Published : 12 Jan 2020 10:32 AM
Last Updated : 12 Jan 2020 10:32 AM
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்று சொன்ன பாரதியின்வழி நின்று மொழிபெயர்ப்புப் பணியையே முக்கியப் பணியாகக் கொண்டு செயலாற்றிவருபவர் சேதுமணி மணியன்.
மதுரைப் பெண் எனத் தன்னை பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார் சேதுமணி. ‘மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய புத்தகம் 1990-ம்ஆண்டின் ‘மொழி, இலக்கியம்’ பிரிவில் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பல தன்னாட்சி கல்லூரி கள் ஆகியவற்றில் இந்நூல் பாடநூலாக இருந்துள்ளது. தற்போது 75 வயதாகும் சேதுமணி, சென்னையில் வசித்துவருகிறார்.
படிக்க அனுமதி தேவையில்லை
பெண் குழந்தை இல்லாத வீட்டில் வள்ளியம்மை- சுப்பையா தம்பதியருக்குக் கடைக்குட்டியாகப் பிறந்தவர் சேதுமணி. தந்தை வணிகத்திலும் தாய் பஞ்சாலைத் தொழிலிலும் ஈடுபட்டுக் குடும்பத்தை நிர்வகித்துள்ளனர். குழந்தைகளைக் குறையாத அன்போடு வளர்த்தாலும் மகனை பள்ளிக்கு அனுப்பியவர்களுக்கு மகளைப் பள்ளிக்கு அனுப்பத் தோன்றவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் பள்ளிக்குச் செல்வது பெருமைப் படக்கூடிய விஷயமில்லையாம். ஆனால், சேதுமணிக்கு அண்ணன்களைப் போல் பள்ளிக்குச் செல்ல ஆசை. யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகிலிருந்த பள்ளியில் நுழைந்து நான்காம் வகுப்பு பிள்ளைகளுடன் சேர்த்து படிக்கத்தொடங்கியுள்ளார். எதையும் உடனடியாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் திறனும் சேதுமணியை வகுப்பில் முதல் மாணவியாக விளங்கச் செய்துள்ளன. “இன்றைக்கு உள்ளதுபோல் 1950-களில் பள்ளிகளில் அவ்வளவு கெடுபிடிகள் இல்லை. கையை தூக்கிக் காதைத் தொட்டாலே போதும், வகுப்பில் சேர்த்துக்கொள்வார்கள். பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அப்போது என்னுடைய நோக்கமாக இருந்ததே தவிர முதல் மாணவியாக வருவதைப் பற்றியொல்லாம் நான் நினைத்துப் பெருமைப்பட்டதில்லை. ஏனென்றால், பெண்கள் பலருக்கும் கிடைக்காத படிப்பு எனக்குக் கிடைத்ததே பெருமைதானே. அதைவிடப் பெருமையா முதலிடம் என்பது? ஆனால், என் பள்ளிக் கனவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வீட்டில் நான் இல்லாததை அறிந்த பெற்றோர் ஊர் முழுக்க என்னைத் தேடி இறுதியில் பள்ளியில் கண்டுபிடித்து, அழைத்துவந்தனர். ஆனால், ‘பள்ளியிலேயே நன்றாகப் படிக்கக்கூடிய பெண்ணை ஏன் நிறுத்த வேண்டும்? சேதுமணியை உடனே பள்ளிக்கு அனுப்புங்கள்’ என்று ஆசிரியர்கள் கூறினார்கள். ஆசிரியர்களின் வார்த்தைக்கு மதிப்புகொடுத்து மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். என்னுடைய தந்தை என்னைப் பற்றி ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டுப் பெருமைப்பட்டார். என்னுடைய படிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்” என பழைய நினைவுகளைப் பசுமையுடன் பகிர்ந்துகொள்கிறார்.
சாதிக்கத் தாய்மொழி தேவை
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கணிதம், இயற்பியல் துறையில் இளங் கலைப் பட்டம் பெற்ற சேதுமணி பின்னாளில் அதே கல்லூரியில் பேராசிரியரானார். “தனியார் பள்ளி ஒன்றில் கணித, இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினேன். மாணவர் களுக்கு அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லிக்கொடுக்கும்போது அவர்கள் அவற்றை எளிமையாகப் புரிந்துகொள்கி றார்கள் என்பதைக் கவனித்தேன். ஆகவே, மற்ற பாடங்களைவிடத் தமிழ் மொழியை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்தேன். தமிழ்த் துறையில் பட்டம் பெற்றால்தான் தமிழாசிரியர் வேலை என அரசு அப்போது அறிவித்தது.” என்று சொல்லும் சேதுமணி, ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தார். பிறகு டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. கல்லூரிக்குச் சென்ற முதல் நாள் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், ‘ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தும் ஏன் தமிழைத் தேர்ந்தெடுத்தாய்’ எனக் கேட்டார்கள். அப்போது “தாய்மொழி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார் சேதுமணி.
மாணவர்கள் தந்த ஊக்கம்
தமிழாசிரியராக இருந்தாலும் சேதுமணி, மற்ற மொழிப் படைப்புகளைத் தமிழ்ப்படுத்துவது பற்றித் தான் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக, அறிவியலைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்றார். அறிவியல் பாடங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டி யது காலத்தின் அவசியம் எனத் தற்போதும் அவர் வலியுறுத்து கிறார். சேதுமணியின் செயல்வழிக் கற்றல் முறை மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, ‘மொழி எனும் பெருவரம்’ எனும் தனது முதல் நூலை எழுதினார். சேதுமணி தன்னுடைய மாணவர் களுக்குத் தமிழ்வழியில் கற்றுக்கொடுத்தது போலவே, தன் மூன்று பிள்ளைகளையும் தமிழ் வழியில்தான் படிக்கவைத்துள்ளார். “தாய் மொழியைக் கற்றுகொள்ளாமல் மற்ற மொழிகளை எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும்? நான்கு வயதுக் குழந்தை தமிழ் கற்றுக்கொள்ளும்போது ஏன் அவர்களால் ஆங்கிலத்தை விரைவாகக் கற்றுக்கொள்ள முடியாது. இங்கே பாடங்களை மாணவர் களுக்குக் கற்றுக்கொடுக்கும் முறையில்தான் பிரச்சினை உள்ளது. மாணவர்களிடம் அல்ல.
நம்முடைய நாட்டில் ஆங்கிலத்தை மொழி என்ற இடத்திலிருந்து அறிவுடன் ஒப்பிடும் போக்கு நிலவுகிறது. குழந்தைகளுக்குச் சிறு வயதிலேய தமிழை முறையாகக் கற்றுக்கொடுத்தாலே அவர்களால் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும். வீட்டில் உள்ள பொருட்களின் பெயர்கள், அன்றாடம் பேசும் வாக்கியங்களை ஆங்கிலத்தில் பேசினாலே போதும். குழந்தைகள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஆனால் அதற்கு முன்பு தாய்மொழியாம் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.
பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் உள்ள சேதுமணி மணியன் ‘என் மண், என் மக்கள், என் மொழி’ என்ற பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது இன்றைய தேவை என வலியுறுத்துகிறார். இவர் ‘தோட்டம்’, ‘புதிய தடம்’, ‘நான் வாழ்ந்தாக வேண்டும்’, ‘மூன்று தலைமுறை’, ‘இயேசு என்றொரு மானுடம்’, ‘சாலை எல்லாம் சாராயம்’ உள்ளிட்ட நூல்கள் 6 நாவல்களையும், 1 சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்கான கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எழுத்தில் உருவான ‘இனிய தமிழ்ப் பெயர் சூட்டுவோம்’ என்னும் புத்தகத்தின் பதிப்பாசிரியர் அவர். இப்புத்தகத்தில் ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து 2,945 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் சேதுமணி எழுதிய ‘நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்?’ என்ற சிறுநூல் ஐந்தாயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ் மொழி சிதைக்கப்படுகிறது என்ற கூக்குரலுக்கு மத்தியில்தான் கீழடியில் தமிழின், தமிழனின் பெருமையை உலகம் உற்றுநோக்கியுள்ளது. “இனம் வாழ, தமிழ் வேண்டி, தமிழ் கூறு நல்லுலகம் இந்த வாய்ப் பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மொழியின் சிறப்பை அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டும்” என வலியுறுத்துகிறார். வெறும் சொல்லாக மட்டுமல்லாமல் அதற்கான அமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ‘‘உடம்போடும் உயிரோடும் ஒன்றாகிப் போன என் மொழி தமிழ் மொழி” எனும் சேதுமணி மணியனின் வார்த்தைகள் மானுட சமூகம் தழைத்தோங்க தமிழ் வேண்டும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன.
படங்கள்: பு.க. பிரவீன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT