Published : 30 Aug 2015 01:10 PM
Last Updated : 30 Aug 2015 01:10 PM

‘பெண்களின் கையில் தமிழக எதிர்காலம் - அருணா ராய் நேர்காணல்

சாதாரணப் பருத்தி சேலை, தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னா பை - இந்த இரண்டும்தான் அவருடைய நிரந்தர அடையாளம். பார்ப்பதற்கு எளிமையானவராக இருந்தாலும், சிந்தனையும் செயல்பாடுகளும் அருணா ராயின் தோற்றத்தைக் கம்பீரமாக்குகின்றன.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் உரிமைச் சட்டம், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, உணவு உத்தரவாதச் சட்டம் போன்றவை தேசிய அளவில் சட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்படவும் காரணமாக இருந்தவர். ஆசிய நோபல் பரிசான ‘மகசேசே விருதை' (2000) சமூக சேவைக்காகப் பெற்றவர்.

சென்னையில் பள்ளிப்படிப்பு, டெல்லியில் உயர்கல்வி, பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அடுத்தடுத்த படிகளை எளிதாகக் கடந்தவர். பழைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோதுதான், சாதாரண மக்களின் வாழ்க்கையை நேரடியாக உணர்ந்துகொண்டார். தான் நினைக்கும் சேவையை ஐ.ஏ.எஸ். வேலையில் செய்ய முடியாது என்ற தெளிவு ஏற்பட்டதால், ஏழே ஆண்டுகளில் அதைத் துறந்தார்.

சமூக சேவையில் ஆர்வம் கொண்டிருந்த கணவர் சஞ்ஜித் பங்கர் ராயுடன் இணைந்து ராஜஸ்தானில் எளிய மக்களிடையே பணிபுரிய ஆரம்பித்தார். 1987-ல் ‘மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன்' என்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான அமைப்பை நண்பர்களுடன் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் தேவ்துங்க்ரியில் நிறுவினார்.அந்த அமைப்பின் போராட்டங்கள்தான் தேசிய அளவில் தகவல் உரிமைச் சட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தன. சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, அவருடன் கலந்துரையாடியதில் இருந்து:

இன்றைய சூழலில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எப்படிப்பட்டவை? இந்தப் பிரச்சினைகளைப் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அரசின் நிர்வாகக் கோளாறுகளால் உடனடியாகவும் மிக மோசமாகவும் பாதிக்கப்படுவது சாதாரண ஏழைப் பெண்கள்தான். சுகாதாரம், தண்ணீர், கல்வி, எரிபொருள் போன்ற வற்றைப் பெறுவதற்கான பிரச்சினைகள் முதல் தங்க ளுக்கான சமஉரிமை, கவுரவம் போன்ற பிரச்சினைகளையும் சேர்த்தே பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்கண்ட உரிமை களைப் பெற அரசியல் பங்கேற்பு அவசியம் என்பது பெண்களுக்குப் புரிந்தே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் நாடு முழுவதும் திரளும் மக்கள் இயக்கங்களில் பெண்கள் பெருமளவு பங்கேற்றுவருகிறார்கள்.

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜஸ்தானில் தகவல் உரிமைச் சட்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தும் இரண்டு முக்கிய நபர்கள், பெண்கள்தான்: தலித் பெண்ணான நாவ்ரதியும் சஹரியா பழங்குடிப் பெண்ணான க்யார்சியும்தான் அவர்கள். அவர்கள் இருவரும் என்னுடைய நல்ல நண்பர்கள் மட்டுமல்லாமல், வழிகாட்டிகளும்கூட.

இவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என்றே வழக்கமாக வகைப்படுத்துவார்கள். ஆனால், அவர்கள்தான் என்னுடைய குரு. குறைந்தபட்ச ஊதியத்துக்காகப் போராடும் நாவ்ரதி, ஒரு பஞ்சாயத்துத் தலைவி. சஹரியா பழங்குடி சமூகத்தின் முக்கியத் தலைவியாகக் க்யார்சி திகழ்கிறார். இருவரும் தங்களுடைய போராட்டங்கள் மூலம், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்குக் குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டத்திலும் பெண்களே முன் நிற்கிறார்கள். அதைக் கவனித்து வருகிறீர்களா?

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசு, வருமானத்துக்காக மக்கள் நலனையும் ஆரோக்கியத்தையும் காவு கொடுக்கத் தயாராக இருக்கிறது. இந்த லாப வெறியால் பாதிப்புகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கும் பெண்கள் டாஸ்மாக், கள்ளச்சாராயம் போன்றவற்றுக்கு எதிராகப் பெரும்பாலான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

டாஸ்மாக் மது விற்பனை, தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அந்தப் பிரச்சினையில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்தே, தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது.

மது விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்தை, நலத் திட்டங்களுக்கான வருமானமாக அரசு பார்க்கும் பார்வை, அடிப்படையிலேயே கோளாறானது. மது விற்பனை வருமானம், எந்த வகையிலும் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான ஆதாரமாக மாறாது.

மது விற்பனையால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?

பெண்கள் மத்தியிலும், ஏழை-விளிம்புநிலை மக்களுடன் தொடர்ச்சியாகப் பணிபுரிந்துவருகிறேன் என்ற அடிப்படையில், மது குடிப்பதால் அந்த மக்களும் குடும்பங்களும் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகளை நேரடியாக உணர்ந்திருக்கிறேன். இப்பிரச்சினையால் நாடு முழுவதும் பொருளாதாரரீதியிலும், உடல்ரீதியிலும், மனரீதியிலும் குடும்பங்கள் சீரழிந்து கிடக்கின்றன. விற்பனையை அதிகரிக்கும் பேராசையுடன் அரசு மது விற்பனை செய்வது, பல்வேறு மோசமான விளைவுகளை உருவாக்கி வருகிறது.

மது விற்பனையைக் கட்டுப்படுத்தி, அதற்கான விளம்பரம், விற்பனை அதிகரிப்பை முழுமையாகத் தடை செய்ய வேண்டும். மது குடிப்பதற்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரத்தை அகற்ற, மிகப் பெரிய பிரசாரம் தேவை. உலகெங்கும் கல்வியின் ஒரு பகுதியாகவே மது குடிப்பதன் தீமைகள் குறித்துப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டிலும் இந்த நடைமுறை தேவை. மது குடிப்பதற்கு எதிரான செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டியது சட்டபூர்வ கடமை.

மதுவைப் போலவே, மிக மோசமாக அதிகரித்துவரும் மற்றொரு பிரச்சினை ஆணவக் கொலைகள். இதிலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இந்த வகையில் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழக நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

வடக்கில்தான் வாழ்கிறேன் என்றாலும், தமிழ்ச் சமூகமும் தமிழகப் பெண்களும் முற்போக்கானவர்கள் என்பது என் நம்பிக்கை. சமூக இழிவான ஆணவக் கொலைகள் (Honour killing) தமிழகத்தில் அதிகரிப்பது துரதிருஷ்டவசமானது. முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழகத்தில், இப்படி நடப்பது பெரும் கவலை தருகிறது. ஒரு தமிழ்ப் பெண்ணாக, தமிழகத்தில் இந்தக் குற்ற நடைமுறை அதிகரிக்கக்கூடாது என்றே நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு தலித் பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சாதிப் பெண்ணுடன் திருச்செங்கோடு கோயிலுக்கு அருகே பேசிக்கொண்டிருந்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கிறார். இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஒரு அப்பாவி இளைஞனுக்கு எதிரான கொடூரமான தாக்குதல் இது.

ஒவ்வொரு தனி மனிதரும் தனக்குப் பிடித்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. காலம்காலமாக நமது நாட்டில் சம உரிமை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சாசனத்தில் அம்பேத்கர் இதை உறுதிப்படுத்தியுள்ளார், அகிம்சையை நம்பிய - வாழ்ந்தும் காட்டிய காந்தி வாழ்ந்த தேசத்தில் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராக எந்தவொரு அமைப்பும் பயங்கரவாதத்தைப் பிரயோகிக்க உரிமையில்லை.

ஆணவக் கொலைகள் மூலம் பெண்களின் மதிப்பு குலைக்கப்படுவது மட்டுமல்லாமல், சாதி வேற்றுமையைத் தூக்கிப்பிடிப்பதன் மூலம் சமூகத்தைப் பின்னோக்கித் தள்ளுகிறோம். சட்டத்தின் ஆட்சி முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதையே, இது போன்ற சம்பவங்கள் எடுத்துச் சொல்கின்றன.

ஆணவக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் சாதி அமைப்புகளைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்து, இந்த அமைப்புகளுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பெண்களைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் வந்துவிட்டன. அவை முறையாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா?

பெண்களுக்கு எதிராக நிறைய சட்டங்கள் வந்தாலும்கூட, பெண்களின் உரிமைகள் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டே வருகின்றன. அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும்போதுதான், பெண்களின் பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வரும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படுவதும் இதன் ஒரு பகுதிதான்.

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டமோ, மற்ற சட்டங்களையோ நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டியது பெண்களின் பொறுப்பு மட்டுமல்ல. சிவில் சமூகமும், சமூகக் கூட்டுச் செயல்பாடுகளும் இதற்கு அவசியம்.

எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் மானியம் போன்றவற்றை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் தருவதால், குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பல பெண்கள் குடும்பத் தலைவர்களாக இல்லாமல் இருப்பதால், அவர்களுக்குப் பணம் போய்ச் சேராதே?

சமூக நல மானியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, மானியப் பணத்தை நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்து பணத்தைச் சேமிக்க அரசு முயற்சிக்கிறது. தன்னுடைய செயல்பாடுகளுக்கான பொறுப்பிலிருந்து அரசு நிர்வாகம் விலகிக்கொள்ள முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும்.

இதுபோன்று நேரடி பணப் பரிமாற்றத்தைப் பெறுவதற்கான நடைமுறை (ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது போன்று) மிகவும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் வைத்திருப்பது, கொஞ்சம் கொஞ்சமாக இத் திட்டங்களில் இருந்து மக்களை விலக்கி வைக்கும். இதில் அரசின் பொறுப்பை மக்கள் கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. அரசின் கை ஓங்குகிறது.

தங்களுக்கு எது அத்தியாவசியம் என்பது நம் நாட்டுப் பெண்களுக்குத் தெரியும். அடிப்படை சேவைகளான கல்வி, சுகாதாரம், வேலை, உணவு ஆகியவற்றையே அரசிடமிருந்து அவர்கள் கேட்கிறார்கள். மானியப் பணத்தைச் சேமிப்பதிலும், சமூக நலத் திட்டங்களைக் குழப்புவதிலும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மக்களுக்கு அந்தச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x