Published : 05 Jul 2015 01:51 PM
Last Updated : 05 Jul 2015 01:51 PM

போகிற போக்கில்: திருமணத்துக்குப் பிறகும் துளிர்விட்ட வெற்றி

பள்ளி நாட்களில் தான் வாங்கிய பரிசு தனக்குக் கைவினைக் கலைஞர் என்ற அடையாளத்தைத் தந்திருப்பதாகச் சொல்கிறார் பிரபாவதி. பாண்டிச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த இவர் கண்ணாடி ஓவியங்கள், ஆரத்தித் தட்டுகள், விதவிதமான கைவினைப் பொருட்கள், தையல் வேலைப்பாடுகள், பரிசுப் பொருட்கள் எனப் பலவிதமான கலைகளைக் கற்றுவைத்திருக்கிறார்.

“எனக்குச் சொந்த ஊர் சென்னை. ஸ்கூல் படிக்கும்போதே எனக்குக் கிராஃப்ட் மேல ஆர்வம் அதிகம். நான் ஆறாவது படிக்கும்போது தையல் போட்டி நடந்தது. திடீர்னு ஒரு தலைப்பை அறிவிச்சு எம்ப்ராய்டரி போடச் சொன்னாங்க. அந்தப் போட்டியில எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. அந்தப் பரிசுதான் எனக்குள்ள இருந்த திறமையை எனக்குப் புரியவச்சுது” என்கிறார் பிரபாவதி. அதன் பிறகு ஓய்வு நேரங்களில் படங்கள் வரைவது, தையல் பழகுவது என்று இருந்தவர், திருமணத்துக்குப் பிறகு அவற்றை மறந்துவிட்டார்.

“கல்யாணமானதும் எல்லாமே மாறிப்போச்சு. பத்து வருஷத்துக்கு முன்னால, ‘நம்மளோட அடையாளம் இல்லத்தரசி மட்டும்தானா? இத்தனை நாள் கைவினைக் கலைகள் மேல இருந்த ஆர்வம் எங்கே போச்சு?’ன்னு என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். கேள்வியோட மட்டும் நின்னுடாம கைவினைக் கலைகளை முறைப்படி கத்துக்கிட்டேன். என்கூட பயிற்சி எடுத்துக்கிட்டவங்களுக்கு என்னென்ன தெரியுமோ அவங்ககிட்டே இருந்து அதையும் கத்துக்கிட்டேன்” என்று சொல்லும் பிரபாவதி, தற்போது தையல் வகுப்புகள் எடுக்கிறார். கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றுத் தருகிறார்.

ஆரம்பத்தில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் வாங்கத் தன் கணவனின் பொருளாதார உதவியை நம்பியிருந்தவர் இன்று தன் செலவுகளைத் தானே சமாளித்துக்கொள்கிறார்.

“என்னோட இந்த ஆர்வத்தை வீட்ல இருக்கறவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. நான் வேலை செய்துட்டு இருக்கும்போது இடைஞ்சல் பண்ண மாட்டாங்க. நான் செய்கிற பொருட்களில் இருந்து கிடைக்கிற வருமானம் எனக்குத் தன்னம்பிக்கை தருது” என்கிறார் பிரபாவதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x