Published : 17 May 2015 02:02 PM
Last Updated : 17 May 2015 02:02 PM
வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசாப் போவோம்
வாடி வாலாட்டி
வர்றீயா புலியா தனியாத் திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா
உம்பேர மைக்கு செட்டுப் போட்டு உறுமிக்காட்டு...
‘36 வயதினிலே’ படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல், படம் வெளியாவதற்கு முன்பே பட்டிதொட்டி எங்கும் பிரபலம். பாடல் வரிகள் ஒரு பக்கம் என்றால் அந்த வரிகளுக்குத் துள்ளலும் துடிப்புமாக உயிர்கொடுத்திருக்கிறது ஒரு குரல். நம் வீட்டுப் பாட்டியையோ பக்கத்து வீட்டுப் பெரியம்மாவையோ நினைவுபடுத்துவதாலோ என்னவோ, மனதுக்கு அத்தனை நெருக்கமாகிவிடுகிறது அந்தக் குரல். அந்த வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர் லலிதா விஜயகுமார்.
சென்னை சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியை. அதுவரை பள்ளி அளவில் மட்டும் அறியப்பட்டிருந்தவர், இசை வெளியீட்டுக்குப் பிறகு ஏரியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இத்தனைக்கும் லலிதாவின் முதல் திரைப்பாடல் இது. அவரது குரலைப் போலவே பேச்சும் அத்தனை ஆதூரமாக இருக்கிறது.
இசையோடு இணைந்த திருவையாறுதான் லலிதாவின் பூர்விகம். இசையார்வம் உந்தித் தள்ள, சிறு வயதிலேயே முறைப்படி இசையைக் கற்றுக்கொண்டார். சங்கீத சிரோன்மணி பட்டமும் பெற்றிருக்கிறார். இசை பயின்ற லலிதாவுக்கு அவர் விருப்பப்படியே அரசுப் பள்ளியில் இசை ஆசிரியை பணி கிடைத்தது. ஆலங்குடி, கீரனூர் என்று பல பள்ளிகளில் பணியாற்றியவர் தற்போது சென்னைப் பெண்களுக்குப் பாடக் கற்றுத் தருகிறார்.
“எனக்கும் சினிமாவுக்கும் கொஞ்சம்கூடச் சம்பந்தமில்லை. சின்ன வயசுல வீட்ல கர்நாடக இசையைத் தவிர வேறு பாடல்கள் ஒலித்தால் அப்பாவுக்குப் பிடிக்காது” என்று சொல்லும் லலிதா, இதுவரை சபாக்களில் கச்சேரி செய்ததில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீட்டுத் திருமணங்களில் பாடியிருக்கிறார். லலிதாவின் மகன் பிரதீப் குமார், பின்னணிப் பாடகர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இவர்களுடைய குடும்ப நண்பர். அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.
“ ‘ஆன்ட்டியை என் படத்துல பாடச் சொல்லுங்க அங்கிள்’னு சந்தோஷ் ஒரு நாள் என் வீட்டுக்காரர்கிட்டே கேட்டான். நான்கூட முதல்ல விளையாட்டுன்னுதான் நினைச்சேன்” என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார். பள்ளியில் பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்குச் சொந்தமாக மெட்டமைத்து, மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பரதநாட்டியத்துக்கு ஏற்பவும் பாடல்களை மெட்டமைத்திருக்கிறார்.
மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்ததைத் தன் 35 வருட இசை ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறார்.
“என் பாட்டைக் கேட்டுட்டு என்கூட வேலை பார்த்தவங்க, பார்க்கிறவங்க, நண்பர்கள்னு பலரும் பாராட்டினாங்க. என் மருமக கல்யாணியும் பாடகிதான். பேத்திகூட அருமையாப் பாடுவா” என்று சொல்லும் லலிதா, தன் மகன் திரைப்படங்களில் பாடத் தொடங்கியதும், திருமணங்களில் தான் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.
“அம்மாவை மிஞ்சின அறிவோட என் குழந்தை பாடுறப்போ, நான் பாடுறதுக்குக் கூச்சமா இருக்கு” பெருமிதத்துடன் சொல்கிறார் லலிதா விஜயகுமார்.
“மிஸ் எங்களுக்காக ஒருமுறை வாடி ராசாத்தி பாடுங்க மிஸ்” என்று ஆர்வத்துடன் கேட்கிற மாணவிகளுக்காகக் கூச்சமும் தயக்கமும் படர மெதுவாகத் தொடங்கி அழுத் தமாகப் பாடுகிறார் லலிதா. கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள் மாணவிகள்!
படங்கள்: எல். சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT