Published : 19 Jul 2015 12:49 PM
Last Updated : 19 Jul 2015 12:49 PM
சிறு வயதில் களிமண்ணில் பொம்மைகள் செய்து கண்காட்சி வைத்த பொன்னி, இன்று வீட்டில் இருந்தபடியே மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த பொன்னி, திருமணத்துக்குப் பிறகு சென்னையில் வசிக்கிறார். சென்னை நங்கநல்லூரில் இருக்கும் தன் வீட்டில் சுடுமண் நகைகள் எனப்படும் டெரகோட்டா ஜுவல்லரி செய்யப் பயிற்சியளிக்கிறார்.
“நான் ஸ்கூல் படிக்கும்போதே மெகந்தி போடவும் படம் வரையவும் கத்துக்கிட்டேன். அப்பவே களிமண் பொம்மைகள், கண்ணாடி ஓவியங்கள் ஆகியவற்றைச் செய்து கண்காட்சி வைப்போம். கண்காட்சியில என் கைவினைப் பொருட்கள் விற்பதைப் பார்த்து எனக்கு அவற்றின் மீது ஆர்வம் அதிகமாச்சு” என்கிறார் பொன்னி. அழகுக்கலை பயிற்சியை முடித்திருக்கும் இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்திவருகிறார்.
இரண்டு ஆண்டுகளாக சுடுமண் நகைகளைச் செய்து விற்பனை செய்கிறார்.
“எனக்கு டெரகோட்டா ஜுவல்லரி மேல திடீர்னு ஆர்வம் வந்துடுச்சு. அவற்றை எப்படி செய்யறதுன்னு இண்டர்நெட்ல தேடித் தேடிக் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அதுல எக்ஸ்பர்ட்டாவும் ஆகிட்டேன். ஐ.டி. கம்பெனிகளில் ஸ்டால் போடறேன். தெரிஞ்சவங்களுக்கும் செய்து தர்றேன். ஒரு மாசத்துல நாலு முறை ஸ்டால் போட்டு விற்பனை நடத்துவோம். அதுலயே கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் வந்துடும். இதுக்காகவே தனியா பேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சு ஆன்லைன் மூலமாகவும் என்னோட தயாரிப்புகளை விற்பனை செய்யறேன்” என்று தன் விற்பனை முறையை விளக்குகிறார் பொன்னி.
தற்போது பலரும் சுடுமண் நகைகளைச் செய்வதால் அதில் இருந்து தனித்து நின்றால்தான் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதையும் பொன்னி புரிந்துவைத்திருக்கிறார்.
“பொதுவா எல்லாரும் மோல்டு மூலமாதான் டெரகோட்டா ஜுவல்லரி செய்வாங்க. ஆனா நான் ஒவ்வொண்ணையும் என் கையாலயே செய்வேன். ஒவ்வொரு முறையும் புதுப்புது உருவங்களை வடிவமைப்பேன். ஏதாவது ஒரு கருத்தையோ உட்பொருளையோ அந்த உருவங்கள் மூலமா வெளிப்படுத்துவேன். அதனால என்னோட படைப்புகளைப் பலரும் தேடி வந்து வாங்கறாங்க” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் பொன்னி.
படங்கள்: எல். சீனிவாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT