Published : 26 Jul 2015 11:58 AM
Last Updated : 26 Jul 2015 11:58 AM
நடுங்கும் விரல்களால் தூரிகை பிடித்து நயமான ஓவியங்களை எழுதுகிறார் கமலா. எழுபத்தைந்து வயதான இவர், இப்போதும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார். 1940-ல் திருச்சி மணச்சநல்லூரையடுத்த சாவக்காடு என்னும் குக்கிராமத்தில் பிறந்தார் கமலா. பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்ற இவரது அப்பாவின் கட்டுப்பாட்டைத் தன் அயராத வைராக்கியத்தால் உடைத்தெறிந்த அம்மாவை நன்றியோடு நினைவுகூர்கிறார்.
“அம்மா இல்லைன்னா நான், என் அக்கா, தங்கை யாருமே படிச்சிருக்க முடியாது. நான் ஆசிரியப் பயிற்சி முடிச்சதுமே கல்யாணமாகிடுச்சு. வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லித்தான் அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. குடும்ப நிர்வாகம், பிள்ளைகள் வளர்ப்புன்னு நாள் ஓடினதே தெரியலை. ரொம்ப நாள் கழிச்சிதான் வேலைக்குப் போகாதது எவ்ளோ பெரிய இழப்புன்னு உணர்ந்தேன்” என்று சொல்லும் கமலா, அந்தக் காலத்துப் பத்திரிகைகள், நாளிதழ்களில் வந்த ஓவியங்களை வரைந்து பழகியிருக்கிறார்.
“நான் ஸ்கூல் படிக்கற காலத்துல நவம்பர் 14-ம் தேதியை நேரு பிறந்தநாளா கொண்டாடுவாங்க. நான் ஒன்பதாவது படிக்கும்போது நான் வரைஞ்ச ஒரு ஓவியத்தை எங்க டிராயிங் டீச்சர், டெல்லிக்கு அனுப்பி வச்சாரு. அந்த ஓவியம் நல்லா இருந்ததுன்னு அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் கையெழுத்து போட்டு ஒரு சர்டிஃபிகேட் அனுப்பினாரு” என்று பெருமிதத்துடன் சொல்லும் கமலா, வாட்டர் கலர் ஓவியங்களை விரும்பி வரைகிறார்.
“அப்போல்லாம் வாட்டர் கலர் ஓவியங்கள்தான். தமிழ்ப் புத்தகங்களோடு ரஷ்ய நாவல்களையும் படிப்பேன். வெளிநாட்டுல இருந்து ‘டைஜெஸ்ட்’ புத்தகம் வரும். அதுல நிறைய மாடல்களோட படங்கள் இருக்கும். நான் அந்தப் படங்களைப் பார்த்து, அதுல கொஞ்சம் மாற்றம் செய்து நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி வரைவேன்” என்கிறார் கமலா.
“இதெல்லாம் எதுக்கு வேண்டாத வேலைன்னு என் கணவர் சொல்லுவார். அப்போ கொஞ்சம் வருத்தமா இருந்தாலும் இந்தக் கலைகள்தான் நான் உயிர்ப்புடன் இருக்கக் காரணம். குழந்தைகள் வளர்ந்து ஹை ஸ்கூல் போனதும் நான் ஃபேப்ரிக் பெயிண்டிங் கத்துக்கிட்டேன்” என்று தன் கலைகளின் எல்லை விரிவடைந்த கதையைச் சொல்கிறார்.
அறுபது வயதுக்குப் பிறகு தஞ்சாவூர் ஓவியத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கமலாவுக்கு வந்தது. அதற்காக ஸ்ரீ ரங்கம் வந்து, தஞ்சாவூர் ஓவியத்தை முறையாகப் பயின்றிருக்கிறார். கமலாவின் ஓவியங்களில் புராதனக் காட்சிகள் கண் முன் விரிகின்றன.
“கைவினைப் பொருட் களையும் செய்வேன். ஃபேஷன் நகைகள், சிப்பி விநாயகர், பாதாம் பருப்பு ஓட்டிலும் பஞ்சிலும் பொம்மைகள்னு நிறைய செய்வேன். நான் செய்யற பொருட்களை உறவினர்களுக்கும் தெரிந்தவர் களின் குழந்தைகளுக்கும் பரிசா கொடுப்பேன்” என்று குழந்தையின் குதூகலத்தோடு சொல்கிறார் கமலா.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT