Published : 20 Sep 2015 10:31 AM
Last Updated : 20 Sep 2015 10:31 AM

நான் பொறுப்பான அம்மா: குஷ்பு நேர்காணல்

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் சுறுசுறுப்பு குறையாமல் இருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர், படத் தயாரிப்பு நிறுவனம், 'சிம்பிளி குஷ்பு' நிகழ்ச்சி என அனைத்துப் பணிகளுக்கு மத்தியில் குஷ்புவுடன் நீண்ட நேரம் உரையாடியதிலிருந்து...

சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வீட்டீர்களே. அதற்கு காரணம் என்ன?

சினிமா என்று சொல்லும் போது அதற்குப் பிறகு ஆர்வம் வரவில்லை. 'வில்லு' படமே பிரபுதேவா, விஜய் கேட்டுக்கொண்டதால் பண்ணிக் கொடுத்தேன். அதற்கு பிறகு எல்லாம் நான் நினைத்தது மாதிரியான பாத்திரங்கள் வரவில்லை. எனக்கு பிடித்தமான பாத்திரங்கள் யாருமே சொல்லவில்லை. நான் ஒரு படம் பண்ணினால் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடக் கூடாது, அதில் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

நாயகி சம்பந்தப்பட்ட வேடங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. இப்போது அப்படியான ஒரு வேடத்தில் வந்து ஒரு நல்ல நடிகை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அந்தளவுக்கு நல்ல நடிகையும் கிடையாது. இத்தகைய படம் பண்ணும்போது பயம், கூச்சம் எல்லாமே கலந்து வந்துவிடுகிறது. என்னுடைய திரையுலக வாழ்வில் நடித்த அத்தனை படங்களும் நாயகி சம்பந்தப்பட்ட படம் என்று சொல்ல முடியாது. 'சின்ன தம்பி', 'ரிக்‌ஷா மாமா', 'நடிகன்', 'மலபார் போலீஸ்' என நான் பண்ணிய படங்களில் முக்கியமான படங்கள் பல பி.வாசு சார் இயக்கியது தான்.

தொலைக்காட்சி நாடகங்களிலும் இப்போது காண முடிவதில்லையே..

நாடகங்கள் நடிக்க வேண்டும் என்றால் மாதம் 15 நாள் ஒதுக்கியே ஆக வேண்டும். இப்போது தேசிய செய்தித் தொடர்பாளராக அரசியலிலும் இருப்பதால் என்னால் நாடகங்கள் ஒத்துக்கொள்ள முடியவில்லை. திடீரென்று மீட்டிங் இருக்கும், டெல்லி போக வேண்டியது இருக்கும் அச்சமயத்தில் என்னால் படப்பிடிப்பிலிருந்து கிளம்ப முடியாது. நான் தயாரிப்பாளராக இருந்தாலும், வெளி தயாரிப்பாளராக இருந்தாலும் என்னால் ஒரு பாதிப்பு வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். 'சிம்பிளி குஷ்பு' நிகழ்ச்சி நான்தான் பண்ணுகிறேன். நமக்கு எப்போது வேலை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல மாற்றிக்கொள்வேன்.

உங்களுடைய தினசரிப் பணிகள் குறித்துச் சொல்லுங்கள்..

காலையில் 5:45 மணிக்கு எழுந்துவிடுவேன். உடற்பயிற்சி எல்லாம் பண்ண மாட்டேன். என்னுடைய மிகப் பெரிய உடற்பயிற்சியே இரண்டு குழந்தைகளையும் தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதுதான். முதல் வேலை சமையல்தான். இரண்டு குழந்தைகளுமே பள்ளிக்கு வெவ்வேறு மதிய சாப்பாடு கேட்பார்கள். பெரிய பொண்ணு பத்தாவது படிக்கிறாள், சின்ன பொண்ணு எட்டாவது படிக்கிறாள். பெரிய பெண் பத்தாவது படிப்பதால் பள்ளிக்குக் கொண்டுபோய் விட வரக் கூடாது என்பாள். ஆனால், இருவரையும் பள்ளியிலிருந்து அழைத்துவர நான் கண்டிப்பாகச் சென்றுவிடுவேன். ஞாயிற்றுகிழமை கோடி ரூபாய் கொடுத்தாலும் வேலை செய்ய மாட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே போவேன்.

தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும்போது படிப்பதற்கு எப்படி நேரம் ஒதுக்குவீர்கள்?

படிக்க நிறைய ஆசைப்பட்டது உண்மைதான். இப்போது அதற்கு நேரமில்லை. என்னுடைய குழந்தைகள், கணவர் உள்ளிட்ட என் குடும்பத்தினர் என்னைச் சார்ந்து இருக்கிறார்கள். கேஸ் தீர்ந்து போனால்கூட எனக்குதான் போன் பண்ணுவார்கள். ஏதாவது தேவை என்றால் எந்த நாட்டில் வேறு மணிக்கணக்கில் இருந்தால்கூட எனக்கு போன் பண்ணுவார்கள். நான் அப்படிப் பண்ணிவிட்டேன். அது சரியா, தவறா என்று தெரியவில்லை. அனைவருமே அப்படிப் பழகிவிட்டார்கள்.

ட்விட்டர் தளத்தில் எப்போதுமே தீவிரமாக இயங்கிவருகிறீர்களே..

ஃபேஸ்புக்கில் நான் இல்லை. ட்விட்டரில் மட்டும்தான் இருக்கிறேன். காலையில் குழந்தைகளுக்கு சமையல் பண்ணும் போது நாட்டில் என்ன சொல்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை ட்விட்டரில் தெரிந்துகொள்வேன். எங்கே இருக்கிறேன், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பதை ட்விட்டரில் தெரிவித்துவிடுகிறேன். ட்விட்டருக்கு நான் அடிமை கிடையாது. பணிகள் இருக்கும்போது சொல்ல மாட்டேன்.

ட்விட்டர் ஒரு ஜனநாயக சமூக வலைத்தளம். சுதந்திரம் என்ற பெயரில் நிறைய பேர் தப்பாக உபயோகிக்கிறார்கள். சில பேருக்கு மட்டும் அவர்கள் இருக்க வேண்டிய இடத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது அவ்வளவுதான்.

உங்கள் வீட்டில் பணியாற்றுபவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தீர்கள். அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறீர்களா?

என் வீட்டில் பணியாற்றுவர்களைப் பணியாட்களாக நாங்கள் பார்ப்பதில்லை, எனது குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்க்கிறோம். அந்தப் பெண் எங்கள் வீட்டில் 10 வருடமாக இருக்கிறாங்க. வளைகாப்புக்கு அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த பையன் தர்ஷன் என்னிடம் ரொம்ப விளையாடுவான். நான் இல்லாதபோது, குழந்தையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அக்கா, நீங்க வேலை இருந்தால் பாருங்கள் என்று என் குழந்தைகள் சாப்பாடு கொடுப்பது, தூங்க வைப்பது என்று பார்த்துகொள்வார்கள். அவர்கள் என் குடும்பத்தினர்தான்.

என் வீட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பணியாட்களை யாருமே பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. அக்கா, அண்ணன், மாமா இப்படிதான் அழைக்க வேண்டும். வாங்க, போங்க என்று தான் பேச வேண்டும். என்னுடைய குழந்தைகளிடமே நான் வாங்க, போங்க என்று தான் பேசுவேன்.

அதிகமாக கோபப்படும் குஷ்புவை இப்போது காணவில்லையே. என்ன காரணம்?

இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். பஞ்சாயத்துக்கு யாருமே வரவில்லை அவ்வளவுதான். இப்போது குஷ்புவைப் பற்றி அனைவருக்குமே தெரியும். அதனால் என்னை யாருமே வம்புக்கு இழுக்க மாட்டார்கள். பெண் என்பதாலும் நடிகையாக இருந்ததாலும் சண்டை போட்டால் அமைதியாகப் போய்விடுவாள், ஓரமாக உட்கார்ந்துவிடுவாள் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு குஷ்பு என்றால் யார் என்று காட்டினேன்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பெண்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறதே?

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும் போது ஒரு புறம் சந்தோஷம் இருந்தாலும் மறுபுறம் பயம் இருக்கிறது. 24 மணி நேரமும் பசங்களோடு என்ன பண்றாங்க, யார்கிட்ட பேசுறாங்க என்று இருக்க முடியாது. அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அவர்களுக்கு தெரியாமலே அவர்களை கண்காணிக்க வேண்டியதிருக்கிறது. பசங்க மீது முதலில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த நம்பிக்கையை மீறி நம்ம எதுவும் செய்துவிடக் கூடாது என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். அதைப் பண்ணாதே, இங்கு போகாதே என்று கூற ஆரம்பித்தால் திருட்டுத்தனமாகச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

திருட்டுத்தனமாகப் பெண்களை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருபவர்கள் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக எப்படி முன் ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள்?

இப்போதும் நான் எந்த ஹோட்டலுக்கு போனாலும், CAM SCANNER வைத்துக்கொண்டு எங்காவது கேமிரா இருக்கிறதா என்று பார்ப்பேன். குழந்தைகளை எங்காவது அழைத்துப் போனால், எந்த மாதிரியான உடை அணிகிறார்கள் என்று பார்க்க வேண்டியதிருக்கிறது. மார்டன் உடை அணிந்துகொண்டு எனது குழந்தையை பொது இடத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு அம்மாவாக எனது குழந்தைகளுக்கு உடை விஷயத்தில் இது சரி, இது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஒரு படத்துக்கோ, ஷாப்பிங்கோ போனால் ஷார்ட் ஸ்கர்ட் போட்டு வந்துவிடுகிறார்கள். அவர்கள் மாடியில் நின்றால் கீழே நிற்பவர்களுக்கு என்ன தெரியும் என்பது அவர்களுக்கு தெரிய மாட்டேன் என்கிறது. எஸ்கலேட்டரில் சொல்லும்போது கேமிரா போன் மூலமாகப் படம் எடுக்கலாம் என்பது அவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. இதை எல்லாம் நான் என் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பேன். அவர்களும் புரிந்துகொள்கிறார்கள்.

உங்களுடைய குழந்தைகள் அப்பா செல்லமா, அம்மா செல்லமா?

என்னுடைய வீட்டில் நான்தான் ஹிட்லர். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. என்னுடைய இரண்டு குழந்தைகளையும் தூக்கத்தில் எழுப்பி “நீ அம்மா செல்லம்தானே” என்று கேட்டால் “இல்லை.. அப்பா” என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிடுவார்கள். குழந்தைகளைத் திட்டுவது உண்டு, அடிக்க எல்லாம் மாட்டேன். அப்பாவிடம் செல்லம் அதிகம். அவர்கள் எது கூறினாலும், அப்பா சரி என்று சொல்லிவிடுவார்.

ஒரு புறம் காதல் திருமணம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் திருமண முறிவும் அதிகரித்துவருகிறது. 15 ஆண்டுகளாக இணைந்து வாழும் நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதை மிகவும் முக்கியம். ஆம்பிளை ஆட்கள் வெளியே சென்று விட்டால் “என்ன பண்றீங்க”, “எப்போ வருவீங்க” போன்ற விஷயங்கள் மட்டும் வேண்டாம். நானும் சுந்தர் சாரும் திருமணமாகி 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கல்யாண வாழ்க்கையில் சண்டையே வரவில்லை என்று சொன்னால் அது மிகப் பெரிய பொய். ஏன்தான் திருமணம் பண்ணிக்கொண்டோம் என்று சண்டை போடும் அளவுக்கு போய் இருக்கிறோம். ஆனால், அனைத்தையும் தாண்டி மரியதை, அன்பு இருக்கிறது. குடும்பம் என்று ஒன்று இருக்கிறது. கணவன், மனைவி சண்டைபோட்டுக்கொள்ளலாம் அப்பா, அம்மா சண்டையிடக் கூடாது. குழந்தை வளரும்போது அவங்களுக்காக சந்தோஷமான பாதுகாப்பான சூழல் கொடுக்க வேண்டும். அதற்காக நானும், சுந்தர் சாரும் நிறைய விட்டுக் கொடுத்து போய்க்கொண்டிருக்கிறோம்.

பெண்கள் சம்பாத்தியம் செய்வதால் தான் பிரச்சினை என்று நினைக்கிறீர்களா?

சம்பாத்தியம் என்பது இருக்க வேண்டும். சுதந்திரமாகவும் ஆக இருக்க வேண்டும். அது மட்டுமே வாழ்க்கை என்றாகி விடக் கூடாது. இன்றைக்கு நிறைய பேர் சண்டையிட்டுக்கொள்வதற்குக் காரணம் ஈகோதான். நீ இவ்வளவு சம்பாதிக்கிற, நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன், பிறகு நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு குடும்பம் என்று வந்துவிட்டால் பெண்கள் அதற்காக விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே குடும்பத்தை உருவாக்க முடியும். குடும்பம் நல்லாயிருக்கு என்றால் அதற்குக் காரணம் பெண்தான், சிதறிப் போய் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெண்தான்.

சென்னைக்கு வந்து 29 வருடங்களாகிவிட்டது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?

நான் சென்னைக்கு வந்து 29 வருடமாகிறது. 16 வயதில் சென்னை வந்தேன். இந்த செப்டம்பரில் எனக்கு 45 வயது ஆகிறது. 29 வருடம் கழித்து என்னை பேட்டி எடுக்கிறீர்கள் பார்த்தீர்களா அதையே நான் எனது வெற்றியாகத்தான் பார்க்கிறேன். எந்த பிரச்சினை வந்தாலும் சாதிக்க முடியும் என்ற மன தைரியம் இருந்தது. பிரச்சினை வந்தாலும் உடனே டென்ஷனாகி நேரத்தை வீணடிக்கக் கூடாது. நான் எதையுமே ரொம்ப பாசிட்டிவாக அணுகக்கூடிய பெண்.

நீங்கள் கடைசியாக அழுத தருணம் எது?

என்னுடைய தயாரிப்பு லோகோ வந்தவுடன் WE MISS YOU என்று ஒருத்தருடைய படம் வரும். உபினா ஆன்ட்டி உண்மையில் என்னுடைய HAIR DRESSER. என்னுடைய முதல் படத்தில் இருந்து கடைசி காலம் வரை என்னுடன்தான் இருந்தார்கள். என்னுடைய அம்மாவைவிட அதிக நேரம் அவர்களுடன் தான் செலவழித்திருக்கிறேன். ஆன்ட்டி படப்பிடிப்பில் இருக்கிறார்கள் என்றால் நான் இருக்கிறேன் என்று அர்த்தம். என்னுடைய நிழல் அவங்கதான். என்னுடைய நல்லது, கெட்டது, ஏற்றம், இறக்கம், வலி, சந்தோஷம், துக்கம் என அனைத்திலும் அவங்க இருந்திருக்கிறாங்க. 3 வருடத்துக்கு முன்பு என்னை விட்டுவிட்டு போயிட்டாங்க. அப்போது தான் என் வாழ்க்கையில் அதிகமாக அழுத தருணம்.

உங்களுடைய குழந்தைகள் புகைப்படங்களை வெளியிடும்போது வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்னுடைய குழந்தைகளோடு நிற்கும்போது குட்டியாக இருக்கிறேன் என்றால் நான் என்ன பண்ண முடியும்? இருவருமே 6 அடி வளர்ந்து விட்டார்கள். இருவருமே அப்பா அளவுக்கு இருக்கிறார்கள். அதற்கு நான் என்ன பண்ண முடியும்? குழந்தைகளுக்கு எடையைக் குறைக்க வேண்டும் என்று தோன்றினால் தானாகவே பண்ணிவிடுவார்கள். எனது பெரிய பெண் ரொம்ப எடையோடுதான் இருந்தாள். தானாகவே குறைத்துவிட்டாள். சின்ன பெண்ணுக்கு 12 வயதுதான் ஆகிறது.

என் குழந்தைகளுக்கு அவங்க அப்பா சம்பாதித்து கொடுக்கிறார், நான் ஆசையாக சமைத்து போடுகிறேன். அவங்க ஒல்லியாக இருக்கிறார்கள், குண்டாக இருக்கிறார்கள் என்று கேட்கிற தகுதி, உரிமை யாருக்குமே கிடையாது. என் மீது விமர்சனம் வைத்தால்கூட விட்டுவிடுவேன், என் குழந்தைகளை விமர்சனம் செய்தால் அடிப்பட்ட புலியாக மாறிவிடுவேன். நானாவது அடிப்பட்ட புலி, சுந்தர்.சி வேறு மாதிரி மாறிவிடுவார். என்னுடைய குழந்தைகளை விமர்சிக்கும் உரிமை யாருக்குமே கிடையாது.

பெரிய பொண்ணுக்கு பத்திரிகையாளராகவும், சின்ன பொண்ணுக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நாயகி எல்லாம் வாய்ப்பே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x