Published : 31 May 2015 11:49 AM
Last Updated : 31 May 2015 11:49 AM
பெண்களின் பொதுவான பிரச்சினைகளைவிட என் பிரச்சினை வித்தியாசமானது. என் கோணத்தில் இருந்து பார்த்தால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும்.
நான் சென்னையில் பிறந்தவள். அப்பாவின் வேலை காரணமாக வட இந்தியாவில் பல இடங்களில் வசித்திருக்கிறோம். என் 8 வயதில் அப்பாவுக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. அம்மா, அப்பா, தம்பியுடன் நானும் சிங்கப்பூர் சென்றேன். அங்கிருந்த சூழலுக்கு ஏற்றவாறு வெகு விரைவில் மாறினேன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது என் அப்பாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. பாதியில் இடம் கிடைப்பது கடினம் என்ற காரணத்தால் நான் மட்டும் சிங்கப்பூரில் படிப்பைத் தொடர்ந்தேன்.
என் தோழிகள் சிலருடன் சேர்ந்து தனிக் குடியிருப்பில் வசித்துக்கொண்டு, கல்லூரி சென்று வந்தேன். வீட்டில் அம்மாவைக் கேட்க வேண்டும், அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. என் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் நானே சுயமாக எடுத்தேன். சாம்பார், இட்லி போன்ற தமிழக உணவுகளைவிட மேற்கத்திய, சீன உணவுகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதுவரை சைவ உணவுக்காரியாக இருந்த நான் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டேன். சமைக்க ஆர்வம் இருக்கும் நாட்களில் சமைப்பேன். இல்லாவிட்டால் வெளியே சாப்பிட்டு விடுவேன்.
விடுமுறை நாட்களில் பொழுது போக்குவதற்காகச் சமையல் மீது கவனம் செலுத்தினேன். விதவிதமான உணவுகளைச் செய்து பார்ப்பதும் சுவைத்துப் பார்ப்பதும் என் முக்கியமான பொழுதுபோக்காக மாறியது. உணவுக்காகப் ப்ளாக் ஒன்றும் ஆரம்பித்து, செயல்முறை விளக்கத்தோடு வெளியிட்டேன். நகரில் இருக்கும் உணவகங்களின் உணவுகளையும் விமர்சனம் செய்து எழுதி வந்தேன். நாளடைவில் என் எழுத்து மெருகேறிவிட்டது. அப்போது என் கல்லூரிப் படிப்பும் முடிந்தது.
தமிழும் சீனமும் நன்றாகப் பேசவும் ஓரளவு படிக்கவும் என்னால் முடியும். ஆங்கிலம்தான் எனக்குச் சரளமான மொழி. ஒரு பெண்கள் பத்திரிகையின் எடிட்டோரியலில் வேலை கிடைத்தது. எனக்கு அந்த வேலை மிகவும் பிடித்துவிட்டது. நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்வேன். சிங்கப்பூர் என்பதால் நள்ளிரவில் தனியாக வீடு திரும்புவதுகூடச் சாதாரண விஷயம்தான். சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அப்பாவிடமிருந்து வரும் பணத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். என் வருமானம் முழுவதையும் என் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டேன். விதவிதமான ஆடைகள், விடுமுறைகளில் ஊர் சுற்றல், விடுதியில் உணவு என்று மிகவும் சுதந்திரமாக வாழ்ந்தேன்.
என் குடும்பம் என்னை விட்டுச் சென்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையே இரண்டு முறை என் பெற்றோரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டு பக்கம் வரவே இல்லை. நான் சிங்கப்பூரில் வளர்ந்தாலும் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தமிழ்நாட்டில், தங்கள் இனத்தில் ஆச்சாரமான மணமகனுக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விருப்பம். தமிழ்நாட்டில் திருமணமான பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.
என்னால் தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப முழுவதுமாக மாறமுடியும் என்று தோன்றவில்லை. என் எண்ணத்தைச் சொல்லிவிட்டேன். நீ யாரையாவது காதலித்தால் அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறோம் என்கிறார்கள். யோசித்துப் பார்த்தேன். எனக்கு நண்பர்கள் இருந்தார்களே தவிர, ஒருவர் மீதும் காதல் இல்லை.
அதேபோல அவர்களுக்கும் என் மீது காதல் இல்லை. சீனாவைச் சேர்ந்த ஒருவன் மீது சில வருடங்களுக்கு முன்பு ஆர்வம் இருந்தது. ஆனால் அவன் கலாச்சாரத்தைக் காரணம் காட்டி என்னை மறுத்துவிட்டான். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. எதையும் வற்புறுத்தாத என் பெற்றோருக்காக நான் இதற்குச் சம்மதித்தேன்.
சென்னையில் வேலை செய்துகொண்டே, எனக்கு மாப்பிள்ளை பார்ப்பது என்ற திட்டத்தில் இறங்கினோம். வெளிநாடுகளிலேயே பெரும்பாலும் வாழ்ந்த என் அம்மா இப்போதும் சாம்பார், பொரிச்ச கூட்டு செய்துகொண்டிருக்கிறார். ஆனால் என்னால் அத்தனை சீக்கிரம் இந்த உணவுப் பழக்கத்துக்கு மாறமுடியவில்லை. இருந்தாலும் உணவிலும் உடையிலும் கொஞ்சமாக மாறியிருக்கிறேன். ஆனால் என்னிடம் சிந்தனையில் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர இயலவில்லை.
என் அம்மா, அப்பாவோடு ஒரே வீட்டில் இருந்தாலும் எனக்கு அவ்வளவு அன்னியோன்யமாகத் தோன்றாது. நான் என் அறையில் என் வேலைகளைச் செய்வேன். எழுதுவேன். டிவி பார்ப்பேன். தூங்குவேன். நான் வெளியே சென்றால் எங்கே போகிறாய், எப்போது வருவாய், ஏன் இவ்வளவு லேட் என்று தமிழ்நாட்டு அம்மாக்களைப் போல என் அம்மா எழுப்பும் கேள்விகள்கூட எனக்குப் பரிச்சயமில்லாதவை. அம்மாவாக இருந்தாலும் ஏன் அவரிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று தோன்றும்.
30 வயது பெண்ணுக்கு வரன் தேடுவது தமிழ்நாட்டில் கொஞ்சம் கடினமான விஷயமாக இருந்தது. எனக்குப் பொழுது போகவில்லை என்பதற்காக ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். என் திறமைக்குக் குறைவான சம்பளம் என்றாலும் வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.
ஒருநாள் என்னைப் பெண் பார்க்க வந்தனர். மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்துக்கும் என்னைப் பிடித்துவிட்டது. என்னிடம் கேட்டபோது, தனியாகப் பேச வேண்டும் என்றேன். மாப்பிள்ளை என்னிடம் கேட்ட முதல் கேள்வியே ‘உனக்குச் சமைக்கத் தெரியுமா?’ என்பதுதான்.
யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் ஒரு பெண் சமைத்துத்தான் ஆக வேண்டும் என்ற அவரது சிந்தனை எனக்கு எரிச்சலூட்டியது. ‘ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து கல்யாணம் செய்துகொண்டு, சாப்பிடும் கட்டாயத்துக்காக இருவரும் சேர்ந்து சமையல் செய்யலாம். ஆனால் சமைக்கத் தெரிந்தால்தான் திருமணமே செய்துகொள்ள முடியும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றேன்.
அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை. தன் அம்மா, அப்பாவைப் பார்த்துக்கொள்வதற்காகத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னான் ஒருவன். வேலைக்குச் செல்லக்கூடாது என்றான் இன்னொருவன். இப்படி ஜாதகம் பொருந்தி வந்த ஒன்றிரண்டு வரன்களும் என் கருத்துக்கு ஏற்புடையதாக இல்லாததால் தட்டிப் போயின.
நான்கு வருடங்களாகிவிட்டன. அப்பாவுக்கு இப்போது திருவனந்தபுரத்தில் வேலை. நான் சென்னையில் வேலை செய்துகொண்டு, தனிக் குடியிருப்பில் வசித்து வருகிறேன். என் சமையலறையில் சமைக்கவும் செய்கிறேன். என்னால் பெற்றோரை மீறி, சிங்கப்பூருக்குச் செல்லவும் முடியவில்லை. என் எண்ணங்களை மாற்றிக்கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கவும் முடியவில்லை.
மிக இக்கட்டான சூழலில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு என் சிந்தனை விநோதமாகவும் சாதாரணமாகவும் தெரியலாம். இவை ஒரு பொருட்டாகத் தெரியாமலும் போகலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க இயலாது. ஏனென்றால் நான் சிந்தனையிலும் செயலிலும் சுதந்திரமான பெண்.
என்னால் பரஸ்பரம் அன்பாக இருக்க முடியும். ஆரோக்கியமாக விவாதிக்க முடியும். சமைப்பது பெண்களின் வேலை என்று நினைக்காத கணவருக்குச் சமைத்துக்கூடப் போட முடியும்! ஆனால் என்னைச் சக உயிராக மதிக்க வேண்டும். நான் அவரைப் புரிந்துகொள்வது போல என்னுடைய சுதந்திரத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
34 வயதிலும் வீண் பிடிவாதம் செய்து, வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். நான் கேட்பதெல்லாம் படிப்போ, அந்தஸ்தோ, பணமோ இல்லை. சேர்ந்து வாழக்கூடிய இருவருக்கும் ஒரே மாதிரியான மதிப்பும் மரியாதையும் உரிமையும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயங்கள்தான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
உங்கள் அனுபவம் என்ன?
நெருங்கிய நண்பர்களிடம்கூடப் பகிர்ந்து கொள்ள முடியாமல் இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். அவற்றையெல்லாம் இறக்கிவைக்கத் தோள் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உற்ற தோழியிடம் மனச் சுமையை இறக்கிவைத்த நிம்மதி உங்களுக்கும், உங்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் வாய்க்கலாம் அல்லவா? தயங்காமல் எழுதுங்கள். அனைத்தையும் பேசுவோம்.
முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT