Last Updated : 20 Sep, 2015 03:16 PM

 

Published : 20 Sep 2015 03:16 PM
Last Updated : 20 Sep 2015 03:16 PM

சமையலறையில் கருகும் மனிதவளம்

பிரபல திருமண இணையதளம் ஒன்று, கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய வாழ்க்கை முன்னுரிமைகளை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. திருமணத்துக்கு முன்பு ‘பணி வாழ்க்கை’யை முதல் முன்னுரிமையாக 53 சதவீதப் பெண்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். கிட்டத்தட்ட 51 சதவீதப் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் வருங்காலக் கணவருக்கே முதல் முன்னுரிமை என்று சொல்லியிருந்தனர். அவர்கள் ‘பணி வாழ்க்கை’யை நான்காவது இடத்துக்குத் தள்ளியிருந்தனர். ஆனால், பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கைக்கு இந்த நான்காவது இடத்தைக்கூட அளிக்க விரும்பவில்லை.

மனிதவள மேம்பாடு குறித்தும் அதைச் சிந்தாமல் சிதறாமல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றியும் இன்று நிறையவே பேசப்படுகிறது. பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகரான கல்வியும் அறிவும் பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஒட்டுமொத்த மனித வளத்தின் சரிபாதியாகக் கொள்ளப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், திருமணம் பெண்களின் மனிதவளத்தை அடியோடு முடக்கிப்போட்டுவிடுவதையே மேற்கண்ட ஆய்வு காட்டுகிறது.

கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்து நன்றாகப் படித்து, நல்ல பணியில் இருக்கும் பெண்களே திருமணத்துக்குப் பிறகு தங்கள் மனித வளத்தைப் பயன்படுத்த முடியாமல் அதிகம் தவிக்கின்றனர்.

திறமையின் தேடல் திருமணம்வரை

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது மாணவர்களைவிட மாணவிகளே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைகின்றனர் என்பது தெரிந்த விஷயம். கல்லூரியில் சராசரி சதவீதத்துடன் தேர்ச்சியடையும் ஆண்களின் மனிதவளம் அவர்களின் பணி வாழ்கையின் மூலம் சமூகத்துக்குப் பயன்படுகிறது. ஆனால், எண்பது சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று வெளிவரும் பெண்களின் மனிதவளம்கூடக் குடும்ப வாழ்க்கையின் கோணல் சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போய்விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கும் பயன்படாமல், சமூகத்துக்கும் பயன்படாமல் வீணாகிறது. தாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துக்குள் முடங்கிப்போகும் அவலம் பற்றிய மனவேதனையும் குற்றவுணர்வும் சில பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலான பெண்கள் இதைத் திருமண வாழ்க்கையின் இயல்பான மாற்றமாக எடுத்துக்கொண்டாலும் எல்லோராலும் அப்படி விட்டுவிட முடியவில்லை.

மனநிறைவைப் பறித்த மண வாழ்க்கை

சுதாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்திற்கு முன் அவர் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்தினர் விரும்பாததால் வேலையை விட்டுவிட்டார். ஆனால் அது அவருக்கு வலி மிகுந்த முடிவு. “ஆசிரியர் பணி என்பது என் கனவு. திருமண வாழ்க்கைக்காக அதை சமரசம் செய்துகொண்டதை என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணத்துக்கு முன்பு ஆசிரியராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் மனநிறைவுடன் கழிந்தது. இப்போது என்னுடைய ஒவ்வொரு நாளும் சமையலறையில் தொடங்கி சமையலறையில்தான் முடிகிறது. தினமும் கணவருக்கு ‘லஞ்ச்’ பேக் செய்வதிலும், மாமியார், மாமனாரை கவனித்துக்கொள்வதிலும், பூஜை செய்வதிலும்தான் நகர்கின்றன என் நாட்கள். ஒரு கட்டத்தில், என்னையே என்னால் எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது. ஒரேயடியாக என் சுயத்தை இழந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். என் கணவர் குடும்பத்தினரிடம் எப்படியோ சம்மதம் வாங்கி இப்போது என் மேல்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால், மேல்படிப்பை முடித்தவுடன் என்னால் வேலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால், திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் என் மாமனார், மாமியார் பேரக் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இன்னும் எப்படியும் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் என்னால் வேலைக்குச் செல்ல முடியும். எப்படியாவது என் ஆசிரியர் பணிக்கு மீண்டும் சென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்” என்று சொல்கிறார் சுதா.

பலியாகும் பணி வாழ்க்கை

திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொள்ளும் நிலைமை எந்த ஆணுக்கும் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்களால் பணி வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்துத் தொடர முடிவதில்லை. அப்படியே முயற்சிசெய்து தொடர்ந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதே பல பெண்களின் அனுபவம்.

ஸ்வேதாவின் அனுபவமும் அப்படிப்பட்டதுதான். “பொறியியல் படித்து முடித்தவுடன் எனக்குப் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், என் பணி வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள் என் அப்பா யாருமே எதிர்பாராத விதமாக எனக்குத் திருமண ஏற்பாடு செய்துவிட்டார். அதனால், நான் முயற்சி செய்தும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. திருமணமான அடுத்த ஆண்டே எனக்குக் குழந்தை பிறந்தது. திடீரென்று என் கணவர் பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார். இந்தச் சமயத்தில், அதே நிறுவனத்தில் எனக்கு மறுபடியும் வேலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. என் மாமனார், மாமியாருக்கு நான் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லையென்றாலும் என்னைத் தடுக்க முடியவில்லை. குழந்தையை என் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வேலைக்குச் சென்றேன். அந்த மூன்று ஆண்டுகளில் என் கணவர் வீட்டார் என்னை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தினார்கள். நான் என்ன கருத்து சொன்னாலும் ‘எல்லாம் சம்பாதிக்கிற திமிர்’ என்று சொன்னார்கள். என் கணவரோ, அலுவலகத்தில் இருக்கும்போது அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லையென்றால்கூட என் நடத்தையை சந்தேகப்பட்டுப் பேசுவார். ஒரு கட்டத்தில், இவர்களுடைய பேச்சு தாங்க முடியாமல் வேலையை விட்டுவிட்டேன். அதற்குப் பிறகுதான் என் கணவரும், அவர் அம்மா, அப்பாவும் அமைதியானார்கள். இப்போது அவர் ஒரு சுமாரான வேலைக்குச் செல்கிறார். நான் என் எல்லாத் தேவைகளுக்கும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் சுயமரியாதை, என் அடையாளம் என எல்லாவற்றையும் இழந்துவிட்டுத்தான் என் திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஸ்வேதா.

பணி வாழ்க்கையா, குடும்ப வாழ்க்கையா?

சுதா, ஸ்வேதா இருவரும் திருமணத்துக்குப் பிறகு பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டார்கள். ஆனால், வினோதாவின் திருமணமே ‘திருமணமான பிறகு வேலைக்குப்போக மாட்டேன்’ என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுதிமொழி அளித்து அதன்பேரில்தான் நடக்கவிருக்கிறது. “கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்பதற்காகப் பல சவால்களைக் கடந்து ‘எம். ஃபில்’ வரை படித்தேன். ஆனால், என் அம்மாவும், அப்பாவும், ‘நீ படிக்கிறேன், படிக்கிறேன் என்று சொல்லி இருபத்தியாறு வயதாகிவிட்டது. உனக்குப் பிறகு உன் தங்கைக்கும் திருமணம் செய்துகொடுக்க வேண்டும். அதனால், சீக்கிரமாகத் திருமணம் செய்துகொள்’ என்று என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். அதனால், வேறு வழியில்லாமல் நானும் திருமணத்துக்கு சம்மதித்தேன். ஆனால், நான் வாழ்க்கையில் மிக மோசமான சமரசத்தைச் செய்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. குடும்பமா, பணி வாழ்க்கையா என்று வரும்போது, குடும்பத்தைத்தான் என்னால் தேர்வுசெய்ய முடிந்தது” என்று சொல்கிறார் வினோதா.

சிந்தனை மாற்றம் தேவை

சுதா, ஸ்வேதா, வினோதா...இவர்களைப் போல்தான் இந்தியாவில் பல பெண்கள் திருமண வாழ்க்கைக்காகப் பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டு தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறார்கள். நம் சமூகம், இன்னும் பெண்களை மனிதவளமாகக்கூட கருதவில்லை. ஒரு பெண்ணுக்கு அவளது ஆற்றலைப் பறைசாற்றும் அடையாளங்கள் பல இருக்க இல்லத்தரசியாக இருப்பதை மட்டுமே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வரை பெண்களின் மனிதவளம் சமையலறையில் வீணாகிக்கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x