Published : 21 Jun 2015 02:44 PM
Last Updated : 21 Jun 2015 02:44 PM
நடிகை விஷாகா சிங், சமீபத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அநாகரிகமான கமெண்ட்டைப் பதிவுசெய்திருந்த நபருக்குச் சரியான பதில் கொடுத்திருந்தார். விசாகாவின் பதிலை த்ரிஷா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். ஆனால், விஷாகா அந்த நபருக்குப் பதிலளித்த பிறகுதான் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசமான கருத்துகளைத் தெரிவிக்கும் போக்கு இப்போது பெருகிவருகிறது. சைபர் புல்லிங் (Cyber Bullying) எனப்படும் இந்த இணைய ஒடுக்குதலைப் பெண்கள் பல்வேறு விதமாகச் சந்தித்துவருகின்றனர்.
விஷாகா பேஸ்புக்கில் தன்னை ஆபாசமாக விமர்சித்திருந்த நபருக்கு நேரடியாகப் பதிலளித்திருந்தார். அதற்குப் பிறகு நடந்த விஷயங்களை விஷாகா பகிர்ந்துகொண்டிருக்கிறார். “ஒரு நடிகையாக எனக்கு அதிகாரபூர்வமான பேஸ்புக் பக்கம் இருக்கிறது. இது என் ரசிகர்களுடன் நான் தொடர்பில் இருப்பதற்காகத் தொடங்கிய பக்கம். என் பேஸ்புக் பக்கத்துக்கு அடிக்கடி கீழ்த்தரமான செய்திகளைத் தொடர்ந்து சிலர் அனுப்புவார்கள். என் சமூக வலைத்தளப் பக்கத்தை நிர்வகிப்பவர்கள் அந்த மாதிரிச் செய்திகளையும், நபர்களையும் பிளாக் செய்வார்கள்.
இப்போது என்னைப் பற்றி இப்படி ஆபாசமான முறையில் விமர்சித்திருக்கும் இந்த நபர் தொடர்ந்து என் பேஸ்புக் பக்கத்துக்குக் கீழ்த்தரமான செய்திகளை அனுப்புவார். அவரை எத்தனை முறை பிளாக் செய்தாலும் மறுபடியும் ஒரு போலி அக்கவுண்ட்டைத் தொடங்கி, அதே கீழ்த்தரமான செய்திகளை மறுபடியும் அனுப்புவார். நான் நீண்ட நாட்களாக இந்த நபரை என் பேஸ்புக் பக்கத்தில் தவிர்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த நபருடைய ஆபாசமான கருத்துக்கு அன்று நேரடியாகப் பதில் சொல்ல நினைத்தேன். எனக்கிருந்த கோபத்தையும் மீறி அந்த நபருக்கு நாகரிகமான முறையிலேயே பதிலளித்தேன். நான் பதிலளித்து நான்கு நாட்களுக்குப் பிறகு, பேஸ்புக்கில் என் பெயர் டிரண்டிங்கில் இருந்தது. இணையத்தில் என் கருத்துக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஒரு நபர் நேரடியாக என்னைக் கொச்சைப்படுத்திச் செய்தி அனுப்பினார். அதற்கு நான் பதிலளித்தேன். இதில் எந்த சாகசமும் இல்லை. ஒரு சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதாக ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. நான் பதிலளித்த அடுத்த நாள், சமூக வலைதளங்களில் உலாவரும் விஷமிகள் மொத்தப் பேரும் சேர்ந்து என்னை மிக மோசமான முறையில் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். நான் நடிகை என்பதால் இது ஒரு ‘பப்ளிசிட்டி’ டிரண்ட் என்றார்கள். இன்னும் எவ்வளவோ கீழ்த்தரமான விமர்சனங்கள். அத்துடன், என் பெயரிலேயே ஒரு போலி அக்கவுண்ட்டை உருவாக்கி நான் மோசமான கருத்துகளை ஆதரிப்பதாகப் போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
நான் நடிகை என்ற காரணம் மட்டுமே என்னைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் உரிமையைக் கொடுத்துவிடுகிறதா? என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் தாங்கள் யார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார்களே தவிர, அந்த விமர்சனங்களில் என் நிஜப் பிரதிபலிப்புகள் எதுவும் இருக்க முடியாது.
இந்த மாதிரிச் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குத் தீவிரமான ‘சைபர்’ சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், அதைவிட முக்கியமானது நம் இளைய தலைமுறையினருக்குச் சமூக வலைதளங்களில் ஒழுக்கத்துடன் இயங்குவதற்குப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். சமூக ஊடகத்தின் நெறிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். அப்படிச் செய்வதனால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமான நெட்டிசன்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறார் விஷாகா.
விஷாகா மட்டுமல்லாமல் ஸ்வாதி, கனிகா போன்றவர்களும் சமூக வலைதளங்களில் தங்களைச் சீண்டியவர்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் பதிலளித்த பிறகும் பல்வேறு விதமான பிரச்சினைகளைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர் என்பதுதான் உண்மை.
நடிகைகள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் இந்த மாதிரி அனுபவங்களைப் பலரும் சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பொதுவெளியில் இயங்கும் பெண்கள் இந்த மாதிரி இணையத் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாகின்றனர். அரசியல், ஊடகம் போன்ற துறைகளில் பணியாற்றும் பெண்களை எந்த வரைமுறையும் இல்லாமல் விமர்சிக்கலாம் என்ற போக்குதான் இப்போது நிலவிவருகிறது.
சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே இந்தப் போக்கை மாற்றிவிட முடியாது. ஒரு பெண்ணைச் சமூக வலைதளங்களில் ஆபாசமான முறையில் விமர்சிப்பதைத் ‘துணிச்சலான செயலாக’ நினைப்பவர்கள் இருக்கும்வரை எந்தப் பெரிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை.
பெண்களை, அதுவும் பொதுத் தளத்தில் செயல்படும் பெண்களைப் பல ஆண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. பெண்கள் படிக்க வந்தபோது, வேலைக்கு வந்தபோது, சாலையில் வண்டி ஓட்ட ஆரம்பித்தபோது, அரசியல் முதலான துறைகளில் ஈடுபடத் தொடங்கியபோது என்று பெண்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும் இதுபோன்ற எதிர்வினைகளை எதிர்கொள்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் அணுகுமுறைதான்.
இவர்கள் பார்வை மாற இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment