்களுடன் கம்பு ஊன்றி வாழ்கிறார்கள். வீட்டுக்கு வெளியே தொழுவம் அல்லது திண்ணைகளில் ஒரு சாக்கு, நெளிந்த அலுமினியத் தட்டு என்பதாகச் சுருங்குகிறது அவர்கள் வாழ்க்கை. அத்தட்டில் எப்போதாவது ஏதாவது ஒரு கவளம் விழுமா என்பதுகூடத் தெரியாது. பல சமயங்களில் தனித்து விடப்படும் அவர்களது மரணம்கூட இரண்டொரு நாள் கழித்து உடல் அழுகும் நாற்றத்தால் அறியப்படுவதும் உண்டு.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment