Published : 02 Aug 2015 02:28 PM
Last Updated : 02 Aug 2015 02:28 PM

மதுவுக்கு எதிராக ஒரு மாணவி

தமிழக அரசியல் கட்சிகள் திடீரென மதுவுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. மதுவின் தீமைகளை விவரித்துப் பேசி, மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிடும் துடிப்பை அந்தக் கட்சிகளிடம் பார்க்க முடிகிறது. ‘மதுவால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில் கொண்டு புதிய மதுவிலக்குக் கொள்கையை உருவாக்க வேண்டும்’ என்று தமிழகத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சுகளுக்குப் பின்னாலும் அக்கறைக்குப் பின்னாலும் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கருத இடம் இருக்கிறது. ஆனால் எந்த உள்நோக்கமும் இன்றி மதுவுக்கு எதிராக ஒரு மாணவியின் குரல் ஐந்து ஆண்டுகளுக்கு முன் உரத்து ஒலித்தது. ஆனால் அதற்குச் செவிமடுக்க ஆட்சியில் இருக்கிறவர்களுக்கும் கட்சியில் இருக்கிறவர்களுக்கும் நேரமில்லை. எந்தப் பின்புலமும் பக்க பலமும் இல்லாமல் தான் மேற்கொண்ட பணியில் இருந்து சிறிதும் தடம் மாறாமல் மதுவுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார் நந்தினி. மதுரையைச் சேர்ந்த நந்தினிக்கு, அவர் படித்த சட்டப் படிப்பு தேவையான தெளிவையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.

நந்தினியின் அப்பா ஆனந்தன், தன் மகளின் போராட்டத்துக்குத் துணைநிற் கிறவர். வேளாண் துறையில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றிய இவர், பொதுப் பணிகளில் ஈடுபடுவதற்காக விருப்ப ஓய்வு பெற்றவர்.

“என் அப்பா வேலை பார்க்கும் போது ஊழியர் சங்கத்தில் இருந்தார். ‘நம்மைச் சுத்தி நடக்கற அநீதிகளைப் பார்த்துக்கிட்டு சும்மா இருந்தா நாம மனுஷனா இருக்கறதுக்கு என்ன அர்த்தம்?’னு அப்பா அடிக்கடி கேட்பார். அப்பாவோட பேச்சும் செயலும் எனக்குள்ளே சமூக ஈடுபாட்டை அதிகரிச்சது” என்று சொல்லும் நந்தினி, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2010-ம் ஆண்டில் இருந்து மதுக் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் நடத்திவருகிறார் நந்தினி.

“போதைப் பொருட்களையோ அது சார்ந்த வஸ்துகளையோ விற்பது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அரசாங்கமே தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்துவைத்து மதுவை விற்பனை செய்கிறது. அரசாங்கம் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?” என்று கேட்கும் நந்தினியின் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

மக்கள் போராட்டம்

மதுவுக்கு எதிரான நந்தினியின் இந்தப் போராட்டத்துக்கு அவருடன் படித்த மாணவிகளும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஒத்துழைப்பு தந்தது தன் நம்பிக்கையை அதிகரித்ததாகச் சொல்கிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் நந்தினி. இவரது தொடர் பிரச்சாரங்களின் விளைவாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றச் சொல்லிப் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறார் நந்தினி.

“மதுரை அவனியாபுரம், கோரிப்பாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தஞ்சாவூரில் மது குடித்ததால் ஏற்பட்ட விபத்தின் விளைவாக மூன்று பேர் இறந்தனர். அதனால் அந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அங்கிருந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவும் நாளில்தான் ஒரு தலைமுறையின் தலையெழுத்தே தீர்மானிக்கப்படும்” - மது ஒழிப்பின் மக்களின் பங்கு எத்தனை அவசியம் என்பதைச் சொல்கிறார் நந்தினி.

மதுவால் தந்தையை இழந்த மாணவர்களை ஒன்று திரட்டி, அவர்களுடன் தமிழக முதல்வரைச் சந்திக்கக் கொடுத்த மனு, கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.

“மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த பல பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். என்னைப் பள்ளி அருகில்கூட அனுமதிக்க மாட்டார்கள். தெருவிலோ, பள்ளிக்கு ஒதுக்குப்புறமாகவோ நின்றுகொண்டு மாணவர்களிடம் பேசுவேன். மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைப்பேன்.

விளையாட்டாகக் குடிக்க ஆரம்பிக்கும் ஒரு மாணவன், நான்கைந்து ஆண்டுகளுக்குள் குடி நோயாளியாகிப் போவதற்குப் பின்னால் இருக்கும் அவலங்களை எடுத்துச்சொல்வேன். பள்ளி நாட்களில் குடிக்கும் பழக்கம் இருந்த பல மாணவர்கள் என் பேச்சுக்குப் பிறகு மதுப் பழக்கத்தைக் கைவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் வேலை இல்லையா?” என்று கேட்கும் நந்தினி, மக்கள் போராட்டம் மற்றும் தனிநபர் போராட்டங்களால் மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒழித்துவிட முடியாது என்கிறார்.

யார் பொறுப்பு?

“டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று நான் அனுப்பிய மனுவுக்கு, ‘அது அரசின் கொள்கை முடிவு’ என்று ஒரே வரியில் அரசிடமிருந்து பதில் வந்தது. மக்கள் மீது இந்த அரசாங்கம் வைத்திருக்கும் அக்கறை இவ்வளவுதானா? குடிமக்களை குடிக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது எத்தனை பெரிய முரண்?” என்ற நந்தினியின் கேள்வியும் அதற்குப் பின்னால் இருக்கும் நியாயமும் அவரைப் பல முறை கைதுசெய்யவும் இரண்டு முறை சிறையில் அடைக்கவும் வைத்தன.

கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் மக்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை வருத்தத்துடன் சொல்கிறார். தான் தமிழகம் முழுவதும் பயணித்து சேகரித்த விவரங்களின்படி நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் குடிப்பதாகவும் நந்தினி குறிப்பிடுகிறார். நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களில் மதுப் பழக்கத்தால் முழு வருமானமும் குடும்பத்துக்குச் சென்று சேர்வதில்லை என்பதையும் பதிவுசெய்கிறார்.

“கிராமங்களுக்கு நான் செல்லும்போது என்னைப் பார்த்து அழுதபடியே தங்கள் குடும்பக் கதையைச் சொல்லும் பெண்களை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். நான் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் காவல் துறையினர் அனுமதி தர மறுத்துவிடுவார்கள். அப்படியே போராட்டம் நடத்தினாலும் பேச ஆரம்பிக்கும் முன் கைது செய்வார்கள். துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துச் சென்றால் அவற்றைப் பறிமுதல் செய்துவிடுவார்கள்.

மக்களின் நலனுக்காக நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வழிமறித்து என் போராட்டத்தைக் குலைக்க நினைக்கிறவர்கள், குடியால் குடும்பத் தலைவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்குப் பதில் சொல்வார்களா? நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையை இவர்களால் குறைக்க முடியுமா? குடியால் நேரிடும் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்களா? மது போதைக்கு அடிமையாகி ஒரு தலைமுறையே சீரழிந்து கிடக்கிறதே, அதிலிருந்து அவர்களை மீட்பது யார்?” என்ற நந்தினியின் கேள்விக்குப் பதில் யாரிடம் கிடைக்கும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x