Published : 24 Nov 2019 10:08 AM
Last Updated : 24 Nov 2019 10:08 AM
பாரததேவி
“அய்யய்யோ கொடுமையே... அப்ப ரயிலு நம்ம ஊருக்கு வராதாக்கும்?” என்று கரிச்சா அப்பாவியாகக் கேட்க, “ஆமத்தா. ரயிலு நம்ம ஊரு மந்தயில வந்து நிக்கும். நீ பொத்துனாப்புல ஏறி உக்காந்துக்கோ” என்றார் ஏகாம்பரம் எரிச்சலோடு. “அப்ப எனக்கு ராமேசுவரம் போவ தோதுபடாது” என்றாள் ரொம்பவும் சடவாக. “தோது படாட்டா பேசாம உன் பிஞ்சயில கெடக்க களையப்போயி வெட்டு.
ஆரு வேண்டாங்கா” என்ற ஏகாம்பரம், “சரி உறுதியா ராமேசுவரத்துக்குப் போறவக அடுத்த பவுரண வாரதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னால வந்துருங்க. ஆளுக்கு ஆறாரு ரூவாய எங்கையில கொடுத்திருங்க. அப்பத்தான் முன்னக்கூடி செல்வராசு டிக்கெட்டு எடுத்துக் கொடுப்பான்” என்று சொன்னதும் பெண்களுக்கெல்லாம் முகம் வாடிவிட்டது.
சந்திக்காத கண்கள்
“ஆமண்ணே அப்பவும் டிக்கெட்டுக்கு ஆறு ரூவாயா? அநியாயக் கொள்ளயாவில்ல இருக்கு. அந்த செல்வராசு அண்ணன்கிட்டச் சொல்லி ஒரு ஒத்த ரூவா, ரெண்டு ரூவா கொறச்சிக்கச் சொன்னா என்ன?” என்றாள் பொன்னழகி. அவள் குரல் ரொம்ப இறங்கியிருந்தது.
ஏகாம்பரத்துக்குக் கோபமென்றால் இந்தமட்டு இல்லை. “சீ...சீ... உங்களுக் கெல்லாம் ராமேசுரத்துக்குப் போவ நானு வேல மெனக்கெட்டு விசாரிச்சுட்டு வந்தேன் பாரு. என் புத்திய” என்றவர் தரையில் கிடந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டவாறு, “ஏலேய் நானு கமலகட்டப் போறேன். எவன்டா தண்ணி பாச்ச வாரது” என்று கேட்டுக்கொண்டே புறப்பட எல்லாப் பெண்களும் ‘மாமா, மச்சான், அண்ணே’ என்று அவரைச் சுற்றிக்கொண்டார்கள்.
“என்னண்ணே இம்புட்டுக்குக்குக் கோபப்படுதீரு. நாங்க என்னைக்கும் வெளிநாடு, தேசமின்னு போனமா? குண்டுச்சட்டிக்குள்ள குருதய ஓட்டுனாப்பில சுத்திச் சுத்தி திருவண்ணாமல, சங்கரன் கோயிலுன்னு பாத்தவக. அதனால, இம்புட்டுத் தூரத்துக்கு அதுவும் ரயில்ல போவணுமின்னா பயந்து தானண்ணே வரும். எங்கெங்க எப்படி எப்படி நடக்கணுமின்னு கேக்கத்தான் செய்வோம்.
இப்ப நம்ம ஊரு ஆம்பளைக அதேன் நீயி, மாமா கோதண்டமின்னு அம்புட்டுப் பேரும் எங்ககூட வந்தா நாங்க எதுவும் கேப்பமா பேசுவமோ? பொம்பள செம்மம் தானண்ணே” என்று கெஞ்சினாற்போல் கேட்கவும், “அப்படிச் சொல்லத்தா. மம்பட்டியத் தூக்கிட்டு வான்னாளாம் மாமியாக்காரி, வவுத்துல போட்டுக்கிட்டேன்னாளாம் மருமவக்காரி. அப்படியில்ல இருக்கு இவரு பேச்சி” என்றாள் பொன்னழகி பொய் சடவாக.
ஏகாம்பரத்துக்கு அவள் மாமன் மகள் என்பதால் இளம் பிராயத்தில் அவர்களின் நெஞ்சுக்குள் ஆசை குமிழியடித்த கனவுகளாக இருந்ததில் கடந்த காலமாகப் போனாலும்கூட அந்த உரிமையில் அவள் பேசினாள். ஏகாம்பரமும் பொன்னழகி சொன்னதைக் கேட்டதும் நெஞ்சம் குறுகுறுத்தார்.
சட்டென்று பொன்னழகியை ஏறெடுத்துப் பார்த்தார். அவளுக்கோ அவர் விழிகளைச் சந்திக்கத் துணிவில்லை. சட்டென முகம் கவிழ்ந்தாள். அவள் மாராப்புக்கு மேலே இருந்த தாலி மின்னியது. அதற்கு மேலும் ஏகாம்பரத்தால் அங்கு நிற்க முடியவில்லை. “சரி சரி. நானு ராமேசுவரம் போற அம்புட்டு விசயத்தையும் விவரமா சொல்லிட்டேன். இனி என்னமும் கேக்கணுமின்னா கோதண்டம்கிட்ட கேட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
உறங்காத ஊர்
ராமேசுவரம் போகவேண்டுமென்று புறப்பட்ட பிறகு ஊர் இரவில் உறங்கவே இல்லை. பெண்கள் கலகலத்து அலைந்தார்கள். நடுச்சாமங்களில்கூடப் பெண்களின் நடமாட்டமிருந்தது. வாசலில், தெருவில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் ஆண்கள் இவர்களின் காலடிச் சத்தத்தில் விழித்துக்கொண்டு, “யாரு தாயி அது இந்நேரத்துக்குப் போறவ?” என்று கேட்டால், “எய்யா நாந்தேன் ரணத்தாயி. நாங்க ராமேசுவரத்துக்குப் போறமில்ல.
அதேன் சொர்ணம் எத்தன சீல எடுத்துட்டு வாரான்னு கேக்கப் போறேன்” என்பாள். இப்போதெல்லாம் எல்லாரும் சாமம், ஏமம் பார்க்காமல் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் நடந்ததோடு செல்லாயி வீட்டுக்குத்தான் நிறைய நடந்தார்கள். அவள்தான் இப்போது அப்படிச் செய்யுங்க, இப்படிச் செய்யுங்க, அதைக் கொண்டாராதீங்க, இதைக் கொண்டாரதீங்க என்று பொய் அதட்டலாக அதட்டுவதோடு கட்டளையுமிட்டாள்.
குறையாத கேள்விகள்
திடுமென்று கரிச்சாவுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. செல்லாயியிடம் “எக்கா கோயிலுக்குப் போற சமயத்துக எங்க தலைக்குக் குளிச்சிருவமோன்னு பயமா இருக்குக்கா” என்று கண்களில் அச்சம் மிரள கேட்டபோது செல்லாயி அவளைச் சமாதானப்படுத்தினாள்.
“போடி போ. இதுக்கா பயப்படுத? நானு ஒரு வாழக்காயைச் சுட்டு உனக்குத் தாரேன். நாள விடியுமின்ன வெறும் வவுத்துல அந்தக் காயில பாதியத் தின்னுட்டு நாலு மொடக்கு வெந்நிய குடிச்சிரு. நம்ம கோயிலுக்குப் போயிட்டு வந்து ரெண்டு நாக்கழிச்சிதேன் தலைக்கு ஊத்துவே” என்று சொன்னாள். அதன்பிறகுதான் கரிச்சாவின் மனத்தில் மகிழ்ச்சி மையம்கொண்டு ஊஞ்சலாடியது.
தங்களின் உறவுகளும் சொந்தங்களும் இருக்கும் சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் தாங்கள் ராமேசுவரம் போவதை ஆட்கள் மூலமாகச் சொல்லிவிட்டதுதான் தாமதம். இவர்களின் புள்ளைகுட்டிகளையும் மாடு, கன்னுகளையும் பார்க்க வருகிறார்களோ இல்லையோ ராமேசுவரத்துக்கு நானும் வருகிறேன் என்று ஏழெட்டு பேர்வரை புறப்பட்டு வந்துவிட்டார்கள்.
முடியாத வேலை
ஊருக்குள் நெல் குத்துவதும் பயறு உடைப்பதும் பிள்ளைகளின் தின்பண்டத்துக்காக வரையோட்டில் பயறு வறுப்பதுமாக எந்த நேரமும் ஊருக்குள் சலசலப்பு சத்தம்தான். துணி வெளுப்பவரிடம் விதவிதமான சேலையை வாங்கி பத்திரப்படுத்தினார்கள்.
சும்மாவா? ரெண்டு நாள் பயணமல்லவா, அதுவும் தூர தேசத்துக்கில்ல ரயில் மூலமா போறாக என்று நினைக்க நினைக்க பெருமையும் சந்தோசமும் பிடிபடவில்லை. யாராவது மறந்தாற்போல் வேலைக்குக் கூப்பிட்டுவிட்டால் அவ்வளவுதான். “என்னத்தா நெசத்துக்குத்தேன் வேலைக்குக் கூப்பிடுதயா? இல்ல எடக்கு, கிடக்கு பண்ணுதயா?” “என்னதாயீ இப்படிக் கேக்கே. பிஞ்சையில கெடக்க வேலைக்கு யாராவது எடக்கு பண்ணுவாகளா? எதுக்குத்தா நீ இப்படி பகுமானமா பேசுதே?”
“பெறவென்ன, ராமேசுவரத்துக்குப் போவணுமின்னு அல்லகட்டிக்கிட்டு நிக்க நேரமில்லாம அம்புட்டு வேலயும் பாத்துக்கிட்டு இருக்கேன். நீ என்னை வேலைக்குக் கூப்பிட்டேன்னா” என்று இவள் சொல்லி முடிக்கும் முன்பே வேலைக்குக் கூப்பிட்டவள், “அம்மா தாயே தெரியாம கூப்பிட்டேன். நீ போயி அந்த ராமரவும் சீதயவும் எனக்கும் சேத்து நல்லா கும்பிட்டுவா” என்று சொல்லிவிட்டு, இதனால் வேறு ஏதாவது சண்டை வந்துவிடுமோ என்று ஓடுவாள்.
ஒரு நல்ல காரியத்துக்குப் போவும்போது வறுத்த பயறை எடுத்துக்கொண்டு போகக் கூடாதென்று நிலக்கடலையையும் எள்ளையும் வறுத்து, கருப்பட்டியோடு சேர்த்துக்கொண்டார்கள். புளியங்கொட்டையை வறுத்து, குத்திப் புடைத்து இரவு முழுக்க நனையப் போட்டு எடுத்துக்கொண்டார்கள்.
இது அந்தக் காலத்துக்கு நல்ல திண்பண்டமாக இருந்தது. வரகரசிப் பணியாரம் வேறு. ஆளாளுக்கு ஒரு பொட்டணம் தின்பண்டத்தோடு ஒரு பனையோலை கொட்டானும் இருந்தது. நாளைக்குத்தான் இவர்கள் புறப்படுகிறார்கள். இரவு முழுக்க முகத்துக்குப் பூச மஞ்சளும் கைக்கு வைக்க மருமாணியும் அரைத்து முடியவில்லை.
ராமேசுவரத்துக்குப் போக முடியாதவர்களுக்கு இது பிடிக்கவில்லை. “கெழட்டு களுதைகளுக்கெல்லாம் என்ன மருதாணி கேக்குதாம்?” என்று பொறணி பேசி முணுமுணுத்துக்கொண்டார்கள்.
கரிச்சா செல்லாயியிடம் வந்து “எக்கா நானு கலயம் நிறைய சோளக் கஞ்சி போட்டு மோரு ஊத்திட்டு வரட்டா?” என்று கேட்க செல்லாயி அவளை விரட்டினாள். அப்பவும், “கோயிலுக்குப் போறவ சோளக் கஞ்சியா கொண்டாருவே? சோறு காய்ச்சிக் கொண்டா.
அப்படிச் சோறு காய்ச்ச நேரமில்லாட்டா நானு நாழி, ஒன்றப்படி அரிசி போட்டு ஒரு பனை நாரு பொட்டி நிறைய புளிச்சோறு கொண்டாரேன். அதச் சாப்புட்டுக்கோ” என்றாள் பெருமையாக. கோயிலுக்குப் போவதற்கு இரண்டு நாளைக்கு முன்பே ஊர் கூடிவிட்டது. ஏகாம்பரம் கையில் ஆறு ஆறு ரூபாயென்று எல்லோரும் கொடுத்துவிட்டதோடு மொத்தம் இருபத்தி ஐந்து பேர் வருவதாகச் சொல்ல ஏகாம்பரமே மலைத்துப்போனார்.
அப்பவும், “இம்புட்டுப் பேருமா வேலயில்லாம கிடக்கீக? சரி சரி மம்மலும் கம்மலுமா இருக்கையில நம்ம புறப்பட்டுரணும். ஏன்னா புள்ளக்காடு எந்திரிச்சிருச்சிகன்னா நா வாரேன், நீ வாரேன்னு அழுவுங்க. அதுக்குத்தேன் சொல்லுதேன்” என்றார். “அதுவும் சரிதேன்” என்றார் கோதண்டம்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT