Published : 26 Jul 2015 12:01 PM
Last Updated : 26 Jul 2015 12:01 PM

கேளாய் பெண்ணே: ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியுமா?

நான் இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறேன். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச விருப்பம். என் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கான ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.

- ஏ. ரெஜிகா கலாவதி, கேரியர் கவுன்சிலர், போதி

ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் சரளமாகப் பேசுவதற்கு தினமும் மூன்று விதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முதல் பயிற்சி, தினமும் ஒரு மணி நேரமாவது நண்பர்களிடமோ, குடும்பத்தினர்களிடமோ ஆங்கிலத்தில் பேச வேண்டும். இரண்டாவது பயிற்சி, தினமும் இருபது நிமிடமாவது ஆங்கிலச் செய்திகளை ரேடியோவிலோ, தொலைக்காட்சியிலோ கேட்க வேண்டும். மூன்றாவது பயிற்சி, ஆங்கிலச் செய்தித்தாள்களைத் தினமும் வாசிக்க வேண்டும். இந்த மூன்று பயிற்சிகளும் 40:40:20 விகிதத்தில் உங்கள் ஆங்கில அறிவை மேம்படுத்தும். பயணங்களின்போது ரேடியோவில் ஆங்கிலச் செய்தி களைக் கேட்பது, அந்த ஆங்கிலச் செய்தி முடிந்தவுடன் அதே செய்திகளைத் தமிழில் கேட்டுப் புரிந்துகொள்வது போன்றவை ஆங்கில உச்சரிப்பையும் மொழியறிவையும் வளர்க்கும். எந்தவொரு மொழியிலும் சரளமாகப் பேசுவதற்கு கேட்டல் பயிற்சி அவசியம். ஆனால், இந்தப் பயிற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்வது முக்கியம். நண்பர்களுக்குள் போட்டி வைத்து இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அது மொழியை வேகமாகக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தைக் கொடுக்கும்

நான் வீட்டிலேயே சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி, கறி மசாலா பொடி, கறிவேப்பிலை பொடி போன்றவற்றைத் தயாரிக்க விரும்புகிறேன். அவற்றை சுவையாகத் தயாரிப்பது எப்படி?

- பிரேமா ரேவதி சண்முகம், சமையல் கலை நிபுணர், சென்னை

சாம்பார் பொடி செய்ய அரை கிலோ மிளகாய், அரை கிலோ தனியா, கால் கப் துவரம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசியும் கடலைப் பருப்பும், கால் கப் மிளகு, ஆறு விரலி மஞ்சள் ஆறு இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாகக் காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டால் சாம்பார் பொடி தயார்.

கறி மசாலாப் பொடி அரைக்க மிளகாய் அரை கிலோ, தனியா கால் கிலோ, சோம்பு, மிளகு, சீரகம், கசகசா போன்றவை கால் கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா எட்டு துண்டுகள் (வாசனை விரும்புகிறவர்கள் பத்து துண்டுகள்) எடுத்துக் கொள்ளுங்கள். மிளகாயைத் தவிர மற்றப் பொருட்களை லேசாக வறுத்து, ஆறியதும் அரைக்கவும். இந்தப் பொடியை அசைவ குருமாக்களுக்கும், மசாலா குருமாக்களுக்கும் பயன்படுத்தலாம்.

கரம் மசாலா பொடி செய்ய லவங்கம் 25 கிராம், பெரிய கருப்பு ஏலக்காய் நான்கு, பட்டை, பச்சை ஏலக்காய், மிளகு, சீரகம், போன்றவை 25 கிராம், பிரிஞ்சி இலை 10 கிராம், தனியா 100 கிராம் (சற்று குறைப்பதென்றாலும் குறைத்துக்கொள்ளலாம்) தேவை. இந்தப் பொருட்களை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளலாம்.

கறிவேப்பிலை பொடி செய்வதற்கு நன்றாகச் சுத்தம் செய்த கறிவேப்பிலை இரண்டு கப், உளுந்து அரை கப், துவரம் பருப்பு கால் கப், சீரகம் 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் 12 முதல் 15, பெருங்காயத் தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் 2 டீஸ்பூன் தேவை. எண்ணெயில் மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து எடுக்க வேண்டும். அதே எண்ணெய்யில் உளுந்தையும் துவரம் பருப்பையும் நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பெருங்காயத்தையும், சீரகத்தையும் தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பில்லை, உப்பு இரண்டையும் தனியாக வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பில்லையை மொறுமொறுப்பாக இருக்குமாறு வறுக்கவும். அனைத்தையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இந்தக் கறிவேப்பிலைப் பொடியைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x