Published : 28 Jun 2015 02:33 PM
Last Updated : 28 Jun 2015 02:33 PM
ஜூன் 21-ம் தேதியிட்ட பெண் இன்று இணைப்பிதழில் ‘அழகா?, ஆரோக்கியமா?' என்று கேட்டிருந்தோம். அறிவின், அகத்தின், ஆரோக்கிய உடலின் அழகுதான் உண்மை அழகு. அழகுக்காக எல்லாவற்றையும் இழப்பது புத்திசாலித்தனமல்ல எனப் பல்வேறு அம்சங்களை வாசகர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்களை இங்கே பார்க்கலாம்.
ஒரு பெண்ணுக்குப் புறத்தோற்றம் முக்கியம்தான். ஆனால் அதுவே முக்கியம் என்று நினைத்து ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது. சமீபத்தில் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம் தவிர, சென்னையிலேயே ஒரு பெண்மணி புறத்தோற்றத்திற்காக ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, அதுவே கடைசியில் அவரது உயிரைப் பறிக்கும் எமனாக வந்து வாய்த்தது.
நஞ்சு, பார்ப்பதற்குக் கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தால், நாம் அதை எடுத்து அருந்துவோமா? அதேபோல்தான் இந்தப் புறத்தூண்டுதல்கள் எல்லாம். நாம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு முன்னோர் சொல்லித்தந்த விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும்.
- ஆர். பிருந்தா ரமணி, திருவான்மியூர், சென்னை
ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் அழகு கண்டிப்பாகக் குடியேறும். ஆனால், அழகு மட்டுமே இருக்குமிடத்தில் ஆரோக்கியம் அரையடி தள்ளியே நிற்கும். அழகு என்பது உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும். அதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலனே, நல்ல சிந்தனைகளின் வித்து. உள்ளமும் உடலும் நன்றாக இருந்தாலே எந்த மெனக்கெடலும் இல்லாமல் இயற்கையான அழகு நம்மை உறவாக்கிக் கொள்ளும்.
- ஜே .லூர்து, மதுரை
நல்ல சிந்தனைகள், உண்மையான அன்பு, இயற்கையோடு இணைந்த உணவு, புன்னகை ஆகியவற்றை உடலுக்கு அணிகலனாய் அணிந்துகொண்டாலே பெண்ணின் அழகு நாளுக்கு நாள் கூடும், ஒருநாளும் குறையாது. இந்தக் காலத்தில் எல்லாமே துரிதமாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரோக்கியத்திற்குக் கவனம் தருவதைவிட விரைவில் தீர்வு வேண்டும் என ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக்கொள்வது தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் புறத் தோற்றத்திற்கு அதீதக் கவனம் செலுத்துவது தேவை இல்லாதது.
- பானு பெரியதம்பி, சேலம்.
நடிகைகளுக்கு மட்டுமே அழகு மூலதனமாகப் பார்க்கப்படுகிறது. அதனாலேயே அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணாமல் போய்விடுகின்றனர். அறிவு சார்ந்தோ, உடலியல் திறன்கள் சார்ந்தோ வெற்றிபெற்ற பெண்கள் நீண்ட காலம் அனைவராலும் போற்றப்படுகின்றனர், முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறார்கள். இதற்கு பி.டி.உஷா தொடங்கி உடல் திறனால் வென்ற பல விளையாட்டு வீராங்கனைகளையும், டாக்டர் கமலா செல்வராஜ் போன்று அறிவுத் திறனால் சாதித்த பல மருத்துவர்கள், கல்வியாளர்களையும் சொல்லலாம். அழகு நிலையற்றது, அறிவு அழிவற்றது. அறிவோடு கூடிய ஆரோக்கியம் ஆயுள் உள்ளவரை அனைவரும் விரும்பும்படி செய்யும். அழகை மட்டுமே விரும்பினால் நடிகை ஆர்த்தி அகர்வாலின் நிலையே நமக்கும் ஏற்படும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
துரித உணவுகள் போல உடல் எடையும் துரிதமாகக் குறைய வேண்டும் என்று கண்ட கண்ட மருந்துகளைச் சாப்பிட்டு இளைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்! அதன் விளைவு எப்போதுமே எதிர்மறையாகிவிடுகிறது. பவுடர் மருந்துகள், சத்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைய வேண்டும் என்பதில் காட்டுகிற ஆர்வத்தைச் சத்தான உணவுகள் சாப்பிடுவதிலும், எளிய உடற்பயிற்சிகள் செய்வதிலும் இன்றைய பெண்மணிகள் காட்டுவதில்லை. முக்கியமாக ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்கு மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் அழகும் கைவசப்படும்.
சினிமா ஹீரோயின்கள் போல வத்தல் குச்சியாக இருப்பதுதான் அழகு என்று, இன்றைய இளம் பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், அந்த சைஸ் ஜீரோ ஹீரோயின்களைப் பார்த்தால் முகத்தில் எந்தவித மலர்ச்சியுமின்றி, வறண்ட சருமத்துடன், வறுமையில் வாடுவது போன்ற தோற்றத்தில்தான் இருக்கிறார்கள். எளிய நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சத்துள்ள உணவுகள் போன்றவற்றுடன் இயந்திரங்களை நம்பி இருக்காமல் உடற்பயிற்சிகளையும் வீட்டு வேலைகளையும் செய்தாலே எடை கணிசமாகக் குறைந்துவிடும். ஆரோக்கியமான அழகைப் பேணிக் காக்கலாம்.
- தேஜஸ், காளப்பட்டி, கோவை.
ஆரோக்கியம் இருந்தால் அழகு தன்னாலே வந்துவிடும். உடலுக்குத் தேவையான ஊட்டமான அனைத்துச் சத்துகளும், மனதுக்குத் தேவையான தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஒழுக்கமும் சேர்ந்து இருப்பதுதான் அழகு. பார்வை,நடை, உடை, கம்பீரம், விவேகம், அறிவு, திறமை, பண்பு எல்லாம் சேர்ந்து இருப்பதுதான் அழகு. அழகையும் ஆரோக்கியத்தையும் தனித்தனியே பிரிக்கத் தேவையில்லை. சிவப்பு அழகுக்காகவும், எடை குறைப்புக்காகவும் பெண்கள் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடுவதைவிட தெளிவான ,நேர்மையான எண்ணங்களுடன் நேரத்தைச் செலவிட்டாலே போதும். பணமும் நேரமும் மிச்சமாகும்.
- நான்சி ராணி , சென்னை
அகத்தின் அழகு முகத்தின் தெரியும் என்பதற்கேற்ப,ஒரு பெண்ணின் அழகு, அக அழகுதான். அக அழகு அழிவில்லாதது, ஆனால் புற அழகு நிரந்தரம் இல்லாதது. நாம் ஆரோக்கியமாக இருந்தாலே அழகு தானாக வந்துவிடும். சாதனை புரிவதற்கு அழகு தேவையில்லை, ஆரோக்கியமே முக்கியம். எனவே, பெண்கள் அழகைவிட ஆரோக்கியத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்
இன்றைக்குப் பள்ளி தொடங்கி அனைத்து இடங்களிலும் பெண்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்றும், அப்படிப் பார்க்காவிட்டால் இந்தச் சமுகத்தில் தங்களுக்கு மதிப்பே இல்லை என்ற தவறான எண்ணத்துடனேயே இருப்பதால்தான் சிவப்பழகு கிரீம்களுக்கு அவ்வளவு மரியாதை. இயற்கை கொடுத்த அழகை ஒழுங்காகப் பராமரித்து நாம் ஆரோக்கியமாக வாழ்வதால் அழகு நம்மைத் தேடி ஓடி வரும். வயது தரும் உடல் மாற்றத்தை ஏற்கும் மனப்பக்குவம் இருந்தாலே, ஆரோக்கியம் தேடிவரும்.
- உஷா முத்துராமன், திருநகர்
கருப்போ, சிவப்போ அதுமட்டும் ஒருவருக்கு உயர்வான மதிப்பையும் மரியாதையையும் தந்துவிடாது.கிராமங்களில் உள்ள பெண்கள் உழைப்பை மட்டுமே அழகு என நினைக்கிறார்கள். ஆனால், நாகரிகம் படைத்த நகரத்துப் பெண்கள்தான் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணத்தையும் உடல்நலனையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திறமை, ஆளுமை, முயற்சி, துணிவு ஆகியவை மட்டுமே பெண்களுக்கு அழகு.
- மு.க.இப்ராஹிம், வேம்பார்
“எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சிவப்பழகுக் களிம்பு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். ஏனென்றால், என் தங்கை கருப்பு நிறத்தவள். ஆனாலும் அழகனாவள். நான் சிவப்பழகு விளம்பரத்தில் நடித்தால், அது என் தங்கையையும் அவளைப் போன்ற பிற பெண்களையும் இழிவு படுத்துவதாகும்!" என்று துணிச்சலோடு ஒரு நடிகை கூறியதைக் கேள்விப்படுகிறோம். இப்படிப் பிற நடிகைகளும் முடிவெடுத்தால் தவறான - திசைதிருப்பும் விளம்பரங்களை ஒழித்துக்கட்டிவிடலாமே.
- த. விண்மீன் பாண்டியன், புதுச்சேரி
ஒரு பெண்ணின் அடையாளம் ஆரோக்கியம்தான். ஆனால், வெளிநாட்டுச் சந்தையால்தான் புறத்தோற்றத்தின் மீது பெண்களுக்கு ஈடுபாடு அதிகமானது. ஒரு அடையாளம் கிடைக்கும்வரை பெண்கள் புறத்தோற்றத்தின் மீது ஈடுபாடு கொள்ள, இந்தச் சமூகமும் ஒரு காரணம்.
- சரஸ்வதி ராசேந்திரன், மின்னஞ்சல்
வெளியில் தன்னை அழகாகவும் ஆரோக்கியமாகவும், அறிவாகவும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் காட்டிக்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மையுடன், அவ்வப்போது தங்கள் விதியை நொந்துகொண்டு வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பெண் என்றால் இப்படித்தான் அழகாக இருக்க வேண்டும் என்ற மற்றவர்களின் பார்வை. அதைத் தானும் சரி என ஏற்றுக்கொண்டு அதற்கான தொடர் முயற்சிகள், வீண் பிரயத்தனங்களைப் பெண்கள் செய்கிறார்கள். ‘நிரந்தர மகிழ்ச்சியையும்’ நன்மையும் தரவல்ல, அறிவை நோக்கிய தேடலைத் தொடங்குவோம்.
- கு. சுதா சரவணன், கந்திகுப்பம், கிருஷ்ணகிரி மாவட்டம்
பெண்ணின் மிகச் சிறந்த அடையாளம் – ஆரோக்கியமான மனது. நமது சமூகத்தில் எவ்வளவு கறுப்பாக இருக்கும் ஆணும் சிவந்த நிறமான, ஒல்லியான பெண்ணைத்தான் மணக்க விரும்புகின்றனர். ஆண்களின் இந்த எண்ணத்தை, அவர்களின் வீட்டில் இருக்கும் அம்மாக்கள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- சரசுவதி ஜெயசந்திரன், சென்னை.
சத்துணவு, உடற்பயிற்சி, நகைச்சுவை உணர்வு மூலம் ஆபத்தில்லா அழகைப் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். நாம் அழகாகத்தான் இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நடந்தால்போதும். தன்னம்பிக்கைதான் நம்முடைய அடையாளமாக இருக்க வேண்டும்.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.
ஆரோக்கியம்தான் பெண்களின் உண்மையான அழகு. ஆரோக்கியமே ஆனந்தமான வாழ்வைத் தரும். போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் தோழிகளே.
- பெ.சுலோசனா தெய்வேந்திரன், நெய்வேலி.
செயற்கையான எந்தப் பொருளாலும் இயற்கையான அழகைக் கொண்டுவர முடியாது. ஆனால், ஆரோக்கியமாக வாழ ஆயிரம் வழிகள் உள்ளன. ஆரோக்கியம்தான் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியமானது.
- சு.லௌரா சாந்தினி, மதுரை.
சமுதாய முன்னேற்றத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்களின் வெற்றிக்கு அறிவும் ஆரோக்கியமும்தான் என்றைக்கும் கைகொடுக்கும். பெண்கள் தங்கள் புறத் தோற்றத்தை மெருகேற்றிக் கொள்வதற்காக என்ற பெயரில் சந்தையில் விளம்பரப்படுத்தப்படும் அழகு சாதனங்களைப் போட்டிபோட்டு வாங்கிக் குவிக்கின்றனர். அதனால் பலன் இல்லையெனும்போது, அடுத்த உத்தியை நாடுகின்றனர். ஆரோக்கியமே அவசியமானது. அழகு அவசியமற்றது என்பதுதான் அப்பட்டமான உண்மை.
- மு. காயத்ரி, ஓசூர்.
ஆரோக்கியமே பெண்ணின் சிறந்த, நிரந்தர அடையாளம் ஆகும். தந்தை, சகோதரன், கணவன், மகன் இவை ஒரு பெண்ணுக்கு அமையும் ஆண் சார்ந்த உறவுகள். இவர்கள் அனைவருக்குமே ஆரோக்கியமான மகள், சகோதரி, மனைவி, தாய் ஆகியோரை மிகவும் பிடிக்கும்.
- மு.உமா தேவி, திருச்சி.
பெண்ணின் அடையாளம் – பெண்மைதான். பெண்மைக்கு அடையாளம் அழகா, ஆரோக்கியமா? என்றால், அது ஆரோக்கியமான அழகுதான். பெண்களின் ஆரோக்கியம் அவர்களின் அழகை உயர்த்திக் காட்டும் அற்புத வரம். அது ஒரு உயிர்ப்பு விசை!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
உடல் ஆரோக்கியமே அழகு என்னும் சிந்தனை மேலோங்க வேண்டும். ஆர்த்தி அகர்வாலின் மரணத்திலிருந்தாவது, அழகுக்காக ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் பெண்களின் மனநிலை மாற வேண்டும்.
- க.பாலகிருஷ்ணன், சுரண்டை.
பெண்ணின் ஆரோக்கியம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மன நிம்மதியைக் கொடுக்கும். ஆரோக்கியம் இருந்தால் வீட்டில் ஆனந்தமும் உறவுகளிடையே தெம்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தெளிவும் துணிச்சலும் ஏற்படும். பெண்ணின் ஆரோக்கியத்துக்கு வயது வரம்பு கிடையாது. முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்கும் பெண் நிறைவாகத் தெரிவாள்.
- லதா காமேஷ், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment