Last Updated : 25 May, 2014 11:17 AM

 

Published : 25 May 2014 11:17 AM
Last Updated : 25 May 2014 11:17 AM

காற்று வாங்கும் காலணிகள்

கோடை விடுமுறையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியே கிளம்பிவிடுவது பலரது வழக்கம். கோடையைச் சமாளிக்க உணவு, உடைகளில் கவனம் செலுத்துகிறவர்கள்கூட பாதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பருவகாலத்திற்கு ஏற்றவாறு நம் உணவுப் பழக்கம், உடைகளை மாற்றியமைத்துக் கொள்வதைப்போல, காலணிகளையும் மாற்றுவது அவசியம். சரியான காலணிகளை அணிவதால் கோடைக்காலத்தில் ஏற்படும் பாத நோய்களைத் தவிர்கலாம்.

கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பாலானோர் சாக்ஸ் அணிந்து செல்வர். ஆனால், வெயில் காலத்துக்கு இப்படி சாக்ஸ் அணிந்து செல்வது ஏற்றதில்லை. கோடையில் பாதங்களை முழுவதும் மூடியிருக்கும்படியான காலணிகளைத் தவிர்க்க வேண்டும். அப்படி அணிவதால், சருமத்துளைகள் சரியாக சுவாசிக்க முடியாது. எனவே, கால்களுக்கு இதம் தரும் வகையில் மென்மையாக காலணி களைத் தேர்ந்தெடுத்து அணிவது சிறந்தது.

பொதுவாக பலர் காலணிகளை வாங்கும்போது நிறத்துக்கும் டிசைனுக்கும் தருகிற முக்கியத்துவத்தை அவற்றின் வடிவமைப்புக்கும் மென்மைக்கும் தருவதில்லை. பலவகை நிறங்களில் காலணிகளை அணிவது தவறில்லை. ஆனால் அவை கோடைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பது முக்கியம். கோடைக்காலத்தில் அணிவதற்கென்றே ஃப்ளிப்-ஃப்ளாப் flip-flop), ஃப்ளோட்டர்ஸ் floaters) வகை காலணிகள் பல வண்ணங்களிலும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான மதுமிதா, “வெயிலுக்கு ஷூ, சாக்ஸ் போடுவது சரியாக இருக்காது. இந்த சம்மர் சீஸனுக்கு ஃப்ளோட்டர்ஸ்தான் ஃபேஷன். விலை குறைவாக இருப்பதால், பல டிஸைன்களில் வாங்கி, உடைகளுக்குப் பொருத்தமாக அணிகிறேன்” என்கிறார்.

சுத்தம் முக்கியம்

சரியான காலணிகளை அணிவது மட்டுமின்றி, சரியான இடைவெளியிலும், வெளியே சென்று வந்த பிறகும் பாதங்களைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதங்களில் நோய்க்கிருமிகள் மிக எளிதாக ஒட்டிக் கொள்ளும். அதனால் பாதங்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், நோய்களைத் தூரமாக வைக்கலாம். கோடையையும் அருமையாகக் கொண்டாடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x