Published : 23 Aug 2015 03:09 PM
Last Updated : 23 Aug 2015 03:09 PM

ஆண்கள் செய்வதைப் பெண்கள் ஏன் செய்யக் கூடாது? - டப்பிங் கலைஞர் ஹாஸினி

தமிழ்த் திரையுலகில் தமிழே பேசாத நாயகியர்தான் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். காதலோ கொஞ்சலோ கோபமோ - நடிகைகளின் குரலாக இருந்து அவர்கள் நடிப்பின் பாதிச் சுமையைத் தாங்கிக்கொள்பவர்கள் டப்பிங் கலைஞர்கள். தமிழக எல்லை தாண்டியே பெரும்பாலான நடிகைகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு நீடிக்கும்வரை டப்பிங் கலைஞர்களின் முக்கியத்துவமும் குறையாது. முகம் காட்டாமல் தடம் பதிக்கும் இந்தக் கலைஞர்களில் புதிதாய் ஒலிக்கும் குரல்களில் ஒன்று ஹாஸினியின் குரல்.

“இப்போதுதான் ‘விழித்திரு' படத்துக்காக அபிநயாவுக்குப் பின்னணி குரல் கொடுத்துவிட்டு வந்தேன். அவரால் பேச முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இப்படத்தில் ரேடியோவில் பணியாற்றுபவராக நடித்திருக்கிறார். அவருக்குக் குரல் கொடுத்திருக்கிறேன். அவரைப் பார்த்தபோது கடவுளின் மீது கோபம்தான் வந்தது” என்று பேச்சைத் தொடங்கினார் டப்பிங் கலைஞர் ஹாஸினி.

டப்பிங் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா'தான் என்னுடைய முதல் படம். என் குருநாதர் பாண்டிராஜ் சார்தான் என்னை இந்தத் துறைக்கு அழைத்துவந்தார். எனக்கு டப்பிங் வருமா என்பது தெரியாது, என் மீது நம்பிக்கை வைத்து உன்னால் முடியும் என்றார். என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடந்ததுதான். அதே போலத்தான் நான் டப்பிங் துறைக்கு வந்ததும்.

ஆண்கள் அதிகம் பணியாற்றும் துறையில், ஒரு பெண்ணாகப் பணியாற்றிய அனுபவம்?

ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான். நமது வாய்ப்புகளை அது பாதிப்பதும் உண்மைதான். ஆனால், எனக்கு வரும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதை கர்வம் என்று நினைக்காதீர்கள், தன்னம்பிக்கை.

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆள் தேர்வு நடந்தபோது, ‘எல்லாமே நன்றாக பண்ணியிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய கலர்தான் பிரச்சினை’ என்று சேனலில் உள்ளவர் தெரிவித்தார். நான் எப்படிப் பணியாற்றுவேன் என்பதைத்தான் எதிர்பார்ப்பீர்கள் என நினைத்தேன், வீடியோ துறை இப்படி இருக்கும் என நான் நினைக்கவில்லை. Shame on you people என்று வந்துவிட்டேன்.

திருமணத்துக்கு பிறகு உங்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறதா?

எங்கப்பா இளையராஜா சாரோட சொந்தக்காரர் என்பதால் அவருக்குத் திரைத் துறையைப் பற்றித் தெரியும். “சரி.. என்னமோ பேசுற... பார்த்துப் பண்ணு” என்று என் அம்மா சொல்லிவிட்டார். என்னுடைய சுதந்திரத்தில் என் குடும்பத்தினர் தலையிட்டதே கிடையாது.

கல்யாணத்துக்கு முன்பு சுதந்திரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. கல்யாணம் என்னை நிறைய மாற்றிவிட்டது. ஆனால் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் பேசிக்கொள்ளும் போது பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி, இதை ஏன் நீ பண்ணக் கூடாது என்று எனக்குத் தூண்டுகோலாக இருக்கிறார் என் கணவர் சபரி.

ரேடியோ அகாடமி, ஆர்.ஜே. அகாடமி இப்படி நிறைய ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கு காஸ்ட்டியூம் டிசைனிங் ரொம்ப பிடிக்கும். அம்மா, கணவர் இருவரின் உதவியோடு இப்போது ஹாஸினி பொட்டிக் என்று ஒரு கடை ஆரம்பித்திருக்கிறேன். படங்களுக்கு டப்பிங் பேசிட்டுவர்றது, போறது என்று மட்டும் இருந்தால் ஒரு கட்டத்தில் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்துவிடும். ஏதாவது வித்தியாசமாக பண்ணு, சந்தோஷமாக இரு என்று சபரி சொல்லியிருக்கிறார்.

ரேடியோ, தொலைக்காட்சி, டப்பிங் – இதில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

ரேடியோ வேலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முகம் தெரியாத ஒரு பெண், தன் பேச்சால் அனைவரையும் கவர வேண்டும், அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம்தான் இருக்கும். நான் எப்படி இருப்பேன் என்பது பலருக்கும் தெரியாமல், குரலால், பேச்சால் பலரைக் கவர்ந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

சினிமா சார்ந்த துறைகளில் தொடர்ந்து பணியாற்றிவருகிறீர்கள். பட வாய்ப்பு எதுவும் வரவில்லையா?

பாண்டிராஜ் சார் ஒரு முறை ஏன் நடிக்கக் கூடாது என்று கேட்டார். அதெல்லாம் வேலைக்கு ஆகாது சார் என்று சொல்லிவிட்டேன். 'இது நம்ம ஆளு ' படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். அவர் அழைத்த நேரம், எனக்குத் திருமணமாகியிருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதே போல ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் தேன் அடை பாத்திரத்துக்கு என்னைத்தான் கேட்டார்கள். அப்போது எனக்கும் சரி, எனது வீட்டிலும் சரி சினிமா என்றால் பயம். அந்த வாய்ப்பை விட்டதால்தான் இப்போது சினிமாவில் இந்தத் துறையில் இருக்கிறேன். அதைப் பயன்படுத்தியிருந்தால், இப்போது சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகையாக இருந்திருக்கலாம். காரணம் இப்போது குணச்சித்திர நடிகை என்று யாரும் இல்லை.

படங்கள்: எல். சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x