Published : 23 Aug 2015 03:16 PM
Last Updated : 23 Aug 2015 03:16 PM
பெண்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அவர்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு மட்டும் விடிவே இல்லை. கிராமப்புறப் பள்ளியொன்றில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரியும் நானும் இதே பிரச்சினையால் பாதிக்கபட்டிருக்கிறேன். கடந்த வருடம் காலையில் ஒரு நாள் பள்ளிக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. வகுப்பறை கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. எதுவும் புரியாமல் வகுப்புக்குள் நுழைந்தால் நான் கண்ட காட்சி என்னை உறையவைத்துவிட்டது.
கரும்பலகைகள் அனைத்திலும், என்னைப் பற்றி மிக ஆபாசமான வசவுகள் எழுதப்பட்டிருந்தன. எழுத்தில் பதிவுசெய்ய முடியாத அளவுக்கு அவை அருவருக்கத்தக்கவை. பக்கத்திலேயே ஒரு பெண்ணின் உருவத்தை ஆடையில்லாமல் வரைந்திருந்தார்கள். அது என் உருவம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதையெல்லாம் பார்த்ததுமே நான் கூனிக் குறுகிப் போனேன். இரண்டு குழந்தைகளின் (அதுவும் மூத்தவள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டாள்) தாயான, நாற்பது வயதைக் கடந்த நான் ஒரு நாளும் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதில்லை. இருந்தால் இந்த டீச்சரைப் போல இருக்க வேண்டும் என்று பலரும் முன்னுதாரணமாகச் சொல்லும் வகையில்தான் என் வாழ்க்கையை நான் அமைத்துக்கொண்டிருக்கிறேன்.
குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடும் பெற்றோரை அழைத்துப் பேசியிருக்கிறேன். தந்தைகளின் பொறுப்பற்ற செயலால் குழந்தைகளின் படிப்பும் எதிர்காலமும் வீணாவதைச் சுட்டிக்காட்டி, அதற்காகவாவது குடியை விட்டுவிடும்படி அறிவுறுத்தினேன். அதற்கு நான் கண்ட பலன்தான் இந்த அநாகரிகச் சித்திரம். அதைச் செய்தது யாரென்றும் எனக்குத் தெரியவில்லை. கதறியழுத நான், மறுநிமிடமே அமைதியானேன். இதில் நான் செய்த தவறென்ன? நான் எதற்கு வருந்த வேண்டும்? நான் அழுதால் தவறு செய்தவர்கள் வெற்றிபெற்றது போலாகிவிடுமே. இதற்காகப் பள்ளியிலிருந்து மாற்றல் வாங்கிச் செல்லக் கூடாது என்று அந்த நிமிடமே முடிவெடுத்தேன். இன்றுவரை அதே பள்ளியில்தான் பணிபுரிகிறேன்.
ஆனால் என்னைப் போன்று எத்தனை பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள்? எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்? அவர்கள் அத்தனை பேரும் என்னைப் போலவே மன உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டிருப்பார்களா? அந்தச் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்திருப்பார்களா? பெண்களை முடக்கிப் போட நினைக்கும் இந்த மாயக் கரங்களில் இருந்து தப்பிக்கவே முடியாதா? ஒரு பெண்ணின் வளர்ச்சியைத் தடுக்க, நடத்தை சார்ந்த குற்றச்சாட்டுக்களே போதும் என்ற இந்தச் சமூகத்தின் பார்வை எப்போதுமே மாறாதா? ஒழுக்கம் சார்ந்த அச்சுறுத்தல்களில் இருந்து பெண்களுக்கு விடுதலையே இல்லையா?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment