Published : 10 Nov 2019 09:35 AM
Last Updated : 10 Nov 2019 09:35 AM

முகம் நூறு: தமிழால் ஆங்கிலத்தை வெல்லலாம்

எல்.ரேணுகாதேவி

ஆங்கிலவழிக் கல்வியில் படித்தாலும் பலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதும் எழுதுவதும் சிக்கலாக உள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியில் படித்து இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆங்கில ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார் லாவண்யா ஜெயக்குமார்.

சென்னையில் பிறந்த லாவண்யா குடும்பப் பொருளாதார நிலை காரணமாக, பள்ளிப் படிப்பைத் தமிழ்வழிக் கல்வியில் தொடங்கியவர். சிறந்த படிப்பாளியான அவர் எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்து ஆசிரியர்களின் பாராட்டுதலுக்குரிய மாணவியாக இருந்துள்ளார்.

தவறிலிருந்து கற்ற பாடம்

வெற்றி முகமாக வலம்வந்த லாவண்யா ஆங்கிலம் மீதான தேடலைத் தொடங்கியது ஒரு கசப்பான அனுபவத்திலிருந்துதான். “நான் நன்றாகப் படிக்கும் மாணவி என்பதால், வகுப்புத் தலைவராக இருந்தேன். நான் எட்டாவது படித்தபோது ஒருநாள் இன்ஸ்பெக் ஷனுக்காக அதிகாரிகள் வந்திருந்தார்கள். அவர்கள் எங்கள் வகுப்புக்கு வந்தபோது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். பலகையில் வருகைப் பதிவு, தேதி எழுதி அலங்காரம் செய்தேன். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொண்டேன். அன்றைக்கு என்ன பாடமோ அதைப் பலகையில் குறிப்பிட்டிருந்தேன். எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். வகுப்புக்குள் நுழைந்த அதிகாரி எங்கள் அனைவரையும் பார்த்துவிட்டுத் திரும்பிப் பலகையைப் பார்த்தார்.

அதில் கணக்குப் பாடத்தில் வரும் ‘Sum’க் குப் பதில் ‘Some’ என எழுதி யிருந்ததை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி விட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அதிகாரியுடன் வந்திருந்த ஆங்கில ஆசிரியர் என் தவறைச் சுட்டிக்காட்டினார். வகுப்பில் முதல் மாணவியாக இருந்தாலும், அப்போது எனக்குத் தெரிந்த ஆங்கிலம் அவ்வளவுதான். அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆசிரியர் அறை முழுவதும் என்னைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. மற்றவர்களைப் பார்க்கவே அவமானமாக இருந்தது. எல்லாம் எனக்குத் தெரியும் என்று நினைத்திருந்த என் கனவு சுக்குநூறாக உடைந்தது. அந்த நொடிதான் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் விதைத்தது” என்கிறார் லாவண்யா.

அயராத உழைப்பு

அதன்பிறகு ஆங்கில ஆசிரியரிடம் ஆங்கில மொழியின் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுகொள்ளத் தொடங்கியுள்ளார் லாவண்யா. ஆங்கில மொழியின் அடிப்படை தெரிந்தாலும் தமிழ் வழியில் படித்தவர் என்ற மனப்பான்மையுடனே லாவண்யாவை கல்லூரி நடத்தியது. அவருடைய வகுப்பிலிருந்த 48 மாணவிகளில் 14 பேர் தமிழ்வழியில் படித்தவர்களாக இருந்துள்ளனர். பொதுவாகத் தமிழ் வழியில் படித்தவர்களை வாழ்க் கையில் பாதிக்கப்பட்டவர்களைப் போல் பார்க்கும் இந்தச் சமூகம், லாவண்யாவையும் அவ்வாறே அணுகியது. இந்த அணுகுமுறையே லாவண்யா தீவிரமாக ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள வைத்தது. “ஆங்கில நாளிதழ்கூட வாங்க முடியாத சூழ்நிலை எங்களுடையது. ஆனால் என் ஆர்வத்தைக் கவனித்த என்னுடைய அப்பா, எனக்காக நாளிதழ் வாங்கிக் கொடுத்தார். அதில் வரும் ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் குறிப்பெடுத்து, அதற்கான அர்த்தத்தை டயரியில் எழுதிவைப்பேன். வீட்டில் அம்மா, அக்காக்களுடன் பேசும்போது அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். பார்ப்பவர்கள் என்னை ஒருமாதிரி நினைத்தார்கள். ஆனால், எதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை.

வாடகை நூலகத்திலிருந்து பழைய ஆங்கில நாவல்களை எடுத்து வந்து வகுப்பில் அமர்ந்து படிப்பேன். ஆனால், மற்றவர்கள் நான் ஏதோ பாடப் புத்தகத்தைத் தான் படிக்கிறேன் என நினைத்தார்கள். கல்லூரியில் படித்த மூன்றாண்டுகளில் 52 ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து முடித்தேன்” என்கிறார்.

22 வயதில் தொழில்முனைவோர்

கல்லூரிக் காலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பகுதிநேரமாக லாவண்யா பணியாற்றியுள்ளார். தான் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை மற்றவர்களுடன் அங்கு பேசிப் பழகியுள்ளார். கல்லூரி முடித்தபிறகு ஓராண்டு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து குறுகிய காலத்திலேயே தான் சம்பாதித்த தொகையைக் கொண்டு 22 வயதிலேயே ‘THE HIRERS’ என்ற சிறிய நிறுவனத்தை லாவண்யா தொடங்கிவிட்டர்.

“எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறன் என்னிடம் உண்டு. அதனால் வேலைத்தளத்தில் ஓராண்டு அனுபவமே எனக்குப் போதுமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே வகை வேலையைத் தேடி அலைவதைவிட, ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக்கூடாது என யோசித்தேன். அதற்குத் துணையாக என் நண்பரும் வழிகாட்டியுமான பிரவீன் உடனிருந்தார். பங்குதாரர் அடிப்படையில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். இந்த நிறுவனத்தின் மூலமாகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் புதிய தொழில்முனைவோர், கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வருகிறோம்” என்கிறார் லாவண்யா.

அனுபவத்திலிருந்து ஒரு பாடம்

தன்னுடைய புதிய தொழிலில் லாவண்யா பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆனால், அதில் அவர் முக்கியமாக அறிந்துகொண்டது பலருக்குத் தன்னைப் போல் ஆங்கில மொழி ஒரு தடையாக இருப்பதுதான். இதையடுத்து 2016-ம் ஆண்டு ‘Lavanya Jayakumar - Career Coach’ என்ற பெயரில் ஆங்கில மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கான வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கியுள்ளார். அதற்கான பலன் உடனடியாக அவருக்குக் கிடைக்கவில்லை. “ஒரு வீடியோவைப் பதிவிட்ட பிறகு யாராவது ‘லைக்’ செய்ய மாட்டார்களா எனக் காத்திருந்து இருக்கிறேன். நான் பதிவிட்ட வீடியோக்களை நானே ஐம்பது முறை பார்த்திருப்பேன். ஆனால் 2017, ஏப்ரல் மாதம் எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ‘உங்களால் ஆங்கிலத்தில் படிக்க முடிகிறது, புரிந்துகொள்ள முடிகிறது, ஓரளவு எழுத முடிகிறது ஆனால் பேசுவதில் சிரமமாக உள்ளதா?’ என்ற வீடியோவைத் திடீரென ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கத் தொடங்கினார்கள். அப்போது கிடைத்த வளர்ச்சி தற்போது ஐந்து லட்சம் பார்வையாளர்களாக உயர்ந்துள்ளது” என்கிறார். இதுவரை 450 வீடியோக்களுக்கு மேல் லாவண்யா பதிவிட்டுள்ளார்.

இவருடைய யூடியூப் வீடியோக்களை மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆங்கில மொழி கற்றல், திறன் மேம்பாடு, புத்தக அறிமுகம், சூழ்நிலையைக் கையாள்வது, தன்னம்பிக்கை எனப் பல்வேறு தலைப்புகளில் வாரத்தில் மூன்று நாட்கள் புதிய வீடியோக்களை அவர் பதிவிடுகிறார். இந்த வீடியோக்கள் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தாய் மொழிக்கு முதலிடம்

இதையடுத்து ஆங்கில மொழி கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு ‘LJ ACADEMY’ என்ற ஆன்லைன் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளார் லாவண்யா. இந்தப் பயிற்சி வகுப்பில் பதினைந்தாயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இவருடைய ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. “எங்களுடைய அகாடமியில் பள்ளியில் கற்றுத் தருவதுபோல் ஆங்கிலத்தைப் பயிற்றுவிப்பதில்லை. நடைமுறையில் ஆங்கில மொழியை எவ்வாறு கையாள்வது என்ற வகையிலேயே கற்றுத்தருகிறோம். ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணம், அலுவலகத்தில் ஆங்கிலத்தில் எவ்வாறு உரையாடுவது, மின்னஞ்சல் அனுப்புவது, தயக்கத்தை விடுத்து ஆங்கிலத்தில் உரையாடுவது ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஆங்கிலம் என்பதைப் பலர் அறிவுடன் ஒப்பிடுகிறார்கள். இதுதான் ஆங்கிலத்தை அந்நியப்படுத்துகிறது. தாய் மொழி நன்றாகத் தெரிந்திருந்தாலே ஆங்கிலம் மட்டுமல்ல, அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார் லாவண்யா.

தன்னுடைய அனுபவத்தையே மூலதனமாக மாற்றி வாழ்க்கையில் வெற்றிபெற்றுள்ள லாவண்யா ஜெயக்குமார், தேடல் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x