Published : 28 Jun 2015 02:42 PM
Last Updated : 28 Jun 2015 02:42 PM
ஊசி போடுவது, மாத்திரைகளை நோயாளி களுக்குத் தந்தனுப்புவது மட்டுமே தன் கடமை என்று நினைக்கவில்லை கல்பனா. அந்த உயரிய நினைப்புதான் அவருக்குக் குடியரசு தலைவர் கையால் விருது பெற்றுத் தந்திருக்கிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி செவிலியர் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கல்பனா சம்பத், கிராமத்து அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சர்வதேச ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைச் சர்வதேசச் செவிலியர் தினமான மே 12-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டார். நாடு முழுவதும் மொத்தம் 35 செவிலியர் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாதி கிராமம்தான் கல்பனாவின் சொந்த ஊர். ஏழ்மையான குடும்பம். தந்தை பீடி சுற்றும் தொழில் செய்தார்.
“என் அப்பா கம்யூனிஸத் தத்துவங்களைப் படிப்பார். அதனால் வீ்ட்டில் பாரதியார், கம்யூனிஸ நூல்கள், ரஷ்யப் பதிப்பாக வெளிவந்த இலக்கிய நூல்கள் நிறைய இருக்கும். எனக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள். அனைவரையும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்தார். 78-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபோது, ராணுவத்தில் உதவித் தொகையோடு நர்சிங் படிக்கலாம் என்ற செய்தியைப் பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்தேன். அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் கொல்கத்தாவில் ராணுவத்தின் மூலம் நர்சிங் படித்தேன்” என்று சொல்கிறார் கல்பனா.
கிராமத்தில் பிறந்து, வளர்ந்த வருக்குக் கொல்கத்தா போன்ற பெருநகரத்தில் தங்கிப் படிக்கும் தைரியத்தை அவருடைய பெற்றோர் தந்தனர். உதவித்தொகையுடன் படிப்பை முடித்து, ராணுவத்தில் லெப்டினென்ட் பொறுப்பில் பணியில் சேர்ந்தார். இமாச்சல பிரதேசத்தில் பதான்கோட்டில் பயிற்சி முடித்து, பணியைத் தொடங்கினார்.
“அது மிகவும் பதற்றமான நேரம். ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தது. நாள் முழுக்க வேலை இருக்கும். பிறகு ஜம்மு அருகே உதம்பூரில் பணி மாற்றம் கிடைத்தது. சீக்கியர் விவகாரம், இந்திரா காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் நடந்த காலம் அது. ஆறு மணிக்கு மேல் மின்சார இணைப்பு இருக்காது. பனி அதிகமாக இருக்கும். பஸ் வசதி இருக்காது. டிரக்கில்தான் செல்ல வேண்டும். புதிய இடம், புரியாத மொழி. எல்லாமே எனக்குப் பல அனுபவங்களைத் தந்தன” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கல்பனா. கல்பனாவின் வருமானத்தில் அவருடைய தம்பி, தங்கைகள் படித்தனர்.
அனுபவங்கள் தந்த பாடம்
பிறகு புனே, வெலிங்டன், கான்பூர் என்று அடுத்தடுத்துப் பணி மாறுதலும் பதவி உயர்வும் கிடைத்தன. இதற்கிடையே கல்பனாவுக்குத் திருமணமானது. பதினோரு ஆண்டுகள் ராணுவப் பணிக்குப் பிறகு 93-ல் பணியிலிருந்து விலகினார். ஜிப்மரில் முன்னாள் ராணுவவீரர் ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது. ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பு கமிட்டி, சேவைத்தரம் குழு, விபத்துப் பாதுகாப்பு குழு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
“என் கணவர் மாநில அரசு பணியில் இருக்கிறார், குழந்தைகள் மருத்துவமும் பொறியியலும் படிக்கின்றனர். ராணுவப் பணியில் இருந்ததால் பல அனுபவங்களுடன் ஆங்கிலம், மலையாளம், இந்தி, பெங்காலி, பஞ்சாபி, மராட்டி ஆகிய பல மொழிகள் எனக்குப் பரிச்சயமாகின. ஜிப்மரில் பணியாற்றும் டாக்டர்கள், அதிகாரிகள், நர்ஸ்கள், மாணவர்கள் பலரும் வெளிமாநிலத்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. அதனால் அவர்கள் நோயாளிகள் கூறுவதைப் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் கற்றுத்தர முடிவெடுத்தேன்.
30 பக்கத்தில் சிறிய புத்தகம் தயாரித்தேன். மருத்துவமனையில் தமிழ் தெரியாதவர்களுக்கான ஆங்கில வழி கற்றல் முறையில் அந்தப் புத்தகத்தை வடிவமைத்தேன். பணிமுடிந்த பிறகு மாலையில் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன்” என்கிறார் கல்பனா. மருத்துவம் தொடர்பான வார்த்தைகள், நோயாளிகளின் பிரச்சினைகள் சார்ந்த வார்த்தைகள், அவர்கள் கேட்கும் முக்கியக் கேள்விகள் ஆகியவை அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செவிலியர் பணியில் இருக்கிறார் கல்பனா. சுனாமி பேரழிவு, தானே புயல் பாதிப்பு ஆகிய நாட்களில் பணியாற்றியது, வெளிமாநிலத் தவருக்குத் தமிழ் கற்றுத்தரும் பணி ஆகியவற்றுக்காக கல்பனாவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
“நமக்குப் பிடித்த வேலையை விரும்பிச் செய்வது மனநிறைவு தரும். மருத்துவச் சேவை என்பது ஒரு தனி உலகம். நேரம் காலம் பார்க்காமல் பணிபுரியும் ஏராளமான பெண்கள் இன்று பல துறைகளில் உள்ளனர். ஆனால், பல பெண்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு, வேதனைப்படுகிறார்கள். அது தவறானது. எந்தப் பிரச்சினை வந்தாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்று நினைத்துக்கொள்வேன்” என்று தன் வெற்றிக்கான ரகசியத்தைச் சொல்லி முடிக்கிறார் கல்பனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT