Last Updated : 19 Jul, 2015 01:03 PM

 

Published : 19 Jul 2015 01:03 PM
Last Updated : 19 Jul 2015 01:03 PM

வானவில் பெண்கள்: வெற்றிக்கு வித்திட்ட விரல்கள்!

இயற்கையில் கிடைக்கும் எந்தப் பொருளும் வீண் அல்ல என்பதைப் புரிந்துவைத்திருக்கிற கிராமப் பெண்கள், அதைத் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

தங்கள் கிராமம் மட்டுமே உலகமாக இருந்த அந்தப் பெண்களுக்கு, இன்று புதுச் சிறகு முளைத்திருக்கிறது.

கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டணம் பகுதியில் சோப்பனூர், தாமோதரஅள்ளி, ஆவத்தவாடி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தனியாகவும், சுயஉதவிக் குழுக்களாக இணைந்தும் தென்னங்கீற்று பின்னுதல், துடைப்பம் தயாரித்தல் மற்றும் குச்சி எடுத்தல் போன்ற சிறுதொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்கள் வீட்டுப் பொருளாதாரத்தை நிறைவுசெய்வதுடன், சுற்றியிருக்கும் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர்.

சோப்பனூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி முதல் பள்ளி செல்லும் எட்டு வயதுச் சிறுமி வரை துடைப்பம் தயாரிக்கும் பணியைச் செய்கின்றனர்.

“என் வீட்டுக்காரர் மட்டும் சம்பாதிக்கற பணம், குடும்பத்தை நடத்தப் போதாது. அவரோடு சேர்ந்து நாங்களும் குடும்பப் பாரத்தைப் பங்கு போட்டுக்கறோம்” என்று சொல்கிறார் லட்சுமி. மாமியார், மருமகள், பேத்தி என்று மூன்று தலைமுறையும் துடைப்பம் தயாரிக்கும் வேலையைச் செய்கிறது.

“என் வீட்டுக்காரர் ஊர் ஊரா போயி தென்னை மட்டைகளை எடுத்துக்கிட்டு வருவாரு. துடைப்பத்தை உள்ளூர் கடைகளுக்கும், வெளியூர் வியாபாரிகளுக்கும் வித்திடுவோம். இப்படி வர்ற காசு, குழந்தைகளோட ஸ்கூல் செலவுக்கு உதவுது” என்று சொல்லும் லட்சுமி, பெண்கள் அனைவரும் இணைந்து தொழில் குழு ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார்.

ஒற்றுமை தந்த வெற்றி

மறுமலர்ச்சிக் குழு செயலாளர் எல்லம்மாள், “எங்க கிராமத்துல வறுமை கோட்டுக்குக் கீழே வாழுற குடும்பங்கள் அதிகம். ஆண்கள் வேலைக்குப் போன பிறகு பெண்கள் தென்னங்கீற்று பின்னும் தொழில் செய்து, அதில் வரும் வருமானத்தின் மூலம் குடும்பத்தின் இதர செலவுகளைச் சமாளிக்கிறோம். தற்போது தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 20 பெண்கள் இணைந்து குழு அமைத்துத் தென்னந் தோப்பை ஒப்பந்த முறையில் குத்தகைக்கு எடுத்திருக்கி றோம். இந்த ஏற்பாட்டால் ஒரே இடத்தில் தென்னை மட்டைகளைச் சேகரித்துக் கீற்றுகளைத் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. பகலில் மற்ற வயல் வேலைகளையும் ஏரியைத் தூர்வாரும் வேலையையும் செய்துகொண்டு மாலையில் இந்த வேலையைச் செய்கிறோம்” என்கிறார்.

ஒரு கட்டுக்கு 24 கீற்று வீதம் ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ஒரு லோடு கீற்றுக் கட்டுகளை விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

“இப்படிச் சம்பாதிக்கறதும் சொந்தக் காலில் நிக்கறதும் எங்க தன்னம்பிக்கையை அதிகமாக்கி இருக்கு” என்கிறார் எல்லம்மாள்.

“இவ்ளோ நாளா தனித்தனியா ஓலையைக் கிழிச்சிக்கிட்டு இருந்தோம். இப்போ ஏழு மாசமா நாங்க இருவது பேர் ஒண்ணாச் சேர்ந்து வேலை செய்யறோம். நாங்களே நேரிடையாகக் கடைகளுக்கு சப்ளை செய்யறதால, எப்படி வியாபாரம் பண்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம். பேங்க், இயக்கக் கூட்டம் எல்லாத்துக்கும் நாங்க குழுவா போயிட்டு வருவோம்” என்கிறார் அம்மன் குழுத் தலைவி பிரபாவதி.

விறுவிறுவென தென்னையோலை யைக் கிழிக்கும் விரல்கள், உழைப்பின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x