Last Updated : 24 May, 2015 02:58 PM

 

Published : 24 May 2015 02:58 PM
Last Updated : 24 May 2015 02:58 PM

அருணாவுக்கு நீதிவழங்கத் தவறிய நாடு

1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள். மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையின் துடிப்பான செவிலி அருணா ஷான்பாக், சோஹன்லால் பார்த வால்மீகி என்ற வார்டு பாயால் சிதைக்கப்பட்டு ‘கோமா’ என்ற நினைவிழத்தல் நிலைக்குச் சென்றார். அத்துடன் வினோதப் பார்வையிழப்பும் அவருக்கு ஏற்பட்டது. அவரது கண்கள் திறந்திருக்கும், அதில் காட்சிகள் பதிவாகும். ஆனால் அது மூளையால் பகுத்துணரப்பட்டு தான் எதைப் பார்க்கிறோம் என்று அவரால் உணர முடியாது. இப்படிப் பேச்சு மூச்சற்ற நிலையில் கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் வாழ்ந்த அருணா இம்மாதம் 18-ம் தேதி மரணம் அடைந்தார்.

பிங்கி விரானி புத்தகம்

பிங்கி விரானி என்ற எழுத்தாளர் ‘அருணாவின் கதை’ என்ற பெயரில் புத்தகம் எழுதினார். அருணாவுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலையும் அதற்குப் பிறகு அரசும் சமூகமும் என்ன செய்தன என்பதையும் அதில் விவரித்திருக்கிறார். அருணாவின் உடல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அதற்கு அனுமதிக்க முடியாது என்று 2011-ல் தீர்ப்பளித்தது. அதே வேளையில் பிறரால் அல்லாமல் தானாகவே அவர் உயிரிழப்பதை அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.

அருணாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய வார்டு பாய்க்குப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்காகக்கூடத் தண்டனை விதிக்கப்படவில்லை. திருட்டு, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் மட்டுமே விதிக்கப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையான அவர் டெல்லிக்குச் சென்றார். அதற்குப் பிறகு எங்கே சென்றார் என்ற பதிவும் இல்லை.

அருணாவுக்குத் திருமணம் நடத்த எல்லாம் பேசி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இது மருத்துவமனையில் இருந்தவர்களுக்குத் தெரியும். எனவே பாலியல் வன்புணர்ச்சி என்ற குற்றச்சாட்டையும் சுமத்தாமல், அவருக்கு அப்படி நேர்ந்ததையும் முறையாகப் பதிவு செய்யாமல் டாக்டர்கள் தவிர்த்தனர். இதன் விளைவு அந்தக் கயவன் அவன் செய்த கொடுமைக்கேற்ப தண்டனை அனுபவிக்காமல் தப்ப நேர்ந்துவிட்டது.

அருணாவைக் கவனித்துக் கொள்ள தங்களது பொருளாதாரம் இடம் கொடுக்காது என்று அவரது குடும்பத்தினர் துயரத்துடன் அவரிடமிருந்து விலகினர். அவரைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்தவரும் சில ஆண்டுகள் கழித்து இன்னொரு பெண்ணை மணந்துகொண்டார்.

மூன்று தலைமுறையின் அர்ப்பணிப்பு

அருணாவைப் பராமரிக்கும் பொறுப்பை அந்த மருத்துவமனையின் இளம் தேவதைகள்தான் ஏற்றனர். 42 ஆண்டுகளாகப் படுக்கையில் விழுந்து கிடந்தும் உடலில் - குறிப்பாக முதுகில் - ஒரு படுக்கைப்புண்கூட வராமல் தங்களது கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கிருந்த அன்பும் கருணையும் அக்கறையும் இந்தச் சமூகத்துக்கு இருந்திருந்தால் அருணா மட்டுமல்ல ஆயிரமாயிரம் அருணாக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

பாலியல் வல்லுறவு மறைப்பு

பாலியல் வல்லுறவு குற்றங்கள் மறைக்கப்படுவது இந்தியாவில் சகஜம். ‘அரசியல், பொதுக் கொள்கைக்கான தி இந்து மையம்’ திரட்டிய தரவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைக் காக்கும் சட்டத் திருத்தம் 2013-ல் அமல்படுத்தப்பட்ட பிறகு, பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 2012-13-ல் போராட்டங்கள் வெடித்த பிறகு, தண்டனையியல் சட்டத் திருத்தச் சட்டம் 2013-ல் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் பாலியல் வல்லுறவுக் குற்றம் என்றால் என்ன என்று சமூகத்துக்குப் புரியத் தொடங்கியது. பாலியல் வல்லுறவு குற்றங்கள் தொடர்பான குற்றங்களின் பதிவுகளும் அதிகரிக்கத் தொடங்கின. புதுடெல்லி போன்ற மாநகரில் இந்தவகைக் குற்றச்சாட்டுகளின் பதிவு 131% ஆக அதிகரித்தது. கடலில் மூழ்கியிருக்கும் பனி மலையின் முகடு மட்டும் வெளியே தெரிவதைப்போல, இந்தியாவில் நடக்கும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் மிகக் குறைவானவைதான் பதிவாகிறது என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறது. அருணாவின் வழக்குகூடப் பாலியல் வல்லுறவாகப் பதிவாகாததால் தேசியக் குற்றவழக்குகள் பதிவேட்டில் அது ஏறியிருக்காது. இளம் பெண்கள், பையன்கள் மீது குடும்பத்தவர்களே நடத்தும் பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் போன்றவையும் புகார்களாக்கப்படாமல் விடப்படுவதால் கண்ணுக்குத் தெரியாமல் மறைகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன.

ஏன் மறைக்கப்படுகின்றன?

இப்படி மறைக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. 1. பாலியல் வல்லுறவு கொள்பவர்கள், “இதை வெளியில் சொன்னால் உனக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும், உன் குடும்பக் கவுரவமும் போய்விடும்” என்று மிரட்டும் அளவுக்கு நம் சமூகம் இருக்கிறது. குற்றம் செய்தவனை விட்டுவிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்ணை வசைபாடுவதே சமூகத்தின் நிலையாக இருக்கிறது. 2. இந்தக் குற்றம் குறித்து வீட்டிலோ, காவல்நிலையத்திலோ சொன்னால்கூட வலுவான நடவடிக்கை இருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் கருதுகின்றனர். 3. குற்றச்சாட்டைப் பதிவு செய்தால் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரும் மற்றவர்களும் கேள்விகளால் மேலும் புண்படுத்துவார்கள், நெஞ்சை ரணமாக்குவார்கள் என்பதாலும் முன்வருவதில்லை. 4. பலருக்கு இந்தக் கொடுமையை உணர்ச்சிபூர்வமாக எதிர்கொள்ளும் திறனோ, பயிற்சியோ இல்லை. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் குற்றவாளியை எதிர்த்து நிற்கும் வலிமை பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்தக் காரணங்களால் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை வெளியில் சொல்லாமல் தங்களுக்குள்ளேயே புழுங்குகின்றனர்.

அமைப்பு ரீதியான குறைபாடுகள்

இந்தியாவில் இப்போதுள்ள சட்டச் சமூகத்தில் அருணாவுக்கு நீதி கிடைத்திருக்காது. பன்வாரி தேவி என்ற சமூகச் சேவகிக்குக் கிடைக்காததைப்போல. தன்னை மேல்சாதி ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தினார்கள் என்று பன்வாரி தேவி புகார் கூறியபோது, மேல் சாதி ஆண்கள் கீழ்ச்சாதி பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டார்களே என்று நீதிமன்றம் கூறிவிட்டது! உலகம் புகழும் கொள்ளைக்காரியாகப் பின்னாளில் அறியப்பட்ட பூலான் தேவிக்கும் 18 வயதில் அதுதான் நடந்தது. மேல்சாதிக்கார ஆண்கள் அவரை வீட்டிலிருந்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 21 நாள்கள் அடைத்துவைத்துப் பாலியல் வல்லுறவு கொண்டனர். இந்தச் செயலைச் செய்தவர்களின் பெஹ்மாய் கிராமத்துக்குத் தன்னுடைய ஆட்களுடன் திரும்பிவந்து மேல்சாதிக்காரர்களில் 22 பேரைப் படுகொலை செய்து பழிதீர்த்துக்கொண்டார் பூலான் தேவி. மகாராஷ்டிரத்தில் போலீஸ் காவலில் இரண்டு காவலர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட மதுரா என்ற இளம் பழங்குடிப் பெண்ணுக்கும் நீதி கிடைக்கவில்லை. பிறருடன் பாலுறவு கொள்வது அந்தப் பெண்ணுக்கு வழக்கம்தான் என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதையே அதைவிட பெரிய நீதிமன்றமும் வழிமொழிந்தது. பாலியல் வல்லுறவைத் தடயவியல் ரீதியாக நிரூபிக்கவில்லை என்பதே பதில். அதை, ‘சம்மதத்தின் பேரில் நடந்ததாகவே’ நீதிமன்றம் கருதியது!

மக்களுக்குத் தெரியாமல் இல்லை

இந்த வழக்குகளின் முடிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. இந்நாட்டு மக்களுக்குப் பாலியல் வல்லுறவு எது என்றோ, அது எப்படி நடக்கிறது என்றோ, யாருக்கு அது நடக்கிறது என்றோ தெரியாமல் இல்லை. இந்தக் கொடுமையைச் செய்கிறவர்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்ற அக்கறை சமுதாயத்துக்கும் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இல்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் புகார் அளித்த பிறகு அவர் சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அலட்சியமே முன் நிற்கிறது. முதலில் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் தரும் புகாரே மாற்றிப் பதிவுசெய்யப்படும். குற்றங்களின் தீவிரம் குறைக்கப்படும். வல்லுறவாகச் சித்தரிக்கப்படாமல் வேறு வகையில் திரிக்கப்படும். காரணம் அதை அவர்களால் எளிதில் செய்துவிட முடியும். பெரும்பாலான டாக்டர்களுக்குப் பாலியல் வல்லுறவை முறையாக அறிந்து, பதிவு செய்யும் பயிற்சி தரப்படுவதில்லை. மிகவும் கொடூரமாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வல்லுறவு கொள்ளப்பட்டால் மட்டுமே அது கணக்கில் கொள்ளப்படுகிறது. எஞ்சியவை சம்மதத்தின் பேரில் நடந்ததாகவோ, நிரூபிக்கப்பட முடியாததாகவோ வகைப்படுத்தப்படுகிறது.

வழக்கில் குற்றஞ்சாட்டத் தடயவியல்பூர்வமான சான்றுகளைத் திரட்டும் சாதனங்கள் டாக்டர்களிடம் கிடையாது. வல்லுறவாளர், பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் சேகரிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் பதிவு செய்யப்படுவதில்லை, புகைப்படம் எடுக்கப்படுவதில்லை.

மரபணு ரீதியாக நிரூபிக்க வழி இருந்தாலும் அந்த ஆதாரங்கள் திரட்டப்படுவதில்லை. இதற்குக் காரணம் தடயவியல் ஆய்வுக்கூட வசதிகள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கிடையாது. இதனாலேயே குற்றஞ்சாட்டப்பட்டும் ‘நிரூபிக்கப்படவில்லை’ என்று கூறிப் பலர் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

அரசுகளின் பொய்யான வாக்குறுதி

அருணாவுக்கு நேர்ந்த கதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் மகளிரைப் பாதுகாப்போம், அவர்களுக்கு அதிகாரமளிப்போம் என்று கூறியே ஆட்சியைப் பிடிக்கின்றன. அதற்குரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்படுவதில்லை. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவியாக நாடு முழுக்க 660 மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதை வெறும் 36 ஆகக் குறைத்து மாநிலத்துக்குத் தலா ஒன்று, மத்திய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்துக்குத் தலா ஒன்று என்று சுருக்கிவிட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடும் ரூ.244.48 கோடியிலிருந்து வெறும் ரூ.18 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

பெண்கள் என்றாலே அலட்சியம்

பெண்கள் என்றாலே அலட்சியமாக நடத்துவது என்ற சமூக முறைமையின் அங்கம்தான் இது. ஆண்கள்தான் உயர்ந்தவர்கள் என்பது மரபணுவிலேயே எழுதப்பட்டுவிட்டது. பெண்களைப் பண்ணை அடிமைகளாக்கி வேலைவாங்கும் பொருளாதாரக் கட்டமைப்பு மாறாதவரை இந்த அலட்சியங்கள் குறையவே குறையாது.

இதை உதறித் தள்ள வேண்டும் என்றால் பெண்களுக்கும் சமூகத்தில் சமப் பங்கும் உரிமைகளும் உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும். அதை மறுக்கும் அல்லது சிதைக்கும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களுக்கும் இது தொடர்பாக மறு கல்வி புகட்டப்பட வேண்டும்.

அரசு எப்போது ஓரடி எடுத்து வைத்தாலும் சமூகம் அதைப் பின்னோக்கி இழுக்கவே பார்க்கிறது. நிர்பயா வழக்கிலும் தருண் தேஜ்பால் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணைத்தான் சமூகம் குற்றம் சாட்டியது. உலக அரங்கில் இந்தியாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தவே பாலியல் வல்லுறவு புகார்கள் கூறப்படுகின்றன என்கின்றனர். பெண்கள் வேண்டுமென்றே பாலியல் புகார் கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இவை எதுவுமே உண்மையில்லை. இந்தியாவில் பாலியல் வன்முறைச் சம்பவங்களை மறைக்கவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்வதைத் தடுக்கவுமே இப்படிப் பேசப்படுகிறது.

(அரசியல் – பொதுக் கொள்கைக்கான ‘தி இந்து’ மையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான வசுந்தரா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பாடப்பிரிவின் ஆய்வு மாணவரும் ஆவார்).

தொடர்புக்கு: vasundhara.sirnate@thehinducentre.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x