Last Updated : 11 May, 2014 10:00 AM

 

Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

சிதறிய ஸ்வாதியின் கனவுகள்!

அவள் இருபத்து மூன்று வயதே நிரம்பிய அப்பாவிப் பெண். குடும்பத்துக்காகத் தனது ஆயிரமாயிரம் ஆசைகளையும் கனவுகளையும் ஏக்கங்களையும் சிறகுகளுக்குள் வைத்து அடைக்காத்துக்கொண்டிருந்தார். சிறகுகளை விரித்துப் பறக்க யத்தனித்த வேளையில், சபிக்கப்பட்ட ஒரு நாளின் காலையில் பயங்கரவாதத்தின் கோர நாக்குகளால் காவு வாங்கப்பட்டார் ஸ்வாதி.

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி பருசூரி, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகேயுள்ள ஜகர்லாமுடியைச் சேர்ந்தவர். அப்பா பருசூரி ராமகிருஷ்ணா, வானம் பார்த்த பூமியில் வாழும் குறுநில விவசாயி. அம்மா காமாட்சி குண்டூரிலுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் பணிபுரிந்துவருகிறார். மகள் ஸ்வாதி, மகன் ப்ரதியூம்னாவின் படிப்புக்காகச் சொந்த கிராமத்தை விட்டு குண்டூரில் குடியேறினார் ராமகிருஷ்ணன்.

சுகத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகத் துக்கம் நிரம்பிய நடுத்தரக் குடும்பம் இவர்களுடையது. வீட்டின் மூத்த மகள் என்பதால் ஸ்வாதி தனது கனவுகளை மட்டுமில்லாமல் பெற்றவர்களின் கனவுகளையும் சேர்த்தே சுமந்தார். ஏனென்றால் கல்வியின் மூலம் மட்டுமே, எளியவர்களும் சமூகத்தில் ஏற்றம் பெற முடியும் என்று ஸ்வாதி உறுதியாக நம்பினார்.

சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த ஸ்வாதி, மேல்நிலைப் படிப்பை குண்டூரில் உள்ள செயின்ட் ஆன் கல்லூரியில் தொடர்ந்தார். இரவும் பகலும் கஷ்டப்பட்டு படித்ததால் பியூசியில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-வது மாணவியாகத் தேர்ச்சியடைந்தார். ஹைதராபாத்தில் உள்ள ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்பில் காலடி எடுத்துவைத்த அவர்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவி அவர்.

நகரத்தின் அவசரக் கோலம், பகட்டு மனிதர்களின் பழக்கவழக்கங்கள், நுனி நாக்கில் விளையாடிய ஆங்கிலம் போன்ற அனைத்தும் ஸ்வாதியை மிரட்டவே செய்தன.

இதனால் கல்லூரியில் சேர்ந்த புதிதில், வீட்டுக்கு போன் செய்து விம்மி விம்மி அவர் அழுவது வழக்கம். ஆனால், குடும்பத்தின் நிலைமையை உணர்ந்துகொண்டு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தார். பொறியியல் கல்லூரிகளின் கட்டணச் சுமைகளை அரசின் ஸ்காலர்ஷிப் மூலம் சமாளித்த ஸ்வாதி, பி.டெக்கில் சிறந்த மாணவியாகத் தேர்வானார். இதனால் எம்.டெக். படிக்கும் வாய்ப்பும் ஸ்வாதிக்குக் கிடைத்தது.

ஆனால், குடும்ப நிலைமை கருதி வேலைக்குப் போக நினைத்த ஸ்வாதி, படிப்பைத் துறக்கத் தயார் ஆனார். காரணம் மும்பை ஐ.ஐ.டியில் படிக்க வாய்ப்புக் கிடைத்த தம்பியின் படிப்புக்கு அதிகப் பணம் செலவாகும் என்பதுதான். அதற்குத் தன்னால் ஆன உதவியை செய்தால், குடும்பம் சற்று இளைப்பாறுமே என்று நினைத்தார். ஆனால், அங்கும் பாசம் வென்றது. ஸ்வாதியின் பாட்டி ராஜ்யலக்ஷ்மி தனது சிறு நிலத்தை விற்று பேரனையும் பேத்தியையும் மீண்டும் கல்லூரியில் சேர்த்தார்.

மீண்டும் ஹைதராபாத்தில் பழைய கல்லூரியிலேயே எம்.டெக். படிப்பை முடித்த அவருக்கு, கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக பெங்களூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை கிடைத்தது. “முன் பின் தெரியாத ஊருக்கு, அதுவும் அவ்வளவு தூரம், வேலைக்குப் போக வேண்டாம். உள்ளூரிலே குறைந்த சம்பளத்தில் வேலை தேடு” எனப் பெற்றோர் சொன்னபோதும், பெரிய நிறுவனத்தில் முதல் வேலை என்பதால் கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருக்கு ரயிலேறினார் ஸ்வாதி.

பெங்களூரில் தனியார் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்ற ஸ்வாதிக்கு, முதல் 3 மாதங்கள் கம்பெனியில் டிரெயினிங் என்பதால் விடுமுறை கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால்கூட அம்மாவைப் பார்க்க உடனே ரயிலேறிவிடுவார். தான் வாங்கிய முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் புடவையும், பாட்டிக்கு 1,700 ரூபாயில் செல்போனும் ஆசையுடன் வாங்கிக்கொடுத்திருக்கிறார். தன்னுடைய ஏ.டி.எம். கார்டைக்கூட அப்பாவிடமே கொடுத்துவிடுவாராம்.

இன்னொரு உலகம்

குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கத்தைக் கொண்ட ஸ்வாதியின் இன்னொரு உலகம் கலைகள் சூழ்ந்தது. பள்ளி நாட்களில் இருந்தே ஸ்வாதிக்குக் கவிதை, ஓவியம், சிற்பம், போட்டோகிராஃபி, புத்தகம், சினிமா எனக் கலைகளின் மீது தீராத காதல். குடும்பத்தைப் பிரிந்து ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் இருந்தபோது வாய்த்த தனிமைப் பொழுதுகளை ரசனையால் நிரப்பிவைத்திருக்கிறார். அவரது டைரிகளின் பக்கங்களெல்லாம் கவிதைகளும், ஓவியங்களும் நிறைந்திருக்கின்றன.

ஸ்வாதி தங்கியிருந்த ராம் சாய் விடுதியின் அறையின் சுவர், அலமாரிக் கதவுகளில் அவருடைய ஓவியங்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவருடைய முகநூல் பக்கங்களில் ஏகாந்தக் காதலைப் பூடகமாகப் பேசும் கவிதைகள் இறைந்து கிடக்கின்றன. ஸ்வாதியின் தோழிகளின் பேச்சிலும், கண்ணீரிலும் அவர் இல்லாமல் போன வெறுமை சூழ்ந்து நிற்கிறது. அவருடைய புகைப்படங்களில் காட்சி தரும் கடல் அலை, மணல் வீடு, பூக்குவியல், மஞ்சள் வானம் எல்லாமே அவருடைய ஆழ்மனதின் ஆசையைப் பிரதிபலிக்கின்றன.

வீட்டில் மெல்ல மெல்ல எடுத்துச் சொல்லி இன்னும் மூன்றே மாதங்களில் தன் கல்லூரித் தோழனைக் கைப்பிடிக்கக் காத்திருந்தார். எதிர்காலம் குறித்து அவருடைய நெஞ்சில் எத்தனை எத்தனை ஆசைகள் பொதிந்திருந்திருக்கும்? தூக்கம் வராத இரவுகளில் எத்தனை கனவுகள் முகிழ்ந்திருக்கும்? எல்லாமே, ஒரே நொடியில் தகர்ந்துவிட்டன.

“பல நூறு கஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு பெண் குழந்தையை வளர்த்து, லட்சக்கணக்கில் கடன் வாங்கி படிக்க வைத்து ஆளாக்கி, வேலைக்காக வெவ்வேறு ஊரில் வாழ்ந்து... எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட அவளுடைய பெற்றோருக்கு இன்றைக்குக் கிடைத்திருப்பது என்ன? யாரோ வைத்த குண்டுடன் வெடித்துச் சிதறுவதற்காகவா ஸ்வாதி இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டாள்?'' என கண்ணீர் கோடிட்ட முகத்துடன் ஸ்வாதியின் தோழி மேக்னா கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x