Published : 26 Jul 2015 12:09 PM
Last Updated : 26 Jul 2015 12:09 PM
தான் நடித்த முதல் திரைப்படத்துக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்த பெருமிதத்தின் சுவடு துளியும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார் காளீஸ்வரி சீனிவாசன். இவர் நாயகியாக நடித்த ‘தீபன்’ திரைப்படம், இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான ‘தங்கப் பனை’ விருது வென்றிருக்கிறது. நவீன நாடக நடிகையான காளீஸ்வரி, சென்னை ரெட்டேரியைச் சேர்ந்தவர். அப்பா, சீனிவாசன் ராணுவ வீரர். அம்மா சாந்தகுமாரி, பள்ளி ஆசிரியை. நடிப்புக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்லாத நடுத்தரக் குடும்பம்.
கல்லூரி படிப்பை முடித்ததும் காளீஸ்வரிக்கு பி.பி.ஓ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையில் வருமானம் கிடைத்ததே தவிர மனதுக்கு நிறைவில்லை. அப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், அந்த வேலையை விட்டுவிட்டு ‘தியேட்டர் ஒய்’ நாடகக் குழுவில் தொகுப்பாளினி பயிற்சியில் சேர்ந்தார். நாடகக்குழு இயக்குநர் யோக், காளீஸ்வரிக்கு நடிப்பு நன்றாக வருவதாக உற்சாகப்படுத்த, அப்படித்தான் காளீஸ்வரியின் மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. அதன் பின்னர் முழுநேர நாடக நடிகையாக மாறியவர் ‘தியேட்டர் ஒய்’ மட்டுமின்றி, கோவில்பட்டி முருகபூபதியின் ‘மணல்மகுடி’ புதுச்சேரி ‘இந்தியநாஷ்ட்ரம்’ போன்றவற்றிலும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதை சொல்லியாகவும் இருக்கிறார்.விழிப்புணர்வு வீதி நாடகங்களில் நடிப்பதும் காளீஸ்வரியின் விருப்பங்களில் ஒன்று.
“கால்செண்டர்ல வேலை பார்த்த எனக்கு, வேறொரு உலகத்தை இந்த நாடகத் துறை அறிமுகப்படுத்தியது.
இது முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு ஆடம்பர வாழ்க்கைக்கு வாய்ப்பில்லை என்றாலும் மனநிறைவுக்குக் குறைவில்லை. நான் இந்தத் துறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. நாடகங்கள் எனக்குச் சோறு போட்டதுடன், ‘தீபன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தன” என்கிறார் காளீஸ்வரி.
போரில் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து புலம்பெயரும் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகிறது ‘தீபன்’ திரைப்படம்.
“இந்தப் படத்தில் யாழினி என்ற பெண்ணாக நடித்தபோது, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வலியை உணர்ந்தேன். கான் திரைப்பட விழாவில் படம் முடிந்ததும் அனைவரும் நெகிழ்ச்சியில் எழுந்து நின்று கைதட்டி எங்கள் குழுவைப் பாரட்டியதை மறக்க முடியாது. ஃபிரெஞ்ச் மொழியில் இயக்குநர் ஜாக் ஒதியார்து உருவாக்கிய இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றவருக்குத் தன் அம்மா சாந்தகுமாரியிடம் இருந்து பாராட்டு பெற்றது மிகப் பெரிய அங்கீகாரம் என்கிறார்.
“பொதுவாக நடிப்புத் தொழிலுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. நல்ல வேலையில் இருந்து வெளியே வந்து, அதுவும் மேடை நாடகத்தில் நடிக்கப் போகிறேன் என்றதும் வழக்கம் போல் என்னுடைய வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறித்தான் நடித்து வந்தேன். நான் இந்தத் துறைக்கு வந்த பிறகு ஒருமுறைகூட என் தொழில் குறித்துப் பேசாத என் அம்மா ‘தீபன்’ படத்துக்குக் கிடைத்த விருதுக்குப் பிறகு வாழ்த்தினார்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காளீஸ்வரி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் மாரி கதாபாத்திரத்தில் நடித்த வினோத், இவரது கணவர். இருவருமே நாடகத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் காளீஸ்வரியின் கலைப் பயணம் தடங்கலின்றித் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT