Published : 07 Jun 2015 02:17 PM
Last Updated : 07 Jun 2015 02:17 PM

வானவில் பெண்கள்: சமைப்பது மட்டுமே பெண்களின் வேலையா?

தடைகளும் சோதனைகளும்தான் ஒரு மனிதனை முன்னுக்குக் கொண்டுவரும் முக்கியப் படிக்கட்டுகள் என்பதை உணர்த்துகிறது சந்திராவின் வாழ்க்கை.

காரைக்குடியைச் சேர்ந்த சந்திரா, கைவினைக் கலைஞர், கராத்தே பயிற்சியாளர், ஒப்பனைக் கலை நிபுணர், செல்போன் பழுது நீக்குபவர் எனப் பன்முகம் காட்டுகிறார். இவர் இந்த உயரத்துக்கு வரக் கடந்துவந்த பாதை கரடுமுரடானது, வலிகள் நிறைந்தவை. இவருடைய அம்மா ராமு, பிரசவத்தின் போது மகளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் கண்ணை மூடிவிட்டார். மகள் மீது அந்தச் சோகம் படராமல் வளர்த்தார் அப்பா சேதுராமன். ஆனால், சந்திராவுக்கு 12 வயதிருக்கும்போது அப்பாவும் ஒரு விபத்தில் உயிரிழக்க, துவண்டு போனார் சந்திரா.

“அப்பாவையும் பறிகொடுத்துட்டு அந்தச் சின்ன வயசுல அடுத்த வேளைக்கு எங்க போறதுன்னு தெரியாம நின்னேன். அப்பச் சித்தியும் மாமாவும் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. இங்க கொஞ்ச நாள் அங்கக் கொஞ்ச நாள்னு ரெண்டு பேர் வீட்டுலயும் நாட்களை ஓட்டினேன். அப்பவே, எப்படியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து சொந்தக் காலில் நிக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம் இருந்துச்சு. கஷ்டப்பட்டுப் பி.பி.ஏ. வரைக்கும் படிச்சேன். கூடவே தனித் திறமைகளையும் வளர்த்துக்கிட்டேன். போலீஸ், இல்லாட்டி ராணுவத்துல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யணும்ங்கிறது என்னோட விருப்பம். அதுக்குத் தற்காப்பு கலை அவசியம். எங்க மாமா கராத்தே மாஸ்டரா இருந்ததால அதுவும் எனக்கு எளிதில் சாத்தியமாச்சு’’ என்று தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் சந்திரா.

கலைகளில் ஆர்வம்

கராத்தேயில் மூன்று பிளாக் பெல்ட் வாங்கியிருக்கும் சந்திரா, ஐந்து முறை தேசியச் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். 2006-ல் இவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது. ஆனால், இவரது லட்சியம் பெரிதாக இருந்தாலும் போலீஸ் கனவு நிறைவேறவில்லை.

அதற்காக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், கிராஃப்ட், ஃபேஷன் டிசைனிங் படிப்புகளில் சேர்ந்து அவற்றையும் கற்றுக் கொண்டார். செல்போன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பமும் படித்திருக்கும் இவர், செல்போன் சர்வீஸ் செய்துகொண்டே பியூட்டி பார்லரில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். காலை, மாலை வேளைகளில் கராத்தே வகுப்புகளையும் நடத்துகிறார். இவை அனைத்தும்தான் இப்போது சந்திராவைத் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாகத் தலை நிமிர்ந்து நடக்கவைத்திருக்கின்றன. அரசுப் பள்ளி தையல் ஆசிரியர் பணிக்கும் சமீபத்தில் தேர்வாகியிருக்கிறார்.

தன்னம்பிக்கை அவசியம்

“முதலில் என்னை நான் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்க முடியும். அதைத்தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன். சமைத்துப் போடுவது மட்டுமே பெண்களின் வேலை இல்லை. அந்தக் குறுகிய வட்டத்தைத் தாண்டி ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்ச முடியும்.

திறமை இருந்தால் படிக்காவிட்டாலும் சாதிக்க முடியும். அதற்கேற்ப பெண்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி, பெண்கள் தங்களை அனைத்து விதத்திலும் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி மையத்தை மதுரையில் தொடங்கப் போகிறேன். அங்கு வரும் பெண்கள் பயிற்சி முடித்ததும் தன்னம்பிக்கை உடையவர்களாக வெளியில் வருவார்கள்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சந்திரா.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x