Published : 05 Jul 2015 02:43 PM
Last Updated : 05 Jul 2015 02:43 PM
சில சமூகப் போக்குகளை முதலில் பார்க்கும்போது அதிசயமாக இருக்கும். ஆனால் நெருங்கி ஆராயும்போது, அதன் காரணங்கள் புரிபடத் தொடங்கும். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களை, கேரளப் பெண்கள் மணக்கும் போக்கு அப்படியானதுதான். சமூக ரீதியாகவும், மனித வளர்ச்சிக் குறியீடுகளிலும் சிறந்த நிலையிலிருக்கும் மாநிலத்திலிருந்து பெண்கள் மோசமாக நடத்தப்படும், பெண்கள் விகிதாச்சாரம் குறைந்த மாநிலத்தின் ஆண்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர்.
பெண்களின் விகிதாச்சாரம் மிகக் குறைந்த நிலையில் இருப்பதால், மணப்பெண் தட்டுப்பாடு காரணமாக ஹரியாணாவைச் சேர்ந்த ஆண்கள், பிஹார், மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு மணப்பெண் தேடிச் செல்கிறார்கள் என்பதைச் சமீபத்தில் வெளியான செய்திகள் சொல்கின்றன. இந்தத் திருமணங்களுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும், மணப்பெண்களின் நோக்கங்களையும் புரிந்துகொள்வதற்காகச் சமீபத்தில் நாங்கள் கேரளாவுக்குப் பயணித்தோம்.
பெண்களே பாரம் சுமக்கிறார்கள்
நமது இந்தியச் சமூகத்தில் திருமணமாகாமல் இருப்பதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. மணப்பெண்களைத் தேடி அலையும் ஹரியாணா ஆண்கள் இந்த விலையை நன்கு அறிவார்கள். எங்களது ஆய்வில் உள்ளூரில் மணப்பெண் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லாமல் மணப்பெண்ணைத் தேடிக் கேரளம் வரும் ஹரியாணா ஆண்களுக்கு மனைவியை அடைவதற்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பது தெரியவந்தது. கேரளத்தில் உள்ள மிகுந்த வறிய நிலையில் உள்ள குடும்பங்களிலிருந்தே மணப்பெண்களாக ஹரியாணா செல்கின்றனர். குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட மகள்களைப் பெற்ற வறிய குடும்பங்கள் அவை. திருமண வயதைக் கடந்தும் மணமாகாமல் தனியாக இருப்பதைவிட யாரையாவது திருமணம் செய்துகொள்வது மேலானதாகப் படுகிறது. அப்படித் திருமணமான ஒரு பெண்ணின் தந்தை எங்களிடம் பேசும்போது, “எங்கள் குடும்பத்தில் வசதி இருந்திருந்தால் எங்கள் பெண்ணை ஹரியாணாவுக்கு அனுப்பியிருக்க மாட்டோம்” என்றார்.
நாங்கள் சந்தித்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதுபோன்ற திருமணங்களின் சிக்கலான பரிமாணம் பற்றி கூறினார். திருமணம் என்ற ஒன்றை ஏன் தவிர்க்க முடியாதென்பதையும், அதனால் குறிப்பாகப் பெண்கள்தான் சங்கடங்களையும் அடைகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார். ராணி எட்டாம் வகுப்பு படித்தவர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இவர் ஹரியாணாவில் இருந்து வந்த ஆணைத் திருமணம் செய்தார். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவருக்கு அந்த மாப்பிள்ளை ஒரு உறவினர் மூலம் அறிமுகமானார். மாப்பிள்ளையின் புகைப்படத்தைக்கூட ராணி பார்க்கவேயில்லை. தான் நினைத்ததைவிட அவர் வயதானவராக இருந்தார் என்பதை நினைவுகூர்கிறார் ராணி. ராணியின் திருமணம் கோயிலிலோ பஞ்சாயத்திலோ பதிவு செய்யப்படவேயில்லை. ஒரு விடுமுறை நாளில் நடந்தது அவர்களது திருமணம். ராணியும் அவரது கணவரும் ஒரு திருமணப் புகைப்படத்தைக்கூட எடுத்துக்கொள்ள அவகாசமின்றிக் குடும்பம் நடத்துவதற்காக ஹரியாணாவுக்குச் சென்றனர். ஹரியாணாவுக்குப் போன பிறகுதான் தனது கணவர் மது போதை அடிமை என்பதை உணர்ந்தார் ராணி. தினசரி வீட்டில் ஏச்சுபேச்சுக்குப் பஞ்சமில்லை. ராணி தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் உதவியுடன் கேரளம் திரும்பினார். அவர்கள்தான் ரயில் கட்டணத்தைக் கொடுத்து உதவியதாக ராணி சொல்கிறார்.
தனது கணவருடன் பல சங்கடங்களை அனுபவித்த ராணி, அடைந்த சிரமங்கள் அனைத்தும் போதும் என்று கடந்த வருடம் முடிவுசெய்தார். கேரளத்துக்கு நிரந்தரமாகவே வந்துவிட்டார். ராணியின் கணவன் அடுத்த சில மாதங்களிலேயே உடல்நலமில்லாமல் இறந்துபோனார். தன் கணவனின் மரணச் சான்றிதழை வாங்க ராணி ஹரியாணா சென்றபோது, கணவனின் குடும்பத்தினர் ஒரு வெள்ளைத்தாளில் ராணியிடம் வற்புறுத்திக் கையெழுத்து வாங்கினர். இறந்த கணவனின் எஞ்சிய உடைமையாக இருந்த வீட்டை ராணி உரிமை கோரக் கூடாது என்பதற்குத்தான் அந்தக் கையெழுத்து. அதற்குப் பிறகு ராணியின் கணவர் குடும்பத்தினரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவேயில்லை.
இதுபோன்று நடக்கும் திருமணங்களில் ஒரு வகைமை இருப்பதைப் பார்க்க முடிகிறது. இறந்துவிட்ட கணவனின் குடும்பத்தினரைப் பிரிந்துவந்த கேரளப் பெண் தொடர்பு கொண்டபோது, அவரது கணவன் பெயரில் யாருமே இல்லையென்று அவர்கள் சொன்ன சம்பவமும் நடந்துள்ளது. இன்னொரு சம்பவத்தில் திருமணமான பின்னர், கேரளத்துக்குத் திரும்பிவந்து புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவியைப் பார்க்க அவருடைய கணவன் வரவேயில்லை. அவர் இறந்தபின்னும் சடலத்தைப் பார்க்கக்கூட அந்தக் கணவர் வரவில்லை. “நாங்கள்தான் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் செய்தோம். ஏனெனில் அவள் எங்கள் மகள்” என்கிறார் இறந்துபோன அந்தப் பெண்ணின் தாய்.
நல்ல எதிர்காலத்துக்கான நுழைவுச்சீட்டு
நாங்கள் தொடர்புகொண்ட அனைத்துக் குடும்பங்களில் உள்ளவர்களும் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். தங்கள் மகள்களை எதிர்காலத்தில் கவனிக்க யாரும் இல்லாமல் போய்விடுவார்கள் என்ற அச்சத்திலேயே தூர இடங்களில் உள்ள அந்நிய ஆண்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சம்மதித்ததாகக் கூறினார்கள். இந்தியாவில் திருமணம்தான் ஒரு பெண்ணுக்கான நல்ல எதிர்காலத்துக்கான வாய்ப்பு என்று இன்னும் நம்பப்படுகிறது என்பதே இதில் உள்ள கசப்பான உண்மை.
திருமண வாழ்வு சிறப்பாக இருந்தால் அந்த எண்ணம் நிறைவேறும். அப்படியில்லாமல் போனால் பெண்தான் அதன் பின்விளைவுகளைச் சுமக்கிறாள். கேரளத்தில் நிறைய ஏழைக் குடும்பங்கள் மணமகன் பற்றி ஏதும் அறியாமலேயே திருமணத்துக்குச் சம்மதிக்கின்றனர். அப்படித் திருமணம் நடத்திவைக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெண்ணுக்கு நேர்ந்ததை ‘விதி’ என்று சொல்லிவிடுகின்றனர். “ஒருவர் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் அவருக்கு நடக்கும்” என்கிறார் ஒரு மணப்பெண்ணின் தாய்மாமன். மணமகன் என்று இன்னொருவரின் புகைப்படத்தைக் காட்டி, வேறு ஒருவருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார் அந்தப் பெண்.
இந்தத் திருமணங்கள் அனைத்திலும், பெண்கள், விரும்பியோ விரும்பாமலோ திருமணத்துக்குச் சம்மதிக்கக் காரணம், ஒரு சுமையாகக் குடும்பத்திலிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்தான். குடும்பங்களோ தமது பெண்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் திருமணம் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றன. முன்பின் தெரியாத ஒரு அந்நிய ஆணுடன் இந்தப் பெண்கள் எப்படித் திருமணத்துக்குச் சம்மதித்து மொழி தெரியாத, பரிச்சயமேயில்லாத உணவுப்பழக்கங்களும், சமூகப்பழக்கங்களும், பாகுபாடுகளும் நிலவும் இடங்களுக்கு எப்படிச் செல்லத் துணிந்தார்கள் என்னும் கதைகளைக் கேட்பது மிகவும் சங்கடமானது. அதேநேரத்தில் அவர்களது தைரியமும் வியக்கவைப்பது. சில சம்பவங்களில் பெண்கள் தங்கள் கணவர்களுடனேயே திரும்பக் கேரளம் வந்து நன்றாக வாழவும் செய்கின்றனர்.
இந்தியாவில் திருமண வயது கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் திருமணம் என்ற நிறுவனம் இன்னும் வலுவாகவே உள்ளது. அவ்வளவு சீக்கிரத்தில் உடையும் சூழலும் இல்லை. நாங்கள் நடத்திய இந்த ஆய்வு மேலும் இந்த நிலைமைகளை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.
© தி இந்து ஆங்கிலம்
தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT