Published : 17 May 2015 01:45 PM
Last Updated : 17 May 2015 01:45 PM
பரபரவென்று இயங்கும் செயல்திறன். கூர்மையான பேச்சு. உழைக்கும் மகளிரின் அபிலாஷைகளின் அடிமட்ட உணர்வுகள்வரை ஊடுருவிப் பார்த்து அவர்களுக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்யும் பொறுப்புணர்வு எனச் சகலமும் உள்ள பெண்மணியாய்க் காட்சி தரும் உஷா அனந்த சுப்பிரமணியன், பெண்களால் பெண்களுக்கான பொருளாதாரத்தை உருவாக்கப் புறப்பட்டுள்ள பாரதிய மகிளா வங்கியின் சி.எம்.டி. (Chairman cum Managing Director).
கோவையில் பிறந்த இவர், சென்னைப் பல்கலையில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மும்பைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இந்தியன் கல்ச்சர் துறையில் பட்டங்கள் பெற்று, 1982-ம் ஆண்டு எல்.ஐ.சி-யில் முக்கியப் பிரிவில் பணியில் அமர்ந்தார். பாங்க் ஆஃப் பரோடாவில் பிளானிங் கமிஷன் தனி அலுவலராகவும், தமிழகம், பாண்டி, கர்நாடகா, கேரளம், ஆந்திரம் என ஐந்து மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல அதிகாரியாகயும் பணியாற்றினார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராகவும் பதவி வகித்தவர் இவர். பாரதிய மகளிர் வங்கி தொடங்குவதற்கான திட்டக்குழு உறுப்பினராக, அவ்வங்கி தொடங்குவதற்கான முக்கிய ஆலோசனைகள் வழங்கியவராக, வங்கி தொடங்கப்பட்ட பின்னர் அந்த வங்கிக்கே தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நாடு முழுவதும் வலம் வருகிறார்.
ஒரு பெண்ணின் இந்த வெற்றிக்குப் பின்னால் எந்த அளவு அர்ப்பணிப்பும், உழைப்பும், நேர்மையும் குடிகொண்டிருந்திருக்க வேண்டும்? சமீபத்தில் கோவை வந்திருந்த அவர் இங்குள்ள பாரதிய மகிளா வங்கி கிளையில் சுயஉதவிக் குழு பெண்களிடம் வெகு சகஜமாக உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த இடைவெளியில் தனது வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
உஷா
“என் அப்பா பள்ளி ஆசிரியர். அம்மா அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. வீட்டையும் குடும்பத்தையும் கவனிச்சிட்டிருந்தார். ஒரே சகோதரி. அவர் கார்ப்பரேஷன் வங்கியில் பணியில் உள்ளார். எங்க அப்பா எங்களுக்குக் கொடுத்த ஒரே சொத்து படிப்புதான். பொதுவாகப் பெண்களைப் படிக்க வைப்பதே கஷ்டம். அப்படியே படிச்சாலும், பள்ளிப் படிப்போட போதும்னு பெற்றோர்கள் நிறுத்திடுவாங்க. அதிலிருந்து எங்க அப்பா ரொம்பவும் விதிவிலக்கு. எவ்வளவு வேணும்னாலும் படிச்சிக் குங்க. அதுதான் நான் உங்களுக்குக் கொடுக்கிற சொத்து. கல்வியைவிடப் பெரிய சொத்தை என்னால கொடுக்க முடியாதுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லக்கூடியவர்.
அதுதான் எங்களைப் படிப்புல மேலே மேலே போக வச்சது. என் கணவர் மும்பையில் ஒரு கம்பெனியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். நான் புகுந்த வீட்டுக்குப் போனவுடனே என்னிடம் உள்ள திறமைகளை அவங்க புரிஞ்சிகிட்டாங்க. அதிலும் என் மாமனாருக்கு அவர் புள்ளையைவிட என் மேல அபார பிரியம், பாசம்.
நீ மேல, மேல வருவேன்னு சொல்லி ஊக்கப்படுத்திட்டே இருந்தார். ஒரு மீட்டிங், ஒரு டூர் போகும்போதுகூட நீ போம்மா, குழந்தைய நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லுவாங்க. எனக்கு ஒரே மகன். அவன் மும்பையில் ஜர்னலிஸ்ட்டா இருக்கான். அவன் 10-வது படிக்கிற வரைக்குமே அவனைப் பார்த்துகிட்டது என் கணவரோட பாட்டிதான்னா எந்த அளவுக்கு அவங்க தாங்கு சக்தியா இருந்திருக்காங்கன்னு நீங்க புரிஞ்சுக்கலாம். பொண்ணுன்னா முடக்குகிற வேலையைச் செய்யாம இப்படி எல்லா குடும்பத்துலயும் சப்போர்ட் இருந்தா எந்தப் பெண்ணும் முன்னுக்கு வரலாம். ஒவ்வொருத்தருமே ஒவ்வொரு துறையில தலைவரா வரலாம்!” என்று உருகுகிறார்.
“உங்கள் பணியானது இரவு பகல் பாராது இருப்பது. வெளியூர் பயணத்திலும், மீட்டிங் எனப் பரபரப்பது. இந்தச் சூழலில் எப்படிக் குடும்பத்தையும் கவனிக்க முடிகிறது?” என்று கேட்டதற்கு, “எல்லாமே புரிதல்தான்!” என்று புன்னகையுடன் ஆரம்பிக்கிறார். “கல்யாணம், குழந்தை என்ற காலகட்டத்தில் குடும்பம் என்கிற அட்டாச்மெண்ட் முக்கியம். அந்தக் காலகட்டத்தில் நான் ஜூனியர் நிலையில்தான் இருந்தேன். குடும்பம், புரிதல் என்கிற நிலையில் வலுவாக ஊன்றும்போது குடும்ப உறுப்பினர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுகிறது. அது அடுத்த நிலை நோக்கி நகருவதைச் சுலபமாக்கி விடுகிறது. அதுதான் என் வாழ்க்கைக்குப் பலம் சேர்த்துள்ளது. இன்றைக்கு சாட்டிங், வாட்ஸ் ஆப் என நவீன வழிகளில் குடும்ப உறவுகளுடன் பேசிக்கொள்ள முடிகிறது. நேரில் இருந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது விமானத்தில் உடனே குறிப்பிட்ட இடத்திற்குப் போய் நிற்கவும் முடிகிறது. அவருக்கு இந்த நேரத்தில் இந்தப் பணி உள்ளது என்பதை மனைவியும், மனைவிக்கு இந்த நேரத்தில் இன்ன பொறுப்பு என்பதைக் கணவரும், பிள்ளையும் புரிந்துகொள்ளும்போது பொறுப்பு மிக்க பணி என்பது சாத்தியமாகிறது!” என்கிறார் உவகை பொங்க.
“இப்படிப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு ஒரு பெண் வருவது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளதே? உங்களுக்கு இது சாத்திய மானது? அதில் இடையூறுகள் ஏதும் வரவில்லையா?” என்றோம்.
“எப்படியாவது முன்னுக்கு வரணும் என்று துடிக்கிற ரகம் ஒன்று. நம்மிடம் எப்படிப்பட்ட திறமையும், தனித்தன்மையும் இருக்கிறது. அதை எந்த ரீதியில் உழைப்பின் மூலம் வெளிப்படுத்தி முன்னேறுவது என்று நினைக்கிற இன்னொரு ரகம் நம்மில் உண்டு. அதில் இரண்டாவது ரகம் நான்.
ஒரு பெண்ணாக நான் பணிபுரியும்போது ஆணைவிட மேலான திறமையும், அறிவும், ஆற்றலும் கொண்டவள் என்று நிரூபிப்பதைவிட ஆண்களுக்கு எந்த வகையிலும் நான் குறைந்தவளில்லை; சமம் என்பதை நிரூபிப்பதே அவசியமாக இருக்கும். அந்த நிரூபணத்தில் உச்சத்தைத் தொட்டு அங்கீகாரம் பெறும்போது ஒன்றுக்குப் பத்து கண்கள், அதுவும் ஆண்களின் கண்கள் கவனித்து குற்றம் சொல்ல முற்படும். அதை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும்பேது, இவள் எப்போ தப்பு செய்வாள் நாம் சுட்டிக்காட்டிக் குளிர்காயலாம் என்று பார்ப்பது எதிர் மனநிலையினரின் இயல்பு. அதற்காகவே தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காகக் கூடுதல் உழைப்பையும், நேர்மையையும், ஆற்றலையும் செலுத்த வேண்டியுள்ளது. அதன் மூலம் பொறுப்புகள் கூடும்போது அந்தப் பொறுப்புகளுக்கு இணையான பெண்கள் என்பது அபூர்வமாகி ஒரு கட்டத்தில் அவர்களே இல்லாத நிலையாகிறது. அப்போது என்னைக் கவனிக்கிற கண்களும் அதிகமாகி இந்த ஜாக்கிரதையுணர்வு மிகுதியாகிவிடுகிறது. அந்த ஜாக்கிரதையுணர்வு ஆரம்பத்தில் அதீதமாக இருந்து, அதுவே இயல்பானதாக மாறியதில் இந்த உயர்வு சாத்தியமாகியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!” என்று மிகுந்த முதிர்ச்சியுடன் பேசுகிறார் உஷா.
“இந்தக் காலத்தில் பெண்கள் தங்களிடம் அதீத ஆற்றலையும், திறமையையும் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு டி.வி. சீரியல்களிலும், வேறு பல விஷயங்களிலும் கவனம் செலுத்துவது அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. கவனத்தைச் சிதறடிக்கிறது. அவர்கள் அதைக் கடந்து பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்கிற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டவையே மகிளா வங்கிகள். பெரும்பான்மை ஆண்கள் பணம் கிடைத்தால் எங்கே எந்த மதுக்கடை திறந்திருக்கும் என்பதை நாடுவது இயல்பானதாக இருக்கிறது. பெண்கள் அப்படியல்லர். அந்தக் காலத்துப் பாட்டி முதல் இந்தக் காலத்து அம்மாக்கள்வரை சுருக்குப்பை, சீரக, மிளகு, கடுகு டப்பாக்கள் என அவர்கள் பணத்தைச் சேமித்துவந்திருக்கிறார்கள். அவர்கள் எந்த இடத்திலும் இந்தச் சேமிப்பை ஊதாரித்தனமாகச் செலவழித்ததில்லை. தன் குடும்பத்தின் நாளைய உணவுத் தேவைக்கு, தன் பிள்ளைகளின் கல்வி, திருமணச் செலவுகளுக்கு என்று சமூக உறவோடு, பொருளாதாரத்தையும் உயர்த்தி நிற்கிறார்கள். எனவே நம்பிக்கையோடு சேமியுங்கள். சுய தொழில் செய்யுங்கள். வங்கி உங்களுக்குத் தேவையான எல்லாமுமே செய்யும்!” என்று தன்னை நாடி வந்திருந்த சுய உதவிக் குழுப் பெண்களுக்கெல்லாம் அறிவுரை சொல்லித் தன்னம்பிக்கையும் ஊட்டினார்.
பெண்களுக்கு முன்னுதாரணமாகச் சாதனை புரிந்ததுடன் பெண்களை நேரடியாகச் சந்தித்து வழிகாட்டும் உஷா அனந்த சுப்பிரமணியன் உண்மையிலேயே ஆச்சரியமான பெண்மணிதான்.
படங்கள்: ஜெ. மனோகரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT