Published : 28 Jun 2020 09:49 AM
Last Updated : 28 Jun 2020 09:49 AM
எல்.ரேணுகாதேவி
மெல்லிய பூந்தூறலில் நனையக்கூட என் தோழிக்குப் பயம். அவளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதால் சுட்டெரிக்கும் கோடையிலும் வெந்நீரைத்தான் குடிப்பாள். தன் உடல்நலன் குறித்து அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் அவள், தற்போது கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிட்டாள்.
சென்னையில் வசித்துவரும் அவளுக்கு ஐந்து வயதிலும் ஒரு வயதிலும் இரண்டு குழந்தைகள். தங்க நகைகளுக்குக் கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறாள்.
விடுப்பு இல்லாத வேலை
கரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்புதான் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை என அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருந்தாள். ‘நோட்டீஸ் பீரிய’டில் வேலைசெய்து வந்ததால் ஊரடங்கில் அவளுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை. தினமும் அலுவலகத்துக்குச் சென்றுவரு வதால் வீட்டுக்குள் நுழைந்ததும் எந்தப் பொருளையும் தொடாமல் குளித்து முடித்த பின்தான் குழந்தையைத் தூக்குவாள். ஆனால், மளிகைக்கடை நடத்திவரும் தோழியின் மாமனார் இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினாரா என்பது தெரியவில்லை. அவளுடைய கணவரும் அலுவலகம் சென்று வந்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்திலும் பல நிறுவனங்கள் செயல் பட்டுவந்ததால், ஒரே வீட்டைச் சேர்ந்த மூவர் வெளியே சென்று வந்துள்ளனர்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்
இந்நிலையில் அவள் திடீரெனக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். காய்ச்சலுக்கு மாத்திரை எடுத்துக் கொண்டதும், ஒரே நாளில் காய்ச்சல் சரியாகிவிட்டது. ஆனால், கடுமையான உடல்வலி இருந்துள்ளது. தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் காய்ச்சல் இருப்பதுதான் கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறி என அவள் தவறாக நினைத்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் அலுவலகத்தில் மதியம் மூன்று மணியாகியும் அவளுக்குப் பசி எடுக்கவில்லை.
உணவை வீணாக்கக் கூடாது என்று சாப்பிடச் சென்றவளுக்கு வாயில் உணவை வைத்ததுமே குமட்டலாக வந்துள்ளது. அதற்கு அடுத்த நாள் அடுப்பில் பால் பொங்கித் தீய்ந்ததுகூடத் தெரியவில்லை. பிறகு, எலுமிச்சை, யூகலிப்டஸ் தைலம் எனப் பல பொருட்களை அவளுடைய கணவர் முகர்ந்துபார்க்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவளுக்கு எந்த வாசனையும் தெரியவில்லை. அப்போதுதான், இது கரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். அதற்குள்ளாகவே இரு குழந்தைகளும் தோழியின் அம்மாவும் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மாமனாருக்குப் பல நாட்களாக இருமல் இருந்தாலும், அவர் சகஜமாகவே இருந்துள்ளார்.
ஒரே வீட்டில் ஐவருக்குத் தொற்று
பின்னர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் சென்றுள்ளனர். ஆனால், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மூலமாக வருபவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு நேரடி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்துத் தனியார் பரிசோதனை மையத்தில் மூவாயிரம் ரூபாய் செலவழித்து கரோனா பரிசோதனை செய்ததில், அவளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பிறகு பரிசோதனை முடிவை எடுத்துக்கொண்டு ஓமந்தூரார் மருத்துவ மனைக்குச் சென்றாள். அங்கே கரோனா வைரஸ் மறுபரிசோதனையுடன் நுரையீரல் சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அவள் உறைந்துபோனாள்.
ஐந்து நாட்களுக்கான மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தன்னால் குழந்தைக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவளைத் தொற்றிக்கொண்டது. இதனால், குழந்தைக்குப் பால் கொடுப்பதை நிறுத்தினாள். உடல்வலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுடன் தாய்ப்பால் கட்டிக்கொள்ள, பெரும் வேதனையை அனுபவித்தாள். முதல் நாள் இரவு முழுவதும் வேதனையுடன் கழிந்தது.
மறுநாள் வீட்டில் உள்ள அனைவருக் கும் பரிசோதனை செய்து கொண்டதில் கணவர், மாமியார் தவிர்த்து இரு குழந்தைகள், தோழியின் அம்மா, மாமனார் ஆகிய நால்வருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டதால், தாய்ப்பால் கொடுப்பது நல்லது என மருத்துவர்கள் கூறியுள்ள னர். இதையடுத்து வீட்டில் உள்ள தனியறையில் குழந்தைகளுடன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். நீரிழிவால் பாதிக்கப்பட்ட அவளுடைய அம்மாவும் இதய நோயால் பாதிக்கப்பட்ட மாமனாரும் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
வேதனையான நாட்கள்
தனியறையில் குழந்தைகளுடன் தனிமைப்படுத்திக்கொண்ட தோழிக்கு, அவளுடைய கணவர் பக்கபலமாக இருந்தார். முகக் கவசம் அணிந்துகொண்டு அவர்களுக்கு உணவு கொடுப்பது, அறையைச் சுத்தம்செய்வது போன்றவற்றைச் செய்தார். ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தை களையும் கவனித்துக் கொள்வது என் தோழிக்குப் பெரும் போராட்டமாகவே இருந்தது. சுவையின்மையால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளைச் சமாளித்துச் சாப்பிட வைப்பது.
அவர்களுக்கான அன்றாடத் தேவைகளைக் கவனித்துக் கொள்வது என கரோனா தனிமை நாட்கள் அவளுக்கு மிகுந்த மனவுளைச்சலையே அளித்தன. வீட்டுத் தனிமையில் 18 நாட்கள் இருந்த அவளின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாட்கள் உணவின் சுவை தெரியாமல் இருந்தவளுக்குத் தற்போது சுவையும் மணமும் தெரியத் தொடங்கியுள்ளன. ஆஸ்துமா நோயாளி என்பதால் மூச்சிளைப்பு மட்டும் அவ்வப் போது உள்ளது. இதற்கு ஆஸ்துமாதான் காரணமா அல்லது கரோனாவின் பாதிப்புகளில் ஒன்றா என்பதை அவளால் அறிய முடியவில்லை.
மறுபரிசோதனை நல்லது
என் தோழிக்கு இதுவரை கரோனா மறுபரிசோதனை மேற்கொள்ளப்பட வில்லை. மறுபரிசோதனை செய்தால் தானே கரோனாவிலிருந்து விடுபட்ட நிம்மதி ஒருவருக்குக் கிடைக்கும்? ஆனால், தோழிக்கு மருத்துவமனையில் ஐந்து நாட்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பினார்களே தவிர, மீண்டும் எத்தனை நாட்கள் கழித்துப் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று சொல்லியிருக்கவில்லை. மாநகராட்சி அலுவலர்கள் யாரும் வீட்டுக்கு வந்து பரிசோதனை மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தில் 35,000-க்கும் மேற்பட்ட வர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கெல்லாம் மறுபரிசோதனை செய்யப்பட்டதா அல்லது என் தோழியைப் போல் மறுபரிசோதனை செய்யாமல் அனுப்பப்பட்டார்களா என்ற கேள்வியைத்தான் என் தோழியின் கரோனா அனுபவம் எழுப்புகிறது. இதுபோல் விடைதெரியாத பல கேள்விகள் கரோனா நோயாளிகளிடம் உள்ளன. அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் எப்படி அவர்கள் நிம்மதி யாக இருக்க முடியும்?
கட்டுரையாளர், தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT