Published : 21 Jun 2015 02:51 PM
Last Updated : 21 Jun 2015 02:51 PM
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் யோகாசனம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் யோகாசனப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார் நிஷா. அதிலும் அவர் ஒரு முஸ்லீமாக இருந்ததால், மதத்தோடு யோகாசனத்தைப் பொருத்திப் பார்த்து எழுந்த எதிர்ப்புகளும் மிரட்டல்களும் அதிகம் என்கிறார் சென்னை, அயனாவரத்தில் அக்குபஞ்சர் கிளினிக் நடத்திவரும் டாக்டர் நிஷா.
எதிர்ப்புகள் கிளம்பிய அதேநேரத்தில், ‘யோகாவை எப்படி மதத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும்? இதில் இருக்கும் பயிற்சிகள் எல்லாமே மனிதர்கள் அனைவருக்குமே நன்மை புரியும் விதத்தில்தானே இருக்கிறது?’ என்னும் கருத்து இவருக்குள் மிகவும் பலமாக வேரூன்றியது.
நோய் நாடி நோய் முதல் நாடி
கடந்த 2001-லேயே யோகா பயிற்சியை (Diplomo in Naturopathy Yoga Science) முடித்திருக்கும் நிஷா, ஆசனா ஆண்டியப்பனின் மாணவி. அவரோடு இணைந்து பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறார். யோகா பயிற்சிகளை கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என பல தரப்பினருக்கும் தொடர்ந்து பயிற்சி அளித்தவந்த நிஷா, அக்குபஞ்சர், தாய் சீ, நாடி மருத்துவம் போன்ற மருந்தில்லா மாற்று மருத்துவங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். சர்க்கரை நோய், குழந்தைப் பேறின்மை, பயம், பதற்றம், சோர்வடைதல், எனப் பல பிரச்சினைகளோடு வருபவர்களுக்கும் படிப்பில் ஈடுபாடு காட்டாத குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சையுடன் அவர்களுக்கு ஏற்ற யோகா பயிற்சிகளையும் அளித்துவருகிறார்.
சுகாசனம் தெரியுமா?
“நபிகள் நாயகம் (ஸல்) எங்களுக்கு அளித்த தொழுகை ஆரோக்கியமானது. மாறிவரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் மிகச் சாதாரண நோயைத் தாங்கும் சக்திகூட இன்றைய தலைமுறைக்கு இல்லை. காய்ச்சல், தலைவலி என்றாலே கைநிறைய மாத்திரைகளை விழுங்குகிறார்கள். முறையான உணவுப் பழக்கம், தகுந்த இடைவெளிகளில் சாப்பிடுவது, உண்ட உணவு ஜீரணம் ஆனவுடன் சாப்பிடுவது இதை முறையாகப் பின்பற்றினாலே சாதாரண நோய்களைத் தவிர்த்துவிடலாம்.
உணவைத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்துதான் முன்பெல்லாம் சாப்பிடுவோம். இப்போது பலரும் டைனிங் டேபிளில் சாப்பிடுகின்றனர். சம்மணமிட்டு அமர்வதே சுகாசனம்தான். சம்மணமிட்டு அமர்வதால் பெருங்குடலுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். ஜீரணத்துக்கு அடிப்படையானது இது. இப்படிச் சாப்பிடாவிட்டால் அப்புறம் எப்படி சாப்பிட்டது ஜீரணமாகும்?” என்கிறார் நிஷா.
புகைப் பழக்கம், குடிப் பழக்கம், பல்வேறுவிதமான போதைப் பழக்கங்கள் இருந்தால் அவர்களின் சுவாசக் குழாய், உணவுக் குழாய், கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை இரைப்பை நாடி காட்டிவிடும். இப்படி உடல் முழுவதும் பல நாடிகள் ஓடுகின்றன. குறிப்பிட்ட சில புள்ளிகளில் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பதன்மூலம் இத்தகைய தவறான பழக்கவழக்கங்களிலிருந்து ஒருவரை வெளியேற்ற முடியும். இதற்கு நோயாளிகளுக்கு சுயகட்டுப்பாடு இருக்கவேண்டியதும் அவசியம்.
பெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்
“ஜானு சிரசாசனம் செய்யும் போது, விலா எலும்புகளில் நம்முடைய மண்ணீரல் உள்நுழைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வரும். இதனால் கணையம் இயற்கை யாகவே இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.
அர்த்த சிரசாசனம் (சிரசாசனத்தில் பாதிநிலை) செய்யும் பெண்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். விபரீத கரணி, விருச்சிகாசனம் போன்ற ஆசனங்களும் உடலுக்குப் பெரிதும் நன்மை அளிக்கும் ஆசனங்கள். இதய நோயாளிகள் நாடி சுத்தி, பத்மாசனம், சிலவகை முத்ராக்களை செய்வதன்மூலம் புத்துணர்வு பெறமுடியும்.
ஒவ்வொருவரின் உடலில் இருக்கும் உள் உறுப்புகளையும் அழுக்குகளையும் காஸ்மிக் எனர்ஜியின் மூலமாக வெளியேற்றி ஆரோக்கியமாக்கும் பயிற்சிகளை அளிக்கிறோம். பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தாத உணவுகள் கிடைப்பதில்லை. எல்லாவற்றிலும் கலப்படம் நடக்கிறது. இந்த நிலையில் இயற்கையோடு நம்மை இணைப்பது யோகா மட்டுமே” என்கிறார் நிஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT