Published : 23 Aug 2015 03:13 PM
Last Updated : 23 Aug 2015 03:13 PM
தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் சாதனை படைத்த பல பெண்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். பெண்ணினம் இன்றைக்குப் பல சாதனைகள் படைப்பதற்கு அச்சாரம் இட்ட சென்னை பெண்களைப் பற்றி பார்ப்போம்:
எதிலும் முதலிடம்
தேசிய அளவில் பல்வேறு முதல் சாதனைகளைப் புரிந்தவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. நாட்டின் முதல் பெண் மருத்துவர் (1912), மதராஸ் மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினர் (1926), முதல் பெண் துணை சபாநாயகர், சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கவுன்சிலர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என அவருடைய சாதனைகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லை. சட்டப்பேரவையில் தேவதாசி முறையைச் சட்டப்படி ஒழிக்கப் போராடிய இவர் (1929), அடையாறில் உள்ள புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனத்தை நிறுவியவரும்கூட.
சுதந்திரக் கனல்
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வை.மு. கோதைநாயகி, சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து தேசபக்தி பாடல்களைப் பாடிய பெருமைகொண்டவர். 115 புத்தகங்களை எழுதியுள்ள அவர் ஒரு கர்னாடக இசைப் பாடகர், பாடலாசிரியர். தமிழில் துப்பறியும் நாவலை எழுதிய முதல் பெண், பத்திரிகை ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற முதல் பெண் ஆகிய பெருமைகளையும் பெற்றவர். பெண்கள் அதுவரை முயற்சிக்காத துறையான இதழியலிலும் தடம்பதித்தவர். ‘ஜகன்மோகினி' (1925) என்ற இதழையும் அவர் நடத்தினார். அந்த இதழில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். சென்னையில் காந்தி உட்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்களில் தேசபக்தி பாடல்களைப் பாடுவதற்காக அறியப்பட்ட அவர், 1932-ல் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைப்படுத்தப்பட்டார்.
வரலாற்று நாயகி
சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கடம்பி மீனாட்சி. 1936-ம் ஆண்டில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற அவரது ஆராய்ச்சி, 'பல்லவ மன்னர்களின் நிர்வாக, சமூக வாழ்க்கை' தொடர்பானது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரிகளில் படித்த அவர், பெங்களூர் மகாராணி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றினார்.
ஆயுதப் போராளி
சென்னையைச் சேர்ந்த டாக்டர் கேப்டன் லட்சுமி ஷெகல், சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண்கள் பிரிவான ராணி ஜான்சி ரெஜிமென்ட்டுக்கு கமாண்டராக இருந்தவர் (1943). அதேபோல குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட (2002) முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஆசிய சாம்பியன்
டென்னிஸ் விளையாட்டில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சென்னை அடையாறைச் சேர்ந்த லட்சுமி மகாதேவன் 50-களில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார். இந்திய டென்னிஸில் முன்னணியில் இருந்த டி.கே. ராமநாதனிடம் அவர் பயிற்சி பெற்றார். 1964-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பட்டம் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் லட்சுமி மகாதேவன். தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக மாறினார். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், டென்னிஸ் விளையாட்டுக்கான உடை அவருக்குச் சௌகரியமாக இருக்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படாமல், சல்வார் கமீஸ் அணிந்துகொண்டு சாதனை படைத்தார்.
பிரிட்டனின் முதல் மருத்துவர்
பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில், முதன்முதலில் 1875-ல் சென்னை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஷார்லீபுக்குப் பிறகு மிசஸ் ஒயிட், பியேல், மிட்ஷெல் ஆகிய மூன்று ஆங்கிலோ-இந்தியப் பெண்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.
பெண்களின் போதி மரம்
சென்னையின் முதல் கல்லூரி ராணி மேரி கல்லூரி. இதுவே தேசிய அளவில் மூன்றாவது பெண்கள் கல்லூரி, தென்னிந்தியாவின் இரண்டாவது கல்லூரியும்கூட. 1914-ல் இந்தக் கல்லூரி நிறுவப்பட காரணமாக இருந்தவர் டோரதி தி லா ஹே. 1936 வரை அவரே கல்லூரி முதல்வராகச் செயல்பட்டார். மதராஸ் மாகாண பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியில் ராணி மேரி கல்லூரியின் பங்கு ஈடு இணையற்றது. கல்லூரி தொடங்கப்பட்ட காலத்திலேயே குழந்தைத் திருமணம் காரணமாக, சின்ன வயதிலேயே கணவரை இழந்த பெண்கள் இங்கே படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இங்கே சிறப்பாகப் படித்த பெண்கள் மாநிலக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்கள்.
முதல் வாக்குரிமை
பிரிட்டனிலும் அதன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான தீர்மானத்தை, 1921-ல் முதலில் நிறைவேற்றிய சட்டப்பேரவை மதராஸ் மாகாண சட்டப்பேரவைதான். அந்த வகையில் பெண்களுக்கான சுதந்திரம், சமஉரிமை சார்ந்த பயணம் தேசிய அளவில் சென்னையில்தான் தொடங்கியது. அதன் பிறகுதான் பம்பாய் மாகாணமும், ஒருங்கிணைந்த மாகாணமும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றின. இதிலும் வாக்கு வித்தியாச அடிப்படையில் சென்னையே முதலிடம் பிடித்தது. மாகாணத்தின் 90 உறுப்பினர்களில் 40 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 40 பேர் வாக்கு அளிக்காமலும் இருந்தனர். 10 பேர் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது வரலாற்று சாதனையாக மாறியது.
1917-ல் சர்வதேச பெண்கள் வாக்குரிமை இயக்கத்துடன் தொடர்புடைய இந்திய பெண்கள் சங்கத்தை (Women Indian Association) அன்னி பெசன்ட், டோரதி ஜின்ராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இந்த அமைப்பின் பணிகளைத் தொடர்ந்தே மதராஸ் மாகாண சட்டப்பேரவையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment