Published : 09 Aug 2015 12:29 PM
Last Updated : 09 Aug 2015 12:29 PM

பெண்களுக்குக் கிடைத்துவிட்டதா சுதந்திரம்?

சுதந்திர இந்தியாவில் பெண்கள் அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டதா? பேச்சுரிமை, எழுத்துரிமை என்று இந்திய அரசு வரையறுத்து வைத்திருக்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் கிடைத்துவிட்டனவா? சுதந்திரத்தின் ஆழ அகலங்களை ஆண்கள் அனுபவிக்கிற அதே அளவில் பெண்களும் அனுபவிக்கிறார்களா? நாடு முன்னேற்றப் பாதையிலும் வளர்ச்சிப் பாதையிலும் செல்கிறது என்று பெருமிதத்துடன் சொல்லும் மத்திய, மாநில அரசுகள் அந்த முன்னேற்றப் பட்டியலில் பெண்களின் பெயர்களைச் சேர்த்திருக்கின்றனவா?

பெண்களை முன்னேற விடாமல் பிணைத்திருக்கிற தளைகள் என்னவென்று ஆராய்வதற்கு முன்னால், பெண்கள் தங்களுக்குத் தாங்களே பூட்டிக்கொண்டிருக்கும் சங்கிலியை முதலில் அறுத்தெறிய வேண்டும்.

சமையலைப் பொதுவில் வைப்போம்

தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தைச் சமையலறையிலேயே கழித்துவிடுகிற இந்தியப் பெண்கள் ஏராளம். பல பெண்கள் சமையலைத் தங்கள் அடிப்படைக் கடமையாகவும் அடையாளமாகவும் கருதுகிறார்கள். உணவு எப்படி ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவோ அப்படித்தான் சமையலும். சில பெண்கள் சமையலறையைத் தாங்கள் ஆட்சி செய்யும் இடமாக நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள். சமையலறையில் வெந்து, மணக்கிற உணவு வகைகள் மட்டுமே தன் அடையாளம் என்று ஆனந்தப்பட்டுக்கொள்கிற பெண்கள், தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாகத் தாங்களே பெரும் சுவரை எழுப்பிக்கொள்கிறார்கள்.

கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகிற குடும்பங்களில் இன்று பல ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும் சமையல் வேலையை மட்டும் தவிர்த்துவிடுகிறார்கள். சமைப்பது பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட வேலையா?

செயலும் முக்கியம் மகன்களே

எப்போதுமே தீய்ந்து, ஆறிப் போன தோசைகளைச் சாப்பிடும் தங்கள் அம்மாக்களைப் பற்றி கவிதைகள் புனையும் ஆண்கள், ஒரு நாளாவது தங்கள் அம்மாவை உட்கார வைத்து, சுடச்சுட தோசை சுட்டுத் தந்திருப்பார்களா? இல்லை தங்கள் மனைவிக்குத்தான் ஆறிப் போன தோசையில் இருந்து விடுதலை அளித்திருப்பார்களா? பெண்களை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டிவைத்திருப்பதில் சமையலுக்கு முக்கியப் பங்குண்டு என்பதால், இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

தாயுமானவர்கள் தேவை

சமையலுக்கு அடுத்தபடியாக குடும்பம் மற்றும் உறவுகளைப் பேணுதல், வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு ஆகிய அனைத்தும் பெண்களின் பிரத்யேக வேலைகளாக அடையாளப் படுத்தப்படுகின்றன. மற்ற விஷயங்களில் ஓரளவு கைகொடுக்கிற ஆண்கள், குழந்தை வளர்ப்பில் பின்வாங்கிவிடுகின்றனர்.

‘நீ சொன்னாதான் அவன் கேட்பான், உன் பேச்சைத்தான் அவள் கேட்பாள்’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு பெண்களிடம் தள்ளிவிடப்படுகிறது.

விடுமுறை நாளில் நண்பர்களைச் சந்திக்கவோ, தன் தனிப்பட்ட வேலை நிமித்தமோ ஒரு ஆண் சட்டென கிளம்பிப் போவது போல பெண்களால் முடிவதில்லை. காரணம் குழந்தைகள். அவர்களை என்ன செய்வது? யார் பார்த்துக்கொள்வது? அவர்களுக்குச் சமையல் செய்துகொடுப்பது யார்? - இப்படி ஓராயிரம் கேள்விகள் பெண்ணின் மனதில் எழும். அப்படியே வெளியே கிளம்பினாலும் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்துவிட்டுக் கிளம்ப வேண்டும். அதற்கு வெளியே போகாமலேயே இருந்துவிடலாம் என்று தோன்றிவிடும்.

‘அப்படியென்ன குழந்தைகளை விட்டுட்டு ஊர் சுற்ற வேண்டியிருக்கு?’ என்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் இருந்தே பேச்சு எழும். இந்த மனநிலையைத்தான் பெண்கள் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் தாய், மனைவி, மகள் ஆகிய அடையாளங்களைத் தாண்டியும் ஒரு பெண்ணுக்கெனத் தனி அடையாளம் உண்டு. தன் சுயத்தை உணரவைக்கும் அடையாளம் அது.

மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, “திருமணமான பல பெண்கள், பிரசவத்துக்குப் பிறகு தங்களைக் கவனித்துக்கொள்வதே இல்லை. கணவருக்கும் குழந்தைகளுக்கும் பார்த்துப் பார்த்து செய்துவிட்டு தங்கள் ஆரோக்கியத்தைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்” என்று சொன்னார். அவர் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனத்தைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களுக்கும் சிறகு உண்டு

தனக்குக் கிடைக்காத வசதிகளை எல்லாம் தன் மகளுக்குச் செய்துதர நினைக்கும் அம்மாக்கள், சுயசார்புடன் வாழக் கற்றுத் தருவதில்லை. பத்து வயது குழந்தை ஓடியாடி விளையாடினாலே, ‘எதுக்கு ஆம்பிளை பையன் மாதிரி தங்கு தங்குன்கு குதிச்சிக்கிட்டு இருக்க. அடக்கமா ஒரு இடத்துல உட்கார்ந்து விளையாடு’ என்று சொல்லும் அம்மாக்கள் இப்போதும் உண்டு. ஆண் குழந்தைகளின் சிறகுகளுக்கு எண்ணெய் பூசி வளர்த்துவிடும் அம்மாக்கள், பெண் குழந்தைகளின் சிறகுகளை முளையிலேயே வெட்டிவிடுகின்றனர்.

ஆதரவுக் கரம் நீட்டுவோம்

அலுவலகங்கள், பொது இடங்களிலும் பெண்களின் செயலை முதலில் விமர்சிப்பது பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதும் வேதனைக்குரியது. மேற்கத்திய பாணியில் உடையணிந்து வரும் சக பெண் ஊழியரைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதில் தொடங்குகிறது நம் உரிமை மீறல். அடுத்தடுத்து பதவி உயர்வு பெறுகிற பெண்ணையும், அலுவலகத்தில் துணிச்சலாகக் கருத்துகளை முன்வைக்கும் பெண்ணையும் பல பெண்கள் தங்கள் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக்கொள்வதே இல்லை. இது அந்தக் குறிப்பிட்ட பெண்ணுக்கு எதிரான செயல் அல்ல, ஒட்டுமொத்த பெண் சமூகத்தையுமே பின்னுக்கு இழுக்கும் செயல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்தில் மாற்றுக் கருத்து சொல்கிற பெண்களையும், மாற்றத்துக்கு வித்திடுகிற பெண்ணியவாதிகளையும் ஆழமான புரிதலுடன் அணுகுகிற பெண்களின் எண்ணிக்கை உயர வேண்டும். குடும்ப உறவு சார்ந்த சிக்கலிலும் பெண்ணுக்கு எதிரான குற்றங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களைப் பெண்கள்தான் அதிகமாக வசைபாடுகிறார்கள். பெண்களின் வாயிலாகவே ஆணாதிக்கம் இந்தச் சமூகத்தில் மிக நுட்பமாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x