Published : 16 Aug 2015 12:33 PM
Last Updated : 16 Aug 2015 12:33 PM
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த வரலாற்றில் எப்படி காந்தியைத் தவிர்த்துவிட்டுப் போராட்டங்களைப் பற்றிப் பேச முடியாதோ, அப்படித்தான் பெண்களைத் தவிர்த்தும் இந்திய விடுதலை என்பதை கற்பனை செய்ய முடியாது.
1857-ல் வெடித்த சிப்பாய் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்று வரையறை செய்கிறோம். இந்த முதல் சுதந்திரப் போர் வெடித்த காலம் முதல் விடுதலை பெற்ற கணம் வரையான போராட்டமானாலும் சரி, அதற்கு முந்தைய வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மன்னர்கள், பாளையக்காரர்கள் போராட்டமானாலும் சரி, இவற்றிலெல்லாம் சரி பாதியினரின் பங்களிப்பு அதிகம்.
1857-க்கு முன்பாகவே சிவகங்கைச் சீமையில் வெள்ளையர் படையை எதிர்த்துப் போராடிய வேலு நாச்சியார், குயிலி, வடக்கே ஜான்சி ராணி எனத் தொடங்குகிறது பட்டியல். வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்கள் காந்தியின் வருகைக்குப் பின் அவரது அழைப்பை ஏற்றுப் பொதுவெளிக்கு ஈர்க்கப்பட்டனர். கழுத்தில், கைகளில், காதுகளில் அணிந்திருந்தவை மட்டுமல்லாமல் பெட்டிகளில் அடைபட்டுக் கிடந்த தங்க, வைர நகைகளுக்கும் விடுதலை அளித்தனர். கதர் அணிவதில் தொடங்கி ஒத்துழையாமை இயக்கம், வரி கொடா இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம் என அத்தனை போராட்டங்களிலும் அம்புஜம்மாள் முதல் ஏராளமான சத்தியாகிரகிகளை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். மிதவாதம் - தீவிரவாதம் என இரண்டு வடிவங்களிலுமே பெண்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீவிரவாத வடிவ விடுதலைப் போரை எடுத்துக்கொண்டால் வங்கத்தில் அக்னி யுகத்தைத் தொடங்கியவர்கள் கல்பனா தத், ப்ரீதி லதா வதேதார் என என்றும் நினைவில் கொள்ளத்தக்க பெண்கள். அவர்களை சிட்டகாங் வீராங்கனைகள் என்று அழைக்கிறோம். இந்தச் சிட்டகாங் போராட்டம்தான் இந்தியா முழுவதும் இளைஞர்களை எழுச்சிகொள்ளச் செய்தது. அது வங்கத்திலிருந்து தென் தமிழகம் வரை பரவியது. ஒத்துழையாமை இயக்கம், வரி கொடா இயக்கம், அந்நியத்துணி புறக்கணிப்பு, கோயில் நுழைவு என அஹிம்சை வழியில் களமாடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், வை.மு.கோதைநாயகிவரை வரலாற்றில் நிலை பெற்றுள்ளனர். நாகம்மையார், கண்ணம்மாள், அம்மு சுவாமிநாதன் கேப்டன் லட்சுமி, கே. ஜானகியம்மாள், ருக்மணி லெட்சுமிபதி, அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள் என்று இந்தப் பட்டியல் வெகு நீளமாக நீளும்.
1930-களில் விடுதலைப் போராட்டமும் கதர் இயக்கமும் தீவிரமாக இருந்தது. அப்போது கதருக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தீவிரம் காட்டியது. கதருக்கு ஆதரவான போராட்டங்களை ஆயுதம் கொண்டு அடக்கியது. மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த சொர்ணம்மாள் தனது கணவருடன் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதாகிவந்தார். ஆறு மாதங்களுக்குச் சிறையிலடைத்தாலும் வெளியே வந்தவுடன் உடனே அடுத்த போராட்டத்துக்கோ மறியலுக்கோ தயாராகிவிடுவார். இவ்வாறு நான்காவது முறையாக லட்சுமிபாய் என்பவருடன் கைதானார். அவர் உடுத்திய கதராடை போலீஸுக்கு எரிச்சலை அளித்தது. கதர் ஆடையைக் களையும்படி அடித்து உதைத்துள்ளனர். இதனால் சொர்ணம்மாளின் காது கிழிந்து செவித்திறன் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கதராடையை உருவி உடலை முழுமையாக மறைக்க முடியாத துண்டுத் துணியைக் கொடுத்து ஒரு லாரியில் ஏற்றி நள்ளிரவில் ஒரு காட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு, “இப்படியே போ, சுதந்திரம் வரும்” என்று இளக்காரமாகச் சொல்லி இறக்கிவிட்டுச் சென்றனர். அந்த சொர்ணம்மாள் 2000-ம் ஆண்டுவரை வாழ்ந்து மறைந்தார்.
அகிம்சையோ, தீவிரவாதமோ போராட்டம் எந்த வடிவமென்றாலும் ஆளும் இயந்திரம் ஆயுதத்தால்தான் பதிலளிக்கிறது! மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்தான்.
இந்தப் போராட்டங்களுக்கு ஊடாக பெண் கல்வி, விதவைத் திருமணம், பால்ய விவாக ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கத்துக்கு எதிர்ப்பு என தங்கள் உரிமைகளுக்காகவும் போராட ஆரம்பித்தனர். ஆண்கள் இப்போராட்டங்களில் முன் கை எடுத்தாலும் பின்னர் பெண்களே அவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள்; நிலையாக நின்று நடத்தினார்கள்; வெற்றியும் பெற்றார்கள். இன்றைக்கு பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள் இயற்றப்பட்டு, அவை நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்றால் அதன் பின்னணியில் அவர்களின் அயராத உழைப்பும் போராட்டங்களும் மறைந்தே இருக்கின்றன.
சுதந்திரத்துக்காக வீதியில் இறங்கிப் போராடிய பெண்களில் பலர் அதன் பின் விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் அரங்கிலும் பிரவேசித்தார்கள். ஆண்களுக்குச் சரி சமமாய் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு; மிகக் குறைந்த அளவில் அரசுப் பதவிகளிலும் அதிகாரத்திலும் பங்கேற்றார்கள். அதன் பின் அரசியல் களமே உள்நாட்டுப் போர்க்களமாக மாறிப் போனது. விடுதலை என்பது இரு பாலினருக்கும்தானே! ஆனால், விடுதலைக்குப் பிந்தைய வரலாறு சொல்லும் சேதி என்ன? அரசியலில் பெண்கள் பங்கு எத்தனை விழுக்காடு நிறைவேறியிருக்கிறது? அரசியல் இயக்கங்களின் பெண்கள் அமைப்புகள் – ஒரு சில இயக்கங்கள் தவிர்த்து - முழுமையாக அரசியல் புரிந்துணர்வை ஏற்படுத்தி இருக்கின்றனவா? போராட்டங்களுக்குப் பெண்களை ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் இயக்கங்கள், அரசியல் அதிகாரங்களில் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள மறுப்பது ஏன்?
உள்ளாட்சி அதிகாரம் தவிர்த்து 33 சதவீத ஒதுக்கீட்டைப் பெறுவதற்கே இன்னமும் பல நூறு தடைகளைச் சந்திக்கிறோம். இப்படிக் குறைவாகவேனும் பொதுவெளிக்கு வரும் பெண்களின் பொது வாழ்வின் ஆயுள் காலம் ஏன் அற்பாயுளாக இருக்கிறது? குடும்பம், அரசியல், சமூகம் என அனைத்து வெளிகளிலும் இரண்டாம் படிநிலையில் இருக்கும் நிலை எப்போது மாறும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் எப்போது கிடைக்கும்?
கொசுறு: தற்போது பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருப்பது ஒரு இளைப்பாறுதல்தான்!
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT