Published : 15 Dec 2019 10:51 AM
Last Updated : 15 Dec 2019 10:51 AM

பெண் திரை: வாழ்க்கையின் அர்த்தம் தேடும் தனியொருத்தி

ஆதி வள்ளியப்பன்

முதல் தலைமுறையாகப் படிக்கும் கிராமத்து இளைஞன், அவனைச் சந்திக்கும் ஒரு பணிப்பெண், இவர்களுடைய இரண்டு மகள்கள் என மிகக் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிப் பயணப்படுகிறது ‘Blossoming Into a Family / Madou: After the Rain’ என்ற ஜப்பானியத் திரைப்படம். இந்தப் படத்தை இயக்கியவர் ஹிரோகி ஹயாஷி. ‘கிகுஜிரோ’ புகழ் டகேஷி கிடானோவிடம் உதவியாளராக இருந்தவர்.

ஜப்பானின் ஃபியூஜி எரிமலைக்கு அருகிலிருக்கும் ஊரின் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எய்சிரோ, முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பயிற்சி மையம் ஒன்றை நடத்துகிறார். அங்கே படிக்கும் கிராமத்து மாணவன் ஷிஷெரோவால் கவரப்பட்டு, அவனைத் தத்தெடுத்துக்கொள்கிறார். அவன் வளர்ந்து லண்டனில் படித்து, சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுத் தாய்நாடு திரும்புகிறான். அது இரண்டாம் உலகப் போர் காலம். ஜப்பான் ராணுவம் சார்பாக பர்மாவுக்குப் போரிட ஷிஷெரோ செல்வது அவனுடைய வளர்ப்புத் தந்தைக்குப் பிடிக்கவில்லை. போருக்குப்பின் ஷிஷெரோ லண்டன் திரும்பிய நிலையில் தந்தை இறந்துவிடுகிறார். தந்தை நடத்திய பயிற்சி மையத்தை ஷிஷெரோ நடத்தத் தொடங்குகிறான். அப்போது தந்தையின் வழியை அவன் பின்தொடர்வதன் உருவகமாக, அவர் பயன்படுத்திய மதிப்புமிக்க மணிச்சட்டம் ஷிஷெரோவிடம் கொடுக்கப்படுகிறது.

‘இதோ’ என்ற வீட்டுப் பணிப்பெண், ஷிஷெரோவின் பயிற்சி மையத்துக்கு வந்துசேர்கிறார். ஒரு இக்கட்டான தருணத்தில் அந்தப் பெண்ணை ஷிஷெரோ மணந்துகொள்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் வழியேயும் பெரும்பகுதிக் கதை சொல்லப்படுகிறது. இடையில் ஷிஷெரோ இறந்துவிட, படத்தின் முடிச்சு இன்னும் சிக்கலாகிறது.

வெளியேற்றும் முடிவு

செல்வந்தக் குடும்பத்தின் திருமணம் செய்து கொள்ளாத வாரிசால் தத்தெடுக்கப்பட்டவர் ஷிஷெரோ. அவர் மணந்துகொண்டவரோ பணிப்பெண். இதனால், பணிப்பெண்ணையும் அவருடைய மகள்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றச் செல்வந்தக் குடும்பம் முடிவுசெய்கிறது. ஊரில் தங்களுக்குக் கிடைத்துவரும் மதிப்பு, அந்தஸ்து போன்றவையே அந்தக் குடும்பத்துக்கு முக்கியமாக இருக்கின்றன. அதேநேரம் தன் வீட்டின் மீதும் தத்துத் தந்தையின் மீதும் பிடிப்புகொண்டிருந்த ஷிஷெரோ, தனது மகள்களுக்கு அந்த வீட்டில்தான் திருமணம் நடைபெற வேண்டுமென இறப்பதற்கு முன் விரும்பியிருக்கிறார்.

ஜப்பானியர்கள் 1980-கள் வரை கிராமங்களையும் சிற்றூர்களையும் மிகப் பெரிதாக மதித்திருக்கிறார்கள். தங்கள் ஊர், வீடு, அங்கு உலவும் மனிதர்களாலேயே தங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மரபான வீட்டில்தான் திருமணம் நடைபெற வேண்டும், முதல் வாரிசு அங்கே வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

‘என் வாழ்வில் பெரிய வசதியை அனுபவித்ததில்லை. அதேநேரம், வாழ்க்கை சார்ந்த இனிமையான நினைவுகளை எனது குடும்பம் தந்திருக்கிறது’ என்கிறார் ஷிஷெரோ. அதுவே இந்தப் படத்தின் ஆதாரமாக மாறுகிறது. வாழ்க்கையின் இனிய நினைவுகள் என்றால் என்ன, அவற்றை ஷிஷெரோ எப்படிக் கண்டடைகிறார் என்ற பயணத்துக்குப் படம் நம்மை அழைத்துச்செல்கிறது.

தனியொருத்தி

ஷிஷெரோ இறந்த பிறகு மகள்கள் காய்தே (8 வயது), இசுமி (10 வயது) இருவரையும் அம்மா ‘இதோ’, தனியாளாக வளர்த்து ஆளாக்குகிறார். பெண்களுக்கான ஜப்பானிய மரபு உடையான கிமோனோ தைக்கும் வேலையை நாள் முழுக்கச் செய்கிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் ஜீவனத்தை ஓட்டுகிறார். ‘நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் அம்மா, இந்த வீட்டுக்கு இனிமேல் நான் தலைமை ஏற்கிறேன்’ என்கிறாள் மூத்தவள். பிற்காலத்தில் தங்கையை அவளே படிக்கவும் வைக்கிறாள்.
மூத்த பெண், குடும்பத்தின் முதல் குழந்தைகளைப் போலவே அமைதியானவளாக, பொறுப்புமிக்கவளாக, அடிப்படை விதிமுறைகளை மீறாதவளாக இருக்கிறாள். இளையவளோ உற்சாகம் மிகுந்தவளாக, பரிசோதனை செய்பவளாக, எதையும் எதிர்கொள்ளத் தயங்காதவளாக இருக்கிறாள். இந்தக் கதாபாத்திரக் கட்டமைப்பு படத்தின் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.
ஷிஷெரோவின் மனைவியும் குழந்தைகளும் மரபான வீட்டில் தங்குவதையும், மகள்களுடைய திருமணம் அங்கே நடைபெறுவதையும் செல்வந்தக் குடும்பம் விரும்புவதில்லை. அவர்களை வெளியேற்றவே துடிக்கிறது. ஆனால், படத்தில் நடக்கும் திருப்பங்களால் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன.

அதேநேரம் ஷிஷெரோவுக்கும் அவர் திருமணம் செய்துகொண்ட ‘இதோ‘வுக்கும் இடையிலான உறவு எப்படியிருந்தது, ஷிஷெரோ இறந்த பிறகு ‘இதோ’ எப்படிக் கணவருடன் உறவைப் பராமரிக்கிறார், அவர்களுக்கும் அவர்களுடைய இரண்டு மகள்களுக்கும் இடையிலான உண்மையான உறவு என்ன என்பனவயெல்லாம் கதையின் சில திரைகள் விலகும்போது புரிகின்றன. இந்தப் படம் 1920-களில் தொடங்கி 80-களில் முடிகிறது.

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

1980-களுக்குப் பிறகு ஜப்பானியர்கள் வளர்ச்சி வேகத்தால் பிடித்தாட்டப்பட்டாலும், மண்ணில் வேர்விட்ட மரபை நோக்கி அவர்கள் திரும்ப வேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற படங்கள் நினைவுபடுத்துகின்றன. ஷிஷெரோ கதாபாத்திரம் இதைப் பல்வேறு வகைகளில் வலியுறுத்துகிறது. பணத்தைவிட, நிலத்தில் அக்கறையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட காய்கறிகள் மதிப்புமிக்கவை, சுவையானவை என்கிறார் அவர். ஒரு காய்கறிக்குச் சுவை கூட்டுவது என்பது தனிக்கலை. அதைப் படிக்க வேண்டும் என்கிறார்.
இயற்கையுடனும் இயற்கையின் பல்வேறு அம்சங்களுடனும் ஜப்பானியர்கள் கொண்டுள்ள உறவு, இந்தப் படத்தில் புதிய அர்த்தங்களைக் கடத்துகிறது. விதை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மண்ணும் அதற்குரிய சூழலும் இருந்தால் எந்த விதையும் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும், சுவையான காய்கனி கிடைக்கும். இந்தப் படத்தில் சூழல் என்று மனிதர்களுக்கு உருவகிக்கப்படுவது குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவையே. ஜப்பானியர்கள் இந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் தருவதை உணர முடிகிறது.

வாழ்க்கை என்பது அவசர கோலத்தில் தயாரிக்கப்படும் துரித உணவுக்கு மாற்றாக, மெதுவாகச் சமைப்பதைப் போன்றது. சமையலில் ஒவ்வோர் அம்சமாக மெதுவாகக் கூடிவந்தால்தான் உணவு சுவைக்கும். ஒரு எளியவரின், கல்வியற்றவரின் பார்வையிலிருந்து வாழ்க்கையின் அர்த்தம் என்பது என்ன? வாழ்க்கையை எப்படி அணுகுவது? இனிய நினைவுகள், மீண்டும் மீண்டும் மனத்தின் கதவுகளைத் தட்டும், அசைபோட வைக்கும், அதிலேயே ஆழ்ந்து துய்த்துப் போகவைக்கும் நினைவுகளை இந்தப் படம் பதிலாக முன்வைக்கிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x