Published : 21 Jun 2015 02:33 PM
Last Updated : 21 Jun 2015 02:33 PM
வெற்று சுவரைக் கண்களைக் கவரும் வண்ணங்களைக் கொண்டு மனம் நிறைக்கும் ஓவியங்களால் நிரப்பிவிடுகிறார் ஜெனோவா மனோகரன். கெட்டியான கல்யாணப் பத்திரிகை கிடைத்துவிட்டால் அதை மடித்து மாட்டு வண்டி செய்து அலங்காரமாக நிற்கவைக்கிறார். பல வண்ணக் காகிதங்களைக் கத்தரித்து, தாமரைக் குளம் உருவாக்குகிறார். பென்சில் ஆர்ட், தஞ்சாவூர் ஓவியங்கள், ரிவர்ஸ் தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள், காபி ஆர்ட் என்று தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கலையிலும் தடம்பதிக்கிறார் ஜெனோவா. சென்னை ஆண்டாள்குப்பத்தில் வசிக்கும் ஜெனோவா, பள்ளி நாட்களில் பாடப் புத்தகங்களில் வரும் படங்களை வரைந்து தள்ளுவாராம்.
“நான் செஞ்சி செயிண்ட் மைக்கேல்ஸ் பள்ளியில் படித்தேன். வரலாற்று புத்தகங்களில் வரும் ஷாஜகான், அக்பர் போன்றவர்களின் படங்களை வரைவேன். அவற்றை எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸரி சிஸ்டரிடம் காட்டுவேன். ஒவ்வொரு படத்துக்கும் வெரிகுட் என்று அவர் வாழ்த்துவார். ஒரு முறை நான் வரைந்த படத்துக்கு 16 வெரிகுட் போட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று சொல்லும் ஜெனோவா அதற்குப் பிறகு தொடர்ந்து பலவிதமான ஓவியங்களை வரைந்து பழகியிருக்கிறார். தஞ்சாவூர் ஓவியத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
ஜெனோவாவின் அம்மா, புள்ளி வைக்காமலேயே விதவிதமாக ரங்கோலி வரைவாராம். “அந்தக் கலையார்வத்தில் பாதியாவது நம்மிடம் இருக்க வேண்டாமா?” என்று கேட்கிறார் ஜெனோவா. தன் ஆசைக்கு எம்.பி.ஏ.வும் அம்மா ஆசைக்கு முதுநிலை இன்ஜினீயரிங்கும் படித்து முடித்திருக்கிற ஜெனோவா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் படம் வரையவோ, கிராஃப்ட் செய்யவோ உட்கார்ந்துவிடுகிறார்.
- ஜெனோவா மனோகரன்
திருமணத்துக்குப் பிறகு கணவர் நல்லசாமி ஊக்கப்படுத்த, தொடர்ந்து புதுப்புது கலைகளைக் கற்றுக்கொள்கிறார். “நம் பாரம்பரிய ஓவியமான தஞ்சாவூர் ஓவியம் மாதிரிக் கேரளாவின் சுவர் ஓவியத்தையும் கற்றுக்கொள்” என்று என் கணவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதையும் 3டி ஓவியத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஜெனோவா. தன் படைப்புகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகத் தந்து மகிழ்கிறார்.
எத்தனை பெரிய கோபமாக இருந்தாலும் கையில் தூரிகை பிடித்துப் படம் வரையத் தொடங்கும் அடுத்த நொடி காணாமல் போய்விடும் என்று சொல்லும் ஜெனோவா, கூடிய விரைவில் ஒரு நிறுவனம் ஆரம்பித்துத் தன் ஓவியங்களையும் கலைப் பொருட்களையும் விற்பனை செய்யப் போவதாகச் சொல்கிறார்.
படங்கள்: எல். சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT