Published : 12 Jul 2015 01:13 PM
Last Updated : 12 Jul 2015 01:13 PM
கோவையைச் சேர்ந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது ரத்தன் டாடாவின் பார்வை விழுந்துள்ளது. இதுவரை இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்திருந்த டாடா, முதல் முறையாகத் தயாரிப்பு துறையில் முதலீடு செய்ய இருக்கிறது. அதுவும் ஆம்பியர் போன்ற வளர்ந்துவரும் நிறுவனத்தில் டாடா முதலீடு செய்வதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹேமலதா அண்ணாமலையை ஒரு காலை பொழுதில் சந்தித்தோம்.
“என் பெற்றோர் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். உடன் பிறந்தவர்கள் நாலு அக்கா, ஒரு தம்பி. என் கணவரும் ஒரு தொழில்முனைவோர்தான். எங்கள் மூத்த மகள் கல்லூரி படிக்கிறாள். இளையவள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். படித்து முடித்த பிறகும் கார்ப்பரேட் அனிமலாகத்தான் நான் இருந்தேன். சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தவர் என் கணவர்தான். நான் சிறகுவிரித்து நீண்ட தூரம் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவரும் அவர்தான்” என்று புன்னகையுடன் சொன்ன ஹேமலதா, நம் கேள்விகளை மிக இயல்பாக எதிர்கொள்கிறார்.
எலெக்ட்ரிக் மோட்டார் வாகன விற்பனையில் பெரும் நிறுவனங்களே இறங்க யோசித்து வரும் வேளையில் சிறு முதலீட்டாளராக உள்ள நீங்கள் எப்படித் தைரியமாக இறங்கினீர்கள்?
எல்லாத் தொழிலும் காசு பண்ணத்தான் என்றாலும் தொழில் மூலம் கிடைக்கும் லாபம் ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் என நினைத்து 27 வயதில் தொழில்முனைவோராக ஆனேன். எனக்கு இது ஐந்தாவது தொழில். 2007-ம் ஆண்டு, ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட போது டொயோட்டா நிறுவன விற்பனைப்பிரிவு பொது மேலாளர் பேசினார். எரியக்கூடிய இஞ்சின் துறையே அழியப் போகிறது எனத் தெரிவித்த அவரது பேச்சு என்னை ஈர்த்தது. தொடர்ந்து, அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான், சமுதாயத்துக்குப் பயனுள்ள தொழில்செய்ய வேண்டும், முத்திரை பதிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து இதை எடுத்தேன். எங்கள் தயாரிப்புகள் எரியக்கூடிய இஞ்சின் அல்ல, சத்தம் இல்லாதவை. அன்னியச் செலாவணி கொடுத்து பெட்ரோல் வாங்கத் தேவையில்லை.
இது கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் ஆகிய தொழில்நுட்பங்கள் இணைந்த தொழில். அதைப் புரிந்துகொண்டு வாடிக்கையாளருக்கு ஏற்ற வாகனம் காடுகளாம் என ஆரம்பிக்கும் போது நிறைய படிப்பினைகள் எங்களுக்குக் கிடைத்தன. வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தராத தயாரிப்பைக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்தோம். அதற்காக, அளவை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. சிறிய அளவில்தான் தொடங்கினோம்.
தொழில்முனைவோர்கள் பெரும்பாலும், நகர்ப்புறத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் மட்டும் கிராமப்புறத்தை முதலில் இலக்காகத் தீர்மானித்தது ஏன்?
கிராமப்புறங்களில் எலெக்ட்ரிக் வாகனத்தைப் பயன்படுத்த ஆர்வப்படுகிறார்கள் என்பதை அறிந்தோம். சிறிய அளவில் தொழில் தொடங்கியதால் வங்கிக் கடன்கூடக் கிடைக்கவில்லை. அதனால், சிறிய அளவில் இருந்தே அதுவும் கிராமத்தில் இருந்தே தொடங்கினோம். பிறந்தது சேலம், வளர்ந்தது சென்னை என்றாலும் கல்லூரி படிப்பைக் கோவையில் முடித்தபோது பொறியியல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற இடம் கோவை என்பதை அறிந்து வைத்திருந்தேன். அதனால், கோவையைத் தேர்வு செய்து தயாரிப்பைத் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் திரும்பிய திசை எல்லாம் நிறைய அடி. ஆனாலும் அதிகக் கவனத்துடன் மிதமான வேகத்தில் நேர்த்தியான செயல்பாடுகள் மூலம் பிரச்சினைகளைத் தாண்டி வெளியே வந்தோம்.
நீங்கள் தொழில் ஆரம்பித்த 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் மின்தடை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. அந்தச் சிக்கலை எப்படிச் சமாளித்தீர்கள்?
பெரிய சவால்தான். சுமார் 16 மணி நேரம் மின்தடை அமலில் இருந்த நேரம். என் கணவர் பாலா, எங்களின் நிறுவனச் சி.டி.ஓ பொறுப்பில் இருக்கிறார். கோமா நிலைக்குப் போன பேட்டரிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் தொழில்நுட்பத்தை அவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். சிக்கலான சூழ்நிலையில் இருந்து நாங்களே எங்களைப் புதுப்பித்துக் காத்துக்கொண்டோம்.
ரத்தன் டாடா உடனான சந்திப்பு எப்படி அமைந்தது?
முழுக்க முழுக்க என் சொந்த முயற்சி. எனது தொழில் குறித்து ரத்தன் டாடாவுக்குக் கடிதம் எழுதினேன். திடீரென ஒருநாள், அவரது அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. ரத்தன் டாட்டா கோவை வருகிறார், அவர் உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கோவை வந்த அவரைச் சந்தித்து எங்கள் தொழில் குறித்து விளக்கினேன். நான் சொல்வதை மிக உன்னிப்பாக நீண்ட நேரம் கண்ணைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், நான் எடுத்துச் சென்ற எனது தயாரிப்புகளைப் பார்த்தார். அனைத்தையும் கேட்ட பின்னர், தொழில் மீதான என் ஈடுபாட்டைப் புகழ்ந்தார். அப்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிராமப்புறத்தில் விற்பனை செய்வதால் மிகக்குறைந்த விலையால் மக்கள் கவரப்பட மாட்டார்கள், உறுதியான தரமும் இருக்க வேண்டும் எனச் சின்னச் சின்னத் தகவலாகச் சொல்லி அசத்தினார்.
பின்னர், அவரது நிறுவன நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்கள். நிறுவனம் தொடர்பான பல ஆய்வுக்குப் பின்னர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். அவர் சரியான நேரத்தில் பெரிய உதவி செய்துள்ளார். இது எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு.
வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பிரத்யேகமாக வாகனம் வடிவமைக்க என்ன காரணம்?
வயதானவர்கள் எங்கள் வண்டியைப் பயன்படுத்தினால் மகனிடம் சென்று பெட்ரோலுக்குக் காசு வாங்கத் தேவையில்லை. காரணம், மகனிடம் சென்று காசு கேட்பது மூத்த பெற்றோருக்குத் தன்மானப் பிரச்சினையாக அமையும். இதை ஒருநாள் உணர முடிந்தது. எங்களது ஷோரூமுக்கு இரு முதியவர்கள் வந்திருந்தார்கள். அவர்களைப் பேசுவதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு முதியவர், “நீ வண்டி வாங்கு, ரெண்டு மாசம் கழிச்சுதான் கரண்ட் பில் வரும். அதை அவன் கட்டிக் கொள்வான். பெரிய செலவு வராது” என்று சொன்னார். அப்போது வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஒருநாள் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் மாற்றுத் திறனாளி முதியவரின் வண்டியை ஒரு சிறுமி தள்ளிக்கொண்டு சென்றாள். அந்தக் காட்சி எனது மனதை உருக்கிவிட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கும் தகுந்த மாதிரி வண்டி தயாரிக்க முடிவு செய்தோம்.
இளம் தொழில்முனைவோருக்கு, அதுவும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனை என்ன?
விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் இருந்தால் போதும், வெற்றி பெறலாம். ஆசையைப் பேப்பரில் எழுதிவைத்து இலக்கு நிர்ணயித்து, அதை அடைய முயற்சிக்க வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பு உள்ளது. அதனைச் சீர்படுத்தி, நேர்படுத்த வேண்டும். நமக்கான டீமை அமைத்துக்கொள்ள வேண்டும். தொழில் சிக்கல் காரணமாக ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்குச் சம்பளத்தை அதிகப்படுத்த முடியவில்லை. இருப்பினும் அவர்கள் என்னுடன் இருந்தார்கள். காரணம், அவர்கள் தலைமை மீது கொண்டுள்ள நம்பிக்கை. அவ்வாறு, உங்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT