Published : 03 May 2015 12:50 PM
Last Updated : 03 May 2015 12:50 PM
டெர்ரி இர்வின். இயற்கை ஆர்வலர். சுற்றுச் சூழல், வனவிலங்குகளின் பாதுகாவலர். ஆவணப்பட நடிகை. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். எழுத்தாளர். ஸ்டீவ் இர்வின் உயிரியல் பூங்காவின் தலைவர்.
துணிச்சலோடு முதலைகளிடம் விளையாடி உலகையே கலக்கிய ஆஸ்திரேலியர் ஸ்டீவ் இர்வினின் மனைவி டெர்ரி இர்வின். இவரும் குழந்தைகளும் ஸ்டீவ் இர்வினைப் போலவே துணிச்சலுடன் வனவிலங்குகளைக் காக்கும் பணிகளைச் செய்துவருகிறார்கள்.
இயற்கை ஆர்வம்
டெர்ரி இர்வின் அமெரிக்கர். அவருடைய அப்பா கனரக வாகன ஓட்டுநர். வழியில் அடிபட்டுக் கிடக்கும் விலங்குகளை வீட்டுக்கு எடுத்துவருவார். அவற்றுக்கு சிகிச்சையளித்து, பாதுகாக்கும் பணியைச் சிறிய வயதில் இருந்தே செய்துவந்தார் டெர்ரி. அதனால் விலங்குகளின் மீது அவருக்கு அளவற்ற அன்பு.
வளர்ந்த பிறகு குடும்பத் தொழிலைக் கவனித்து வந்ததோடு, பகுதி நேரமாகக் கால்நடை மருத்துவமனையிலும் வேலை செய்துவந்தார். பியூமா, கரடி, பாப்கேட் போன்ற விலங்குகளின் மறுவாழ்வு மையமும் அங்கே இருந்தது. ஆண்டுக்கு 300 விலங்குகளைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார் டெர்ரி.
1991-ம் ஆண்டு விடுமுறைக்காக ஆஸ்திரேலியா சென்றபோது ஸ்டீவ் இர்வின் இவருக்கு அறிமுகமானார். குவின்ஸ்லாந்தில் இருந்த ஆஸ்திரேலிய விலங்குகள் உயிரியல் பூங்காவை ஸ்டீவ் குடும்பத்தினர் எடுத்து நடத்திவந்தனர். ஸ்டீவிடமிருந்து முதலைகள், பாம்புகள் போன்ற விலங்குகளைக் கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டார் டெர்ரி.
இருவருக்கும் திருமணமான பிறகு ‘Amazing zoo’ என்ற ஆவணப் படத்தில் பங்கேற்றனர். இந்த ஆவணப் படம் ஏராளமானவர்களை ஆஸ்திரேலிய வனவிலங்குகள் பூங்காக்களுக்கு வரச் செய்தது. முதலை, பாம்பு, சுறா, திமிங்கிலம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை வெறும் கைகளால் கையாள்வதுதான் ஸ்டீவ் - டெர்ரி தம்பதியரின் சிறப்பு.
முதலை நேசம்
ஒரு காலத்தில் உலகை ஆட்சி செய்துகொண்டிருந்த டைனோசர்களின் மறு வடிவமாக முதலைகளைப் பார்ப்பதால் டெர்ரியின் குடும்பத்துக்கு முதலைகளின் மீது கூடுதல் பாசம். இயற்கையை மனிதர்கள் புரிந்துகொள்வதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் டெர்ரி குடும்பம் கடினமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது.
ஆபத்தான முதலைகளுடன் விளையாடியதால் ‘முதலை வேட்டைக்காரர்’ என்ற பெயர் ஸ்டீவுக்குக் கிடைத்தது. உண்மையில் ‘முதலைப் பாதுகாவலர்’ என்ற பெயர்தான் கிடைத்திருக்க வேண்டும் என்கிறார் டெர்ரி. பிந்தி, சூ என்ற இரண்டு முதலைகளின் பெயர்களை சேர்த்துத்தான் தன் மகளுக்குச் சூட்டியிருக்கிறார் ஸ்டீவ்.
தொடரும் பயணம்
2006-ம் ஆண்டு ஆபத்தான உயிரினங்கள் பற்றிய ஆவணப் படத்துக்காக ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் கடல் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ஸ்டிங்ரே எனப்படும் ஒருவகை திருக்கையின் வால் ஸ்டீவின் மார்பைக் கிழித்ததால் அவர் இறந்துபோனார்.
“எங்கள் வாழ்க்கையில் அன்பும் காதலும் நிரம்பி வழிந்தன. நாங்கள் புகைப்பதில்லை. மது அருந்துவதில்லை. விலங்குகளைக் கொன்று தயாரிக்கப்படும் எந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை. எங்கள் வேலை ஆபத்தானது என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆனாலும் இந்த வேலை எங்களுக்கு மன நிறைவைத் தருகிறது. அதனால்தான் ஸ்டீவ் இழப்புக்குப் பிறகும் நானும் எங்கள் குழந்தைகளும் இதே பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்” என்கிறார் டெர்ரி.
ஸ்டீவின் மறைவுக்குப் பிறகு தனியாக மகளையும் மகனையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு இவருக்கு வந்தது. அவர்களுடைய ஆஸ்திரேலிய உயிரியியல் பூங்காவைப் பராமரிக்கும் மிகப் பெரிய பொறுப்பும் சேர்ந்துகொண்டது. தனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், டெர்ரி பணிகளைத் தொடர வேண்டும் என்று ஸ்டீவ் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அவருடைய இழப்பை ஈடுகட்ட முடியாது.
அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதே தன் வாழ்க்கையின் அர்த்தம் என உணர்ந்தார் டெர்ரி. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டார். குழந்தைகளின் படிப்பு, பூங்கா பராமரிப்பு எனப் பம்பரமாகச் சுழன்றார். தன்னுடைய குழந்தைகளையும் இந்தப் பணிகளில் ஈடுபட வைத்திருக்கிறார்.
ஆக்கிரமிப்புக்கு எதிராக
தற்போது 16 வயதான பிந்தி சூ, தன் பெற்றோரைப் போல ஆவணப் படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். எழுதுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறார். இதுவரை ஸ்டீவ், டெர்ரி, பிந்தியின் ஆவணப் படங்கள் 300 பகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 142 நாடுகளில் 50 கோடி மக்கள் இவர்களுடைய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்திருக்கிறார்கள்.
1 லட்சத்து 35 ஆயிரம் ஹெக்டேரில் பரந்துவிரிந்திருக்கும் ஸ்டீவ் இர்வின் வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதியை டெர்ரி பராமரித்துவருகிறார். பாக்ஸைட் சுரங்கம் தோண்டும் பணிக்காக, இந்த இடத்தை ஆக்கிரமிக்க இருந்தனர். ஆனால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி, சுரங்கம் அமைக்கும் திட்டத்தைத் தகர்த்துவிட்டார். இவரது வனவிலங்கு உயிரியல் பூங்காவில் 600 பேர் வேலை செய்கிறார்கள். இங்கே வனவிலங்குப் பாதுகாப்பு குறித்துப் பயிற்சிகள், வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
வனவிலங்குச் சுற்றுலாவும் நடைபெறுகிறது. முதலைப் பாதுகாப்பும், முதலை ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. உணவகங்களும் தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும் வனவிலங்குப் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டெர்ரி குடும்பத்தினருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம், உணவருந்தலாம், உரையாடலாம்.
இன்னும் இருக்கிறது
இப்படி ஆஸ்திரேலிய உயிரியியல் பூங்காவை உலகின் முக்கியப் பூங்காவாக மாற்றியிருக்கிறார் டெர்ரி. வனவிலங்குகள் மீதான ஆர்வத்தையும் அக்கறையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
“ஸ்டீவ் உடனான வாழ்க்கை நான் பெற்ற வரம். அவர் மூலம்தான் இயற்கை மீது இத்தனை ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. இந்த வாழ்க்கையையும் பணியையும் நான் மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு விஷயத்தை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் நமது வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கிறது.
வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும் போதெல்லாம் என் குழந்தைகளுக்கு நான் சொல்வது, ‘நெவர் கிவ் அப்’ என்பதைத்தான். பல நேரங்களில் எனக்கு நானே இதைச் சொல்லிக்கொள்கிறேன். இந்த வாழ்க்கை முடிவதற்குள் இன்னும் எத்தனையோ வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது” என்கிறார் டெர்ரி இர்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT