Published : 03 May 2015 01:05 PM
Last Updated : 03 May 2015 01:05 PM
சின்னச் சின்ன சிக்கல்களுக்கே சோர்ந்துபோகிறவர்களுக்கு மத்தியில் சிலருக்கு முழு வாழ்க்கையுமே போராட்டமாக அமைந்துவிடும். கத்தியின் மேல் பயணிப்பது போல் ஒருநாள் கழிவதே அவர்களுக்குப் பெரும்பாடு. சோதனைகளைச் சுமந்துவருகிற விடியலும் வேதனைகளை அதிகப்படுத்துகிற இரவும் அவர்களுக்குப் புதிதல்ல. ஆனால், அனைத்தையையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்வதால் பிறருக்குப் பாடமாகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட சாமானியப் பெண்கள்தான் இவர்கள்.
அன்னமிடும் கைகள்
கிள்ளி வைக்கிற இடத்தில் அள்ளிக் கொடுக்கிற கைகளுக்குச் சொந்தக்காரர்கள் தங்கமும் லட்சுமியும். உணவகங்களில் அளவு சாப்பாடு சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு, தட்டு நிறைய சோறு அள்ளி வைக்கும் இந்தப் பெண்களின் செயல் ஆச்சரியம் தரலாம். சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சாலையோரக் கடை நடத்துகிற தங்கம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகப் பேசுகிறார். சிறு ஓலைக் கொட்டகைதான் கடை. அதனுள்ளே இருவர் மட்டுமே உட்கார முடியும். அதையொட்டிப் போடப்பட்டிருக்கிற இரண்டு மர பெஞ்சுகளின் மீது ஆட்டோக்காரர்கள் முதல் கல்லூரி மாணவர்கள்வரை பல தரப்பினரும் கையில் தட்டைப் பிடித்தபடி சாப்பிடுகிறார்கள்.
தங்கத்தின் மாமியார் நடத்திய கடை அது. தன் கணவர் கணேசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், வருமானத்துக்கு வழி தேடி இந்தக் கடையைத் தங்கம் நடத்துகிறார். நாற்பது ரூபாய்க்குக் கறிக் குழம்பு சோறு தருகிறார். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
“ஒரு மனுசன் எவ்ளோ சாப்பிட்டுட முடியும். மொத சோறுக்கே பாதிப் பேருக்கு வயிறு ரொம்பிடும். சிலர் ரசம், சாம்பார் வேணும்னா ரெண்டாவது சோறு வாங்கிப்பாங்க” என்று சொல்லும் தங்கம், தன் கடைக்கு வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை என்கிறார்.
சாப்பாட்டுக் கடை நடத்துவதற்கான விதிமுறைகள் எதுவும் தங்கத்துக்குத் தெரியாது. கடையில் எரியும் அடுப்பின் வெளிச்சம்தான் வீட்டுக்கு ஒளி தருகிறது என்பது மட்டுமே அவருக்குத் தெரியும்.
“என் நாத்தனாரும், மாமியாரும் கூடமாட வேலை செய்வாங்க. பொண்ணும் பையனும் ஸ்கூலுக்குப் போறாங்க. அதனால, அவங்களை எந்த வேலையும் வாங்க மாட்டேன். காலையில நாலு மணிக்கு எழுந்தா வேலை சரியா இருக்கும். கை உழைச்சாதானே கஞ்சி?” என்று ஒரு வரியில் வாழ்க்கை தத்துவத்தைச் சொல்லிவிட்டு வேலையில் மும்முரமாகிறார் தங்கம்.
லட்சுமி 'அம்மா' கடை
புதுப்பேட்டைப் பகுதியில் பேருந்து நிலைய நிழற்குடையை ஒட்டிய மர நிழல்தான் லட்சுமியின் சாப்பாட்டுக் கடை. வீட்டுக்குச் சமைப்பதுபோல மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்துச் சமைக்கிறார். அந்தப் பக்கமாகப் போகிறவர்களிடமும் பேருந்துக்குக் காத்திருக்கிறவர்களிடமும் பேசியபடியே வெங்காயம், தக்காளியை நறுக்குகிறார்.
“சாப்பாடு எவ்ளோம்மா?” என்று ஒருவர் கேட்க, “உனக்கு எவ்ளோக்கு வேணும்னு சொல்லு. பதினஞ்சு ரூவால இருந்து சாப்பாடு இருக்குது” என்று சிரித்தபடியே சொல்கிற லட்சுமியின் பதிலில், கேள்வி கேட்டவர் திகைக்கிறார்.
சாப்பிட வருகிறவர்களுக்கு என்ன வேணும் என்று கேட்டு உணவை வைக்கிற மனைவியைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார் லட்சுமியின் கணவர் சுப்பிரமணி. இவர்களுக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம். டாக்ஸி டிரைவராக வேலை பார்த்த கணவன் முதுமையில் சோர்ந்துவிட, சாப்பாட்டுக் கடையைக் கையில் எடுத்தார் லட்சுமி.
“வெள்ளென எழுந்து இங்கே வந்துடுவேன். இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செஞ்சுட்டு அரிசி, காய்கறி வாங்கிட்டு வந்து சமையலைத் தொடங்குவேன். காலைல டிபன், மதிய சாப்பாடு ரெண்டுமே உண்டு. யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னுதான் இந்த வேலை” என்று சொல்கிற லட்சுமி, தன் காலம் முடியும் வரை உழைக்கிற தெம்பு மட்டும் இருந்தால் போதும் என்கிறார்.
நெஞ்சுரமே துணை
ஒரே வீச்சில் இளநீரை வெட்டுகிற அதே உறுதியோடுதான் பிரச்சினைகளையும் சமாளிக்கிறார் நாகரத்தினம். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இளநீர்க் கடை நடத்துகிற இவர், முப்பத்தியேழு வயதிலேயே பேரன், பேத்திகள் எடுத்து வாழ்வை நிறைவு செய்துவிட்டதாகச் சொல்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்த நாகரத்தினத்தின் கணவர் திடீரென இறந்துவிட, பிள்ளைகளை ஆளாக்க வேண்டிய பொறுப்பு மலைப்பை ஏற்படுத்தியது. ஒன்பதாம் வகுப்பு படித்த இவருக்கு வேலை தருவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் சொல்ல, அந்த வேலையைத் தன் மகனுக்குப் பெற்றுத் தந்தார். பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து அனைவரையும் தனிக்குடித்தனம் வைத்துவிட்டுத் தனியாக வசிக்கிறார் நாகரத்தினம்.
“பெத்த கடமைக்குப் பசங்களை செட்டில் பண்ணிட்டேன். அவங்க குடும்பத்தை அவங்க கவனிச்சிக்கிட்டா போதும். என் உழைப்பு எனக்குச் சோறு போடுது. என்னாலதான் அவங்களுக்குப் பிரயோஜனமே தவிர, அவங்க உழைப்பை ஒரு நாளும் நான் எதிர்பார்த்ததே இல்லை” என்கிறார் நாகரத்தினம். தனியாக வசிப்பதாலேயே பல விதமான அவதூறுகளையும் அவப்பெயர்களையும் சந்திக்கிறார்.
“எப்படி வாழ்ந்தாலும் நாலு பேரு நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டா வாழ்க்கை முழுக்கக் கவலை மட்டும்தான் பட்டுக்கிட்டு இருக்கணும். யாரையும் அண்டிப் பிழைக்காம, என் சொந்தக் கால்ல நிக்கறேன். இது போதும் எனக்கு” என ஆளைப் போலவே, நாகரத்தினத்தின் வார்த்தைகள் தெளிவாகவே இருக்கின்றன.
மவுண்ட் ரோடு ராணி
அழுக்கடைந்த பையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் துணிகள், வெயிலைத் தடுக்கும் சிறு கித்தான் பை, நான்கைந்து ஜோடி பழைய செருப்புகள், அவற்றைத் தைக்கப் பயன்படும் உபகரணங்கள் இவைதான் ராணியின் சொத்து. பேருந்து நிலையத்தின் மரத்தடியே நிரந்தர இடமாக இருக்கும் ராணிக்கு, மவுண்ட்ரோட்டில் சொந்தமாக இடம் இருந்தது என்றால், இப்போது நம்ப முடியவில்லை.
ராணியின் கணவர் கோவிந்தசாமி, செருப்புத் தைக்கும் தொழிலாளி. திருமணத்துக்குப் பிறகு ராணி தன் கணவரிடம் செருப்புத் தைக்கக் கற்றுக்கொண்டார். கோவிந்தசாமிக்குச் சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்பட மருத்துவச் செலவுக்காகத் தங்கள் இடத்தை விற்றிருக்கிறார்கள்.
“அப்போ எங்க இடத்துக்கு எவ்ளோ மதிப்புன்னுகூடத் தெரியாது. அவசரத்துக்கு வித்துட்டோம். அப்படிச் செலவு செஞ்சும், அந்த மனுஷன் பொழைக்கலை. நான் அநாதரவா நிக்கறேன். செருப்பு தைக்கறதுல வர்ற காசு கால் வயிறு கஞ்சி ஊத்துது” என்று சொல்லும்போதே ராணியின் கண்கள் குளமாகின்றன. உறவென்று தனக்கு யாரும் இல்லை என்று சொல்லும் ராணி, வெயிலைக்கூடச் சமாளித்துவிடுகிறார். மழைநாட்களில் ஒதுங்க இடமில்லாமல் அல்லல்படுகிறார். அரசாங்க உதவி வேண்டும் என்றால், அதற்குக் கொடுக்கக்கூட ஒரு முகவரி இல்லை இவருக்கு.
“இருக்க இடமும் படுக்கப் பாயும் இல்லைதான். அதுக்காக முடங்கி உட்கார்ந்துட்டா எப்படி உயிர் வாழறது?” என்று கேட்கிற ராணி, நடுங்கும் கரங்களால் செருப்பைத் தைக்கிறார்.
ஆட்டோவால் ஓடுது வாழ்க்கை
சென்னை கோட்டை ரயில் நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் ஆட்டோ ஓட்டுகிற மாலா, எப்போதும் பிஸி. “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சவாரி முடிச்சுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு, வளைவில் லாகவமாக வண்டியைத் திருப்பிச் செல்கிறார். மாலாவின் திருமண வாழ்வு அவருக்கு இரண்டு குழந்தைகளையும் கூடவே ஏமாற்றங்களையும் பரிசளித்தது. பிரச்சினைகளின் சதவீதம் அதிகரித்தபோது கணவரைப் பிரிந்துவிட்டார்.
தன் குழந்தைகளுடன் அம்மா வீட்டில் வசித்த மாலா, வருமானத்துக்காக வழி தேடியபோது, அவருக்கு ‘ஸ்பீட் டிரஸ்ட்’ அமைப்பு கைகொடுத்தது. அதன் உதவியால் ஆட்டோ ஓட்டப் பயிற்சி பெற்று, கடனுதவி மூலம் ஆட்டோ வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார். வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் பேசினாலும், தன் எல்லை எதுவென்று உணர்ந்திருக்கிறார்.
“எல்லா விஷயத்துலயும் நம்ம லிமிட் எதுன்னு தெரிஞ்சிட்டா பிரச்சினையே இல்லை. சிலர் ஓவரா பேசுவாங்க, சிலர் கேவலமா பேசுவாங்க. எதையும் நான் காதுலயே வாங்கிக்க மாட்டேன்” என்று தெளிவாகப் பேசுகிறார். இவர் முதல் வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டதால், உடைந்துபோகவில்லை. மீதமிருக்கும் வாழ்க்கையைத் தன்னைப் புரிந்துகொண்டவருடன் வாழ விரும்புகிறார்.
“இப்போ எதுவுமே பெருசா தெரியாது. ஆனா, வயசான காலத்துல நமக்குன்னு ஒரு துணை வேணும்னு தோணும். அதுக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்” என்கிற மாலாவின் கண்களில் நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது.
இந்தப் பெண்களுக்கு நேற்றைக் குறித்த கவலையில்லை, நாளை என்பது ஒரு பொருட்டல்ல. அதனால் இன்று அவர்கள் நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். அதே நம்பிக்கையைத் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் ஆழமாக விதைக்கிறார்கள்.
படங்கள்: க. ஸ்ரீ பரத், எல். சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT